இருநாள் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளுடன் இலங்கையில் பொதுநலவாய இணைப்புகள் நிகழ்ச்சியை பிரிட்டிஷ் கவுன்சில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது

Home » இருநாள் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளுடன் இலங்கையில் பொதுநலவாய இணைப்புகள் நிகழ்ச்சியை பிரிட்டிஷ் கவுன்சில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது
Share with your friend

இரு நாள் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளுடன் இலங்கையில் பொதுநலவாய இணைப்புகள் நிகழ்ச்சியை பிரிட்டிஷ் கவுன்சில் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்தது. 2022 ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் பேராதனை, கன்னோருவ, ரண்பிம றோயல் கல்லூரியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன், இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இலங்கையின் பிரத்தியேகமான கலாசார அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்ததுடன், ஒரு வருடமாக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வின் பூர்த்தியை குறிப்பதாகவும் அமைந்திருந்தது.

கண்டி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆங்கிலம்) தீப்திகா பிரியதர்ஷனி உரையாற்றகின்றார்.

பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளின், பேர்மிங்ஹம் ஏற்பாட்டுக் குழு ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த பொதுநலவாய இணைப்புகள், இளம் தலைமுறையினர் மத்தியில் அர்த்தமுள்ள வகையில் விளையாட்டு, கலை, குடியுரிமை மற்றும் கலாசார பிணைப்புகளை பகிரப்பட்ட பொதுநலவாயப் பெறுமதிகளுடன் ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இதனை எய்துவதற்கு, வெஸ்ட் மிட்லன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த 60 பாடசாலைகள், கரீபியன், உப-சஹாரா ஆபிரிக்கா மற்றும் தெற்காசியா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த பாடசாலைகளுடன் கைகோர்த்திருந்தன.

காட்சியமைப்புக் கலைஞர் சந்தன சமரகோன் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையிலிருந்து ஆறு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பமுனுவ ஆரம்ப பாடசாலை, ஹேமமாலி பெண்கள் கல்லூரி, ரண்பிம றோயல் கல்லூரி, கொடகல்லொளுவ ஸ்ரீ ஜினாரத்ன கனிஷ்ட வித்தியாலயம், சென் சில்வெஸ்டர் கல்லூரி (கனிஷ்ட) மற்றும் பதி-உத்-தின் மஹ்முத் பெண்கள் கல்லூரி ஆகியன அடங்கியிருந்தன. இந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2021 ஜுலை மாதம் முதல் ஈடுபாட்டுடனான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்திருந்ததுடன், ஜனவரி மாதத்தில் Queen’s Baton அஞ்சல் ஓட்டம், பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற பொதுநலவாய இணைப்புகள் ஊடக அறிமுகம், மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய இராஜ்ஜிய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பு மற்றும் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கலை மற்றும் விளையாட்டு நிகழ்விலும் பங்கேற்க முடிந்தது. நிகழ்ச்சியின் போது, சகல செயற்பாடுகளும், திட்டங்களும், விளக்கமளிப்புகளும் நேரலையாக காண்பிக்கப்பட்டதுடன், இலங்கையின் மாணவர்களுக்கும், பேர்மிங்ஹமில் அமைந்துள்ள அவர்களின் பங்காளர் பாடசாலைக்குமிடையே சிந்தனைப் பகிர்வு, கலாசார செயற்பாடுகளில் பங்கேற்பு மற்றும் ஒருவருக்கொருவருடன் ஈடுபாட்டை பேணும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

தெனுவர கல்வி வலயத்தின் ஆங்கில மொழி ஆலோசகர் கே ஜி மெனுக கமகே விளையாட்டு நிகழ்வில் தமது உரையை நிகழ்த்துகின்றார்.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி இடம்பெற்ற கலை நிகழ்வின் போது, இலங்கை மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமது கலைத் திட்டங்களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கை மாணவர்களின் கலையம்சங்களில், பாரம்பரிய கண்டிய நடன நிகழ்வுகள் அடங்கியிருந்ததுடன், தமது பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளான பௌத்த விகாரைகள், சரணாலயங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஓவியங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதற்கு பதிலாக, டட்லியைச் சேர்ந்த மாணவர்கள், தமது மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட நெதர்டன் கப்பலின் நங்கூரம் – டைட்டானிக் நங்கூரத்தை போன்ற தோற்ற அமைப்பைக் கொண்ட நங்கூரத்தை வடிவமைத்துக் காண்பித்திருந்தனர். 

ஆகஸ்ட் 11 ஆம் திகதி இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் போது, பொதுநலவாய இணைப்புகளின் இலங்கையைச் சேர்ந்த பாடசாலைகளினால், ஆங்கில நண்பர்களுக்கு “எல்லே” விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு, எவ்வாறு விளையாட வேண்டும் என்பது பற்றிய வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன பகிரப்பட்டிருந்தன. மேலும், இலங்கையில் தமிழ், சிங்கள புத்தாண்டுகாலப்பகுதியில் விளையாடப்படும் அங்கம்பொர (பழங்கால மல்யுத்த விளையாட்டு) விளையாட்டும் டட்லி பாடசாலைகளுக்கு விளக்கப்பட்டிருந்தன.

பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான பணிப்பாளர் மார்யா ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில், “பொதுநலவாய இணைப்புகளினூடாக சர்வதேச பங்காண்மைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கையின் கண்டியைச் சேர்ந்த ஆறு பாடசாலைகள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் (வெஸ்ட் மிட்லன்ட்ஸ்) டட்லி ஆகியவற்றுக்கிடையே பங்காண்மைகள் மற்றும் கைகோர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தன. இதனூடாக, கலை, விளையாட்டு மற்றும் குடியுரிமை தொடர்பில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனூடாக இளம் தலைமுறையினருக்கு பொதுநலவாயம் மற்றும் அதன் பகிரப்பட்ட பெறுமதிகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. பன்முகத்தன்மையின் பெறுமதி, பாலின சமத்துவம், மாறுபட்ட உலக நோக்குகள் மற்றும் ஒருவரை ஒருவர் மதிப்பளிப்பது தொடர்பில் அவர்கள் பயின்றனர். குறிப்பாக, நிகழ்வின் கலை அங்கமானது, திறவுகோலாக அமைந்திருந்ததுடன், ஆக்கத்திறனை மேம்படுத்தி மற்றும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது. அத்துடன், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்திருந்தது. பாலின சமத்துவம் தொடர்பான தொனிப்பொருளை வலியுறுத்துவதாக விளையாட்டு அம்சம் அமைந்திருந்தது. ஒன்றிணைந்த செயற்பாட்டின் வலிமை மற்றும் நல்லுறவுடனான நம்பிக்கையையும் ஊக்குவித்திருந்தது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையைச் சேர்ந்த பங்குபற்றும் பாடசாலைகளின் இளம் மாணவர்கள், இந்த நிகழ்ச்சியினூடாக, பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்ததையிட்டு மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டிருந்தனர்.” என்றார்.

ரண்பிம றோயல் கல்லூரியின் பிரிவுத் தலைமை அதிகாரி திருமதி. யமுனா ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைப் பிரிவில் ஆறு பாடசாலைகள் காணப்பட்டன. இவற்றில் நகர்புற மற்றும் கிராமிய பாடசாலைகளும் அடங்கியிருந்தன. மாணவர்களுக்கு இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பி, நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாயப்புக் கிடைத்திருந்தது. பொதுநலவாய பெறுமதிகள் தொடர்பில் மாணவர்கள் அறிந்து கொண்டு, செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது அவற்றை பிரயோகித்திருந்தனர். குறிப்பாக, சூழல், மதிப்பளிப்பு, பாலின சமத்துவம் போன்றவற்றை பாதுகாப்பதில் பின்பற்றியிருந்தனர். எதிர்காலத்திலும் அவர்கள் இந்தப் பெறுமதிகளைப் பின்பற்றுவதுடன், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருப்பார்கள்.” என்றார்.

கொடகல்லொளுவ ஸ்ரீ ஜனாரத்ன கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான ஐ.பி. பியுமி மதுஷிகா கருத்துத் தெரிவிக்கையில், “பொதுநலவாய இணைப்புகளில் ஈடுபாட்டைப் பேணுவது என்பது எனது வாழ்க்கையில் கிடைத்திருந்த சிறந்த அனுபவமாகும். உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம் பற்றி அறிந்து கொள்ள எனக்கு உதவியாக அமைந்திருந்தது. பொதுநலவாயம் பற்றி அறிந்து கொண்டு, வாழ்க்கைக்கான திறன்கள் தொடர்பில் எனது அறிவை நான் விருத்தி செய்திருந்ததுடன், எனது தன்னம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொள்ளவும் முடிந்தது. இந்த நிகழ்வினூடாக ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த பங்காளர் பாடசாலையான தோர்ன்ஸ் கொலேஜியேட் அகடமியுடன் இணைந்து செயலாற்றவும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றுக்கு மதிப்பளிக்கவும் நான் பயின்றேன். எமது பாடசாலையைத் தெரிவு செய்தமைக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.


Share with your friend

Leave a Reply

%d