Eyeview Sri Lanka

ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துக்காட்டிய 2024 Huawei தெற்காசியா விநியோகஸ்தர் மாநாடு

Share with your friend

2024 Huawei இன் தெற்காசிய விநியோகஸ்தர் மாநாடானது, கடந்த நவம்பர் 29 ஆம் திகதி, ITC ரத்னதீப ஹோட்டலில் இடம்பெற்றது. இம்மாநாடானது, ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பிராந்தியத்தில் உள்ள கூட்டாளர்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய பங்காளர்களை ஒன்றிணைத்தது.

எதிர்வரும் ஆண்டுகளில் Huawei இன் மூலோபாய தூரநோக்கைப் பகிர்ந்து கொள்ளவும், வேகமாக வளர்ந்து வரும் ICT துறையிலான நுண்ணறிவுகளை வழங்கவும், தெற்காசியாவில் தனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பங்காளிகளின் பங்களிப்பை கௌரவிக்கவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக அமைந்தது.

பரஸ்பர வளர்ச்சியை மையமாகக் கொண்ட இந்த மாநாடானது 5G, AI, cloud computing, digital power உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சியடைந்து வரும் வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

2024 Huawei தெற்காசிய விநியோகஸ்தர் மாநாட்டில் பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 140 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த Huawei பங்குதாரர்கள்

“ஒன்றிணைந்து ஒத்துழைத்தல், ஒன்றாக வெற்றி பெறுதல்” எனும் எண்ணக்கருவில் இடம்பெற்ற இந்த மாநாடானது, Huawei மற்றும் அதன் கூட்டாளர்களுக்கு இடையே வணிக பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தியது. 5G, AI, cloud computing, digital power போன்ற வளர்ச்சியடைந்து வரும் துறைகளிலான எதிர்கால வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரஸ்பர வளர்ச்சியின் முக்கியத்துவத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

Huawei நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாக Smart South Asia Strategy இன் வெளியீட்டை Huawei தெற்காசியத் தலைவர் Pan Junfeng தனது ஆரம்ப உரையில் எடுத்துக் கூறினார்.

அவர் இங்கு தெரிவிக்கையில், “ஸ்மார்ட் தெற்காசிய உத்தி (Smart South Asia Strategy) மூலம், அடுத்த தசாப்தத்தில் முன்னணியில் உள்ள மூலோபாய மையத்தில் Huawei தன்னை நிலைநிறுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் எமது வணிகம் வேகமாக வளர்ச்சியடைகின்ற வலையமைப்பு சேவைகள், அரச மற்றும் நிறுவனத் தீர்வுகள், கிளவுட் சேவைகள், டிஜிட்டல் சக்தி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த செயற்பாடுகள் பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மாலைதீவு, பூட்டான் ஆகிய ஐந்து நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.” என்றார்.

தமது விநியோகஸ்தர்களிடம் Huawei இன் அர்ப்பணிப்பை Junfeng இங்கு சுட்டிக்காட்டினார். ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வெற்றியின் முக்கியத்துவத்தை அவர் இங்கு வலியுறுத்தினார். “மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை நாம் வழங்குவதால், அதிக வாய்ப்புகளை நாம் தொடர்ச்சியா தேடுவது அவசியமாகும்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Huawei Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி Zhang Jinze தனது வரவேற்பு உரையில், Dialog, Airtel வலையமைப்புகளின் இணைப்பின் முக்கியத்துவத்தையும், அடையப்பட்ட முக்கிய மைல்கற்களையும் சுட்டிக் காட்டினார்.

அவர் தெரிவிக்கையில், “இவ்வருடத்தில் ஒன்றிணைந்து நாம் பல முக்கியமான மைல்கற்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். Dialog, Airtel வலையமைப்புகளின் இணைப்பு வெறும் 100 நாட்களில் நிறைவு செய்யப்பட்டது. இது சிறிய சாதனையல்ல. இதற்கு குழுப்பணி, நிபுணத்துவம், வெற்றிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியன அவசியமாகும். ஒத்துழைப்பு, கவனம், உறுதிப்பாடு ஆகியன அனைத்து தரப்பினருக்குமான வெற்றிக்கான சூழ்நிலையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கு இந்த திட்டம் ஒரு எடுத்துக்காட்டாகும்.” என்றார்.

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்து நம்பிக்கையை வெளியிட்ட Jinze, டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவது உண்மையிலேயே வரவேற்புக்குரியது என்றார்.

“அரசாங்கத்தின் தற்போதைய டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் உற்சாகமான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வளர்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துகின்றன. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு பயனளிக்கிறது. இது ஒரு திறந்த மற்றும் ஆற்றல்மிக்க சூழல் என்பதோடு, அது கொண்டு வரும் புதிய யோசனைகளை நாம் வரவேற்கிறோம். அதற்கு இணங்க, தொலைத்தொடர்பு சாதனங்கள், நிர்வகிக்கப்பட்ட சேவைகள், புதிய தரவு மைய திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகள், 2025 ஆம் ஆண்டிற்கான எமது திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன். உங்களது தொடர்ச்சியான ஆதரவுடன், எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் தீர்வுகளை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். அத்துடன், இலங்கை மற்றும் அதற்கு அப்பால் மேலும் இணைக்கப்பட்ட, நெகிழ்ச்சியான எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் உதவ முடியும்.” என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதை இலக்காகக் கொண்ட ICTA மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை, விருந்தினர் பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) இணை பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சசீந்திர சமரரத்ன பகிர்ந்து கொண்டார். டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு தொழில் வல்லுநர்கள் மற்றும் அமைச்சுகள் ஆகிய இரு தரப்பும் இணைந்து செயலாற்றி வருவதால், இலங்கைக்கு இது ஒரு முக்கிய தருணம் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) இணை பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சசீந்திர சமரரத்ன தனது உரையாற்றும் போது…

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதில் ICTA முக்கிய பங்கு வகித்துள்ளது. பிரத்தியேகமான பிரதியமைச்சர் மற்றும் அமைச்சுகள் நிறுவப்பட்டதன் மூலம், இந்த தொலைநோக்கைத் ஆரம்பித்தல், செயற்படுத்துதல், நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கான வலுவான நிலையில் நாம் இப்போது உள்ளோம். இவ்வேளையில் இதற்காக நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இந்த பயணத்திற்கு முதல் நாள் முதல் அரசாங்கத்துடன் இணைந்து Huawei பங்களித்து வருகிறது என்பதை நான் கூற விரும்புகிறேன்.” என்றார்.

சசீந்திர சமரரத்ன இலங்கையின் ICT துறைக்கான தொலைநோக்கு பார்வையை இங்கு முன்வைத்ததோடு, 2030ஆம் ஆண்டிற்கான அவர்களது இலட்சிய இலக்குகளை முன்னிலைப்படுத்தினார். IT துறையில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியின் எதிர்பார்ப்பை அவர் இங்கு சுட்டிக் காட்டினார். இது தற்போதைய 1.2 பில்லியனில் இருந்து கணிசமான அதிகரிப்பாக விளங்குவதோடு, நான்கு மடங்கு வளர்ச்சியைக் குறிக்கிறது. இதனுடன் இணைந்தவாறு, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற நிபுணர்களின் எண்ணிக்கை 17,500 இலிருந்து 27,000 ஆக அதிகரிப்பதன் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 85,000 இலிருந்து 200,000 ஆக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

“இந்த முன்னோக்கிய திட்டங்கள், நிலைபேறான வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தெளிவான பாதை வரைபடத்துடன், வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை காட்டுகின்றன. இந்த பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் Huawei இன் முக்கிய திட்டங்களின் சுருக்கம் தொடர்பில் Huawei தெற்காசியா Delivery and Service பிரதித் தலைவர் Zhu Haojin இனால் இந்த மாநாட்டில் எடுத்துக் கூறப்பட்டது.

2024 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் Huawei இன் முக்கிய திட்டங்களின் சாராம்சத்தை Huawei தெற்காசியா Delivery and Service பிரதித் தலைவர் Zhu Haojin விளக்கும் போது…

தரம், பாதுகாப்பு, சூழல் தரங்கள் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அவர் இங்கு வலியுறுத்தினார். அத்துடன் 2025 ஆம் ஆண்டிற்கான முக்கிய திட்டங்களின் மேலோட்டத்தையும் அவர் இங்கு குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட சில திட்டங்களில் Dialog 5G மற்றும் தரவு மையத் திட்டங்கள், Mobitel 5G ஆரம்ப வெளியீடு உள்ளிட்ட பிராந்தியம் முழுவதுமான பல்வேறு வலையமைப்புகளின் மேம்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் அடங்குகின்றன.

தெற்காசியாவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலான ஒத்துழைப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவாறு இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


Share with your friend
Exit mobile version