எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழல் மற்றும் இலங்கையின் வளமான பாரம்பரியத்தை பாதுகாப்பது என்ற தனது தேசிய நோக்கத்தில் அர்ப்பணிப்புடன் உள்ள CBL சமபோஷ, சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற தாக்கம் மற்றும் மனிதத் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சுரகிமு கங்கா’ தேசிய திட்டத்தை முன்னெடுப்பதில் சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் கூட்டான்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மாணிக்க கங்கை ஆற்றங் கரையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்களிப்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘சுரகிமு கங்கா’ தேசிய திட்டத்தின் உரு உப முயற்சியாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு புனித ஸ்தலங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை வினைத்திறன் மிக்க முறையில் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு நட்பான பைகளை சமபோஷ அறிமுகப்படுத்தியது. நெருக்கடி நிறைந்த ஸ்தலங்களை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் அற்ற இடங்களாகப் பேணும் நோக்கில் சூழலுக்கு நட்பான இந்தப் பைகள் புனித ஸ்தலங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழலுக்கு நட்பான இந்தப் பைகளை பொது மக்களுக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வு பொரலஸ்கமுவ பில்லவ போதிராஜ மஹாவிகாரையில், கௌரவ சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. சுற்றுச்சூழலுக்கு நட்பான பைகளை CBL இன் குழுமப் பணிப்பாளர் நிஷ்க விக்ரமசிங்ஹ, CBL உணவு கொத்தனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலங்க.டி சொய்ஸா, CBL உணவு கொத்தனியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஜயங்க பெரேரா ஆகியோர் வழங்கினர்.
இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகையில், ‘கதிர்காம புனித ஸ்தலத்தில் ஒவ்வொரு வருடமும் 50 தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்தப் புனித ஸ்தலத்தை சுற்றியுள்ள கடைகளில் கணிசமானளவு பொலித்தீன் கழிவுகள் உருவாக்கப்படுவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது’ என்றார். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு நட்பான இந்தப் பைகள் சிறந்த மாற்றீடாக அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் நீண்டகால பசுமை நோக்கம் தொடர்பில் சுற்றுச்சூழலுக்கு நட்பான மற்றும், மக்களை அமையாகக் கொண்ட வணிக அணுகுமுறைகளின் மூலோபாயத் தாக்கம் குறித்து சுட்டிக்காட்டிய CBL குழும உணவுக் கொத்தணியின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஜயங்க பெரேரா குறிப்பிடுகையில், “இலங்கையின் எதிர்கால சந்ததிக்கு ஊட்டச்சத்து மற்றும் சிறந்த பெறுமதியுடன் ஊட்டமளிக்கும் அதேநேரம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் சமபோஷ உதியாகவுள்ளது. சிறந்த பெறுமதியைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கிய அம்சமாக அமைகிறது. நாட்டுக்காகவும், உலகத்துக்காகவும் மேற்கொள்ளக்கூடிய இந்த மாற்றத்தின் உந்துசக்தியாக குழந்தைகள் இருக்கின்றனர் என நாம் நம்புகின்றோம். எனவே, பெரிய மற்றும் சிறிய முயற்சிகள் மக்கிப்போகாத பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான மனநிலையை மாற்றுவதற்கு ஏதோ ஒரு விதத்தில் உதவிசெய்யும்” என்றார்.
CBL Plenty Foods (Pvt) Ltd நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமான சமபோஷ CBL குழுமத்துக்குச் சொந்தமான உப நிறுவனமாகும். CBL குழுமம் இலங்கையில் உள்ள மிகப்பெரிய உணவு பெருநிறுவனங்களில் ஒன்றாக விளங்குவதுடன், பெறுப்பான மற்றும் நிலைபேறான வணிக நடைமுறையை வலுவாக ஆதரிக்கிறது. நிலைபேறான வணிக நடைமுறை மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பங்களிப்பு போன்ற அர்ப்பணிப்புக்களுக்காக இந்தக் குழுமம் 2020ஆம் ஆண்டு இலங்கையின் சிறந்த பெருநிறுவன பிரஜையாகப் பெயரிடப்பட்டுள்ளது.