2024 சர்வதேச நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) தினத்தை நினைவு கூரும் வகையில் ‘இளைஞர்கள் தலைமையிலான பசுமை மற்றும் உள்ளடக்கிய வர்த்தகங்கள்’ திட்டத்தின் வெற்றிகரமான முன்னோடி கட்ட நிகழ்வினை இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் கொண்டாடியது. ‘இளைஞர்கள் தலைமையிலான பசுமை மற்றும் உள்ளடக்கிய வர்த்தகங்கள்’ திட்டமானது அறிவு, திறன்கள், வளங்கள் மற்றும் வலையமைப்புகள் ஆகியவை சார்ந்த இளம் தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கியதாகும். அத்துடன் இத்திட்டமானது தற்போதுள்ள வர்த்தகங்களை பசுமையான மற்றும் உள்ளடக்கிய மாதிரிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
‘நிலையான தன்மைக்கான பாதைகள்: தொழில்முயற்சியாளர்களின் காட்சிப்படுத்தல் ’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, திட்டத்தின் அதியுயர் சிறப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இலங்கையைச் சேர்ந்த 30 இளம் வர்த்தகத் தலைவர்களுக்கு அவர்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை பசுமையானதாகவும் மேலும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கு புதுமையான தீர்வுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களின் வலையமைப்புடன் அவர்கள் மேற்கொண்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் பசுமை இயக்கம் மற்றும் லங்கா சோஷியல் வென்ச்சர்ஸ் ஆகிய இரண்டு உள்நாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டது .
பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஓர்லாண்டோ எட்வர்ட்ஸ், இளைஞர்களின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்: “எதிர்காலம் எமது இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதே எமது நம்பிக்கையாகும். அவர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமல்ல, இன்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாகவும் திகழ்கின்றனர். நிலைத்தன்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளதுடன் மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கும் தணிப்பதற்கும் நேர்மறையான நடவடிக்கை எடுப்போம்.
தலைமை உரையை ஆற்றிய இலங்கை நிலையான அபிவிருத்தி பேரவையின் பணிப்பாளர் நாயகம் சாமிந்திரி சபரமது, தேசிய அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதில் தனியார் நிறுவனங்களின் பங்கினை எடுத்துரைத்தார்: “தனியார் நிறுவனங்கள் அதிக சமூக மற்றும் சுற்றுச்சூழலை உருவாக்கும் வர்த்தக மாதிரிகளை உருவாக்குவதுடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் தாக்கம் மற்றும் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும். பிரிட்டிஷ் கவுன்சிலின் முயற்சிகள், நாட்டின் நிலையான வளர்ச்சிக்கான பொறுப்பான மற்றும் நெறிமுறையான தொழில் முயற்சியாளர்களை வளர்ப்பதற்கு பங்களிப்பினை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த காட்சிப்படுத்தல் நிகழ்வானது, இளம், இலங்கை தொழில்முயற்சியாளர்கள் ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த பல இளம் பசுமை தொழில்முயற்சியாளர்களுடன் மெய்நிகர் வலையமைப்பு மூலம் பரஸ்பர அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தது. நீடித்த அபிவிருத்தியை நோக்கிய இந்த கூட்டு முயற்சியானது வெற்றிகரமான மாதிரிகளை அளவிடுவதையும், பசுமையான மற்றும் உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி செலுத்தும் இளம் தொழில்முயற்சியாளர்கள் வலையமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இளம் தொழில் முயற்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த மாற்றத்தை நோக்கிய பயணமானது சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்தும் அதே வேளையில் பொருளாதார ரீதியாக வளமான வர்த்தகங்களை வடிவமைக்க அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. வர்த்தகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நிலையான நடைமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த வர்த்தக தலைவர்கள் பசுமையான மற்றும் சமத்துவமான சமூகத்திற்கு பங்களிப்பினை வழங்குகின்றனர்.
பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தின் கலாசார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாகும். ஐக்கிய ராஜ்ஜியத்திற்கும் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளுக்கும் இடையே தொடர்புகள், புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம் அமைதி மற்றும் செழுமையை நாங்கள் ஆதரிக்கிறோம்.இதனை நாம் கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் எங்கள் பணிகளை மேற்கொள்வதன் ஊடாக மேற்கொள்கிறோம். நாங்கள் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுடன் பணியாற்றுகிறோம். 2022-23ல் 600 மில்லியன் மக்களை நாம் அடைந்தோம். மேலும் தகவலுக்கு, www.britishcouncil.lk ஐ பார்வையிடவும்