தனது 40 வருட கால சேவைப் பயணத்தின் போது, இலங்கை SOS சிறுவர் கிராமங்களினால், இலங்கை சமூகத்துக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் 12,000 நேரடி அனுகூலம் பெறுவோரும், 50,000 க்கும் அதிகமானவர்கள் பல்வேறு சமூகத் திட்டங்களினூடாக நேர்த்தியான அனுகூலங்களையும் பெற்றுள்ளனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை குறிக்கும் வகையில், SOS சிறுவர் கிராமங்களினால் அண்மையில் 40 ஆவது வருட பூர்த்தி கொண்டாட்டங்கள், பிலியந்தலையிலுள்ள SOS சிறுவர் கிராமத்தின் தேசிய பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஞாபகார்த்த தபால் முத்திரை வெளியிடப்பட்டிருந்ததுடன், விசேட முதல்-நாள் மேலுறையும் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியுடன், இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் பணிப்பாளர் சபையின் தலைவர் நந்தசிறி பொன்னம்பெரும, இலங்கை தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரட்ன, SOS சிறப்பு தூதுவர் ரொஷான் மஹாநாம, SOS சிறுவர் கிராமத்தின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை ஆகியோருடன், SOS சிறுவர் கிராமத்தின் இதர அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
SOS சிறுவர் கிராமத்தின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த நாம், எமது 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த தபால் முத்திரையை வெளியிடுவதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். இந்த விசேட ஏற்பாட்டுக்காக தபால் திணைக்களம் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோருக்கு விசேடமாக நன்றி தெரிவிக்கின்றோம். ஒவ்வொரு பிள்ளையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது என்பதுடன், அன்பு, மதிப்பு மற்றும் பாதுகாப்பாக வளர வேண்டும் எனும் நோக்குடன் SOS சிறுவர் கிராமம் நிறுவப்பட்டது. இந்த சர்வதேச குறிக்கோளை பொறுப்புடன் எம்மால் நிறைவேற்ற முடிந்ததுடன், இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கவும் முடிந்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் எமது 6 சிறுவர் கிராமங்களையும் சகல SOS தாய்மார், ஆதரவு ஊழியர்கள், கிராமத்தின் பணிப்பாளர்கள் மற்றும் சகல பங்காளர்கள் என அனைவரும், எமது தேசத்தின் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் காண்பிக்கும் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
ஞாபகார்த்த தபால் முத்திரை மற்றும் விசேட முதல்-நாள் மேலுறை
தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரட்ன, இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஞாபகார்த்த தபால் முத்திரையை அறிமுகம் செய்வதுடன், தபால் திணைக்களத்தின் விசேட முதல்-நாள் மேலுறையையும் அறிமுகம் செய்கின்றார்.
விசேட ஞாபகார்த்த முத்திரையில் இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் 40 வருடபூர்த்தி இலச்சினை அடங்கியிருப்பதுடன், SOS சிறுவர் கிராமத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இலச்சினைகளும் அடங்கியுள்ளன. இவற்றில் சிறுவர்களுக்கு கல்வியறிவூட்டல், குடும்பப் பராமரிப்பு, சகோதரர்களுடன் வளர்தல், சமூகத்துக்கு உரித்துடையவர்களாக திகழ்தல் மற்றும் மிகவும் முக்கியமாக ஒரு தாயின் பராமரிப்பில் வளர்தல் போன்றன அடங்குகின்றன.
நினைவு புத்தகம் – JOY அறிமுகம்
புகைப்படங்களுடனான நினைவு புத்தகம் ‘JOY’ (நம் இளைஞர்களின் பயணம்) என்பது SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களைப் பற்றியதாகும். வாழ்க்கையில் தடைகளுக்கு முகங்கொடுத்து, கௌரவமான, சுயாதீனமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை முன்னெடுக்க முடிந்துள்ளதையும், அவர்கள் எய்திய சாதனைகளையும் குறிக்கின்றன. SOS சிறுவர் கிராமத்தில் வழங்கப்படும் குடும்ப பராமரிப்பின் தரத்தின் வித்தியாசங்கள் ‘JOY’ இனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விசேட விருதுகள் வழங்கல்
விளையாட்டு மற்றும் கல்விச் செயற்பாடுகளில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சிறப்பாக செயலாற்றியிருந்த முன்னாள் SOS பாதுகாப்பில் வளர்ந்த சிறுவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
25 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த SOS ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், விசேட நினைவுச் சுவடுகள் வழங்கப்பட்டிருந்தன.