Eyeview Sri Lanka

அபிவிருத்திக்காக SYA கூட்டுச்சேர்கின்றது

Share with your friend

14 மாவட்டங்களைச் சேர்ந்த 280 இளைஞர் யுவதியருக்குத் தமது வாழ்க்கையை மாற்றுகின்ற பயிற்சி வாய்ப்புகளை வழங்கிய சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் (SCORE) இளைஞர் செயற்பாடானது (SYA), இளம் பயிலுனர்கள் தங்களின் பயிற்சிக் காலத்தில் பணியாற்றிய அனைத்துக் கூட்டாளர் நிறுவனங்களிடமிருந்தும் நேர்மறையான பின்னூட்டங்களைப் பெற்றிருக்கின்றது.

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) மூலம்  செயல்படுத்தப்பட்டதும் உலகளாவிய சமூகங்களின் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க (SCORE) செயல்பாட்டின் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (USAID)  நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் SYA ஆனது, 18 முதல்  29 வயது வரையிலான இளைஞர் யுவதியரின் குடியுரிமை விழிப்புணர்வு, தலைமைத்துவத் திறன்கள், சமூக மேம்பாடுகளில் பங்கேற்றல் மற்றும் தீர்மானமெடுக்கும் செயன்முறைகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான 12 மாதகாலத் திட்டமாகும்.

COVID-19 தொற்றுப்பரவலால் ஏற்பட்ட பொதுவான ஸ்திரத்தன்மையின்மைக்கு மத்தியில், பல்வேறு தொழிற்துறைகளில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் திறமையான, சுய ஊக்கம் கொண்ட இளைஞர் யுவதியரைத் தங்கள் அலுவலகங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது கணிசமான இடையூறுகளை எதிர்கொண்டன. இருப்பினும், IYAP இன் எதிர்காலத்தைப் பற்றிய முன்னோக்கிய சிந்தனை முயற்சியின் பலனாக, இந்த நிறுவனங்களிற்குத் திறமையான விண்ணப்பதாரர்களைப் பணியமர்த்தவும் அவர்களைப் பயிலுனர்களாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. 280 இளைஞர் யுவதியர் பொறியியல் நிறுவனங்கள், பிரதேச செயலகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி நிலையங்கள், அங்கவீனமுற்றோர் அமைப்புக்கள், சமுர்த்தி வங்கிகள் போன்ற பல்வேறுபட்ட பணி வழங்கும் நிறுவனங்களில் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். அவர்களின் பயிற்சிக் காலம் முழுவதும், பயிலுனர்களுக்கான வழக்கமான வேலை வாரமானது பணி வழங்கும் நிறுவனங்களில் 4 நாட்களாகவும்  உரிய மாவட்டத்தில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு பயிற்சி மற்றும் கலந்துரையாடல் என்பவற்றை கொண்டதாக  அமையப்பெற்றது. இதன் மூலம் அவர்களுக்கு அவர்களின் வாரத்திற்கான செயற்றிறனையும் முக்கிய கற்றல்களையும் மீட்டிக்கொள்வதற்கும், தேவைகளையும் சவால்களையும் அடையாளம் காண்பதற்கும், தங்கள் அனுபவங்களை ஏனையோருடன் கலந்துரையாடவும் பகிர்ந்து கொள்ளவும் இயலுமானது. பயிலுனர்கள் தங்கள் திறன்களை உபயோகமான முறையில் பயன்படுத்துகின்ற அதே வேளை, ​​அவர்களின் பணியிலிருந்து அதிக அறிவையும் அனுபவத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக IYAP ஆனது அனைத்துப் பணி வழங்கும் நிறுவனங்களுடனும் நெருக்கமாக ஒத்துழைத்தது.

இத்திட்டத்தைப் பற்றிய புரிதல் மற்றும் கருத்துக்களை  வழங்குமாறு பணி வழங்கும் நிறுவனங்களிடம் வினவிய போது, ​​அவை நேர்மறையான மதிப்புரைகளை வழங்கியதோடு எதிர்காலத்தில் இத்திட்டம் வெற்றிகரமாகத் தொடர்வதைத் தாம் விரும்புவதாகவும் தெரிவித்தன.. ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அஜித் வசந்த லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “சிறப்புச் செயற்றிட்டமொன்றை நிறைவேற்றுவதில் பங்களிப்பதற்கு IYAP இலிருந்து பயிலுனர்கள் இருவரைப் பெறுவதற்கு நாங்கள் பாக்கியம் பெற்றோம். அவர்கள் பூரண ஆதரவை வழங்குபவர்களாகவும், இடத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், எமது தேவைகளுக்கிணங்க சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்பவர்களாகவும்  இருந்தனர். IYAP இன் இந்நற்பணியை நாங்கள் மிகவும் பாராட்டுவதோடு  எந்தவொரு நிறுவனத்திற்கும் முழுநேரப் பணியாளர்களாக அவர்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்கு பயிற்சி பெற்ற பயிலுனர்களைத் தொழில்முனைவோருடன் அமர்த்துவதானது இந்த முக்கியமான நேரத்தில் SMEகளை ஆதரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருப்பதுடன் அதனை உணர்ந்து IYAP ஆனது மிகப்பெரும் நற்பணியைச் செய்திருக்கின்றது. ஒரு பணி வழங்கும் நிறுவனமாக, எங்களைப் போன்ற நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்காக IYAP ஐ நாங்கள் முற்றிலும் பாராட்டுகிறோம், மேலும் பயிலுனர்களின் ஆதரவுடன் எங்களின் சிறப்புச் செயற்றிட்டப் பணிகளை விரைவுபடுத்தி, குறித்த கால வரையறையில் அதனை பூரணமாக செய்து முடிக்கவும் இயலுமாக இருந்தது.”

ஷாலினி பாலசிங்கம் – யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் திட்ட முகாமையாளர் தெரிவிக்கையில், “COVID-19 தொற்றுப்பரவல் காரணமாக இளைஞர் யுவதியர் வேலை வாய்ப்பு அல்லது கற்கை வாய்ப்புகள் அற்று  வீட்டில் முடங்கிக் கிடந்ததால் அனைத்தையும் இழந்தவர்களைப் போன்று காணப்பட்டனர். இந்தப் பயிற்சித் திட்டமானது பல்வேறு நிறுவனங்களில் அறிவு மற்றும் அனுபவம் என்பவற்றைப் பெறுவதற்கு வழிவகுத்து அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளித்ததுடன் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது. பயிலுனர்களில் பலர் தங்களின் பயிற்சிப் பணியை நிறைவு செய்த பிறகு நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதற்காக ஊதியம் பெறாத தன்னார்வலர்களாகப் பணியைத் தொடர்வதற்கு மீண்டும் இணைந்தனர் . இது இந்த இளைஞர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மறையான மனநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் அவர்கள் தங்கள் சமூகங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்பதையும் எடுத்து காட்டுகின்றது.”

டாக்டர் பி.வி.எஸ். சிராந்திகா விதான – சுகாதார அமைச்சகத்தின் குடும்ப சுகாதார பணியக சமூக ஆலோசக மருத்துவர்-தேசிய திட்ட மேலாளர் (இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர் ஆரோக்கியம்) கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டில் IYAP இன் SYA திட்டத்தால் ஆதரிக்கப்படும் இளைஞர் பயிற்சியை நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திட்டம் இலங்கை இளைஞர் யுவதியருக்கு அவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. சுகாதாரப் பராமரிப்புத் துறையானது எந்தவொரு நாட்டிலும் இன்றியமையாத பகுதியாகும், மேலும் இந்தப் பயிலுனர்கள் ஆர்வத்துடன் தங்கள் கடமைகளைச் செய்து அனைத்து அறிவையும் உள்வாங்குவதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்தச் சிறந்த முன்முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன், மேலும் வரும் ஆண்டுகளில் இந்தச்  செயல்முறையின் மூலம் IYAP ஆனது அவர்களின் நல்ல பணியைத் தொடர வேண்டுமென நான் விரும்புகிறேன்.”

2013 இல் ஸ்தாபிக்கப்பட்டுக் கொழும்பைத் தளமாகக் கொண்ட சர்வதேச இளைஞர் கூட்டமைப்பு (IYAP) என்பது இளைஞர்கள் தலைமையிலான/அடிப்படையிலான அமைப்பாகும், இது இளைஞர்களின் சக்தியையும் அவர்கள் அந்தந்த சமூகங்களிற்கும் நாட்டிற்கும் ஆற்றுகின்ற பங்களிப்பையும் நம்பியிருக்கின்றது.


Share with your friend
Exit mobile version