Site icon Eyeview Sri Lanka

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமென கடும் எச்சரிக்கை

Share with your friend

இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF), தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக தொழிற்துறையின் செயற்பாடுகளைத் தொடரும் திறன் குறித்து மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.

“எரிபொருள் தட்டுப்பாடு நமது அன்றாட உற்பத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டீசல் இல்லாததால் மின்வெட்டு நேரங்களில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதைத்தவிர, எரிபொருள் பற்றாக்குறை எமது உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் செயற்பாட்டை பாதிக்கிறது மற்றும் எமது ஊழியர்களுக்கான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.” என கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்தார்.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து ஆர்டர்கள் நிரம்பியிருந்தாலும், இந்த ஆர்டர்களை எந்த இடையூறும் இன்றி, குறிப்பாக ஏப்ரல் விடுமுறைக்கு முன்பாக நிறைவேற்றுவது சவாலாக இருப்பதாக JAAF குறிப்பிட்டது. நீண்ட காலமாக நிலவும் மின்வெட்டு மற்றும் டீசல் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இனி இயங்க முடியாமல் பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்கள் (SMEகள்) உட்பட தொழிற்சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டு வருகின்றன.

BOI நடத்தும் ஏற்றுமதி செயலாக்க வலையங்கள் (Export Processing Zones – EPZ) மின்வெட்டுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது, ஆனால் அது கடைப்பிடிக்கப்படவில்லை, கடந்த 24 மணிநேரத்தில் EPZகளும் நீண்டநேர மின்வெட்டை அனுபவித்து வருகின்றன.

இலங்கையின் ஆடைத் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பங்களிப்பதோடு, அனைத்து ஏற்றுமதிகளிலும் 40% பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தத் துறையானது 350,000 தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது மேலும் மேலும் 700,000 பேர் அதிக விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக வாழ்வாதார வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.”இந்த நெருக்கடி, உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், முழுத் தொழில் துறையையும் ஆபத்தில் ஆழ்த்திவிடும். இலங்கை எப்பொழுதும் தமது உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிடையே உயர்மட்ட நம்பிக்கையை பேணி வருகின்றது” என லோரன்ஸ் மீண்டும் வலியுறுத்தினார். “எமது கொள்வனவாளர்கள் எங்கள் மீது நம்பிக்கையை இழந்து மற்ற போட்டி சந்தைகளுக்குச் சென்றால், அவர்களை திரும்பப் பெறுவது மிகவும் சவாலானதாக இருக்கும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Share with your friend
Exit mobile version