சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் தனது சிரேஷ்ட முகாமைத்துவ மட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் கொழும்பு பங்குச் சந்தையில் பெரும் அளவிலான முதலீடுகளைக் கொண்டுள்ள எஸ்.என். செந்தில்வேள் அவர்களை தனது பணிப்பாளர் சபையில் நிறைவேற்று அதிகாரம் அற்ற, சுயாதீனமல்லாத ஒரு பணிப்பாளராக நியமித்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் மிகவும் தீவிரமான முதலீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள செந்தில்வேள் அவர்கள் அவுஸ்திரேலியாவின் தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். 18 வருடங்களுக்கு மேலான வர்த்தகத் துறை அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் அதற்கு முன்னர் பான் ஏசியா பவர் பீஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும், டொலர் கோர்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
செந்தில்வேள் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தில் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டு, இந்த சமூக நிறுவனத்தில் மூன்றாவது பாரிய பங்குதாரராக மாறியுள்ள நிலையில், செந்தில்வேள் அவர்கள் பணிப்பாளர் சபையில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள மிகவும் வலுவான சமூக நிறுவனங்களில் ஒன்றான சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம், நாடெங்கிலுமுள்ள கிராம அடிப்படையிலான மற்றும் கிராமப்புற தொழில் முயற்சியாளர்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றது. சர்வோதய இயக்கம் நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில், 175,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தளத்துடன் மிகவும் பெயர்பெற்று விளங்குகின்றது.