Eyeview Sri Lanka

பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்துக்கு விஜயம்

Share with your friend

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர், கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்துக்கு ஜனவரி 12ஆம் திகதி விஜயம் செய்திருந்தனர். இலங்கைக்கான தமது விஜயத்தின் போது பங்கேற்கவிருந்த தொடர் விஜயங்களின் அங்கமாக இந்த பயணம் அமைந்திருந்தது.

திக்ஹேன பாடசாலையின் மாணவர்களின் பாரம்பரிய நாட்டிய நிகழ்வுடன் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Arches of Awe’ கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர். 

இந்த கண்காட்சியில் 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் II மற்றும் எடின்பரோ டியுக் அவர்களை வரவேற்கும் முகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 21 தோரணங்களின் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. பலநூற்றாண்டு காலம் பழமையான இந்த தோரணங்களை ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் அவதானிக்க முடியும். பாரம்பரிய சமய விழுமியங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த தோரணங்கள், அதிர்ஷ்டம், வெற்றி ஆகியவற்றைக் குறிப்பதுடன், விருந்தினர்களை வரவேற்கும் வகையிலும் அமைந்திருந்தன.

ஐக்கிய இராஜ்ஜியம் – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 75 வருடங்கள் பூர்த்தியை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் பணியாற்றியிருந்த இலங்கையின் முன்னணி கலைச் சங்கங்களுடனான சந்திப்பொன்றும் இதனைத் தொடர்ந்து நடைபெற்றது. Museum of Modern Art (MMCA), The National Trust Sri Lanka, Design Development Corporation, Ceylon Theatres, Scope Cinemas, Agenda14 மற்றும் The Gratiaen Trust ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தப் பங்காளர்கள் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆதரவுடன் பின்வருவன அடங்கலாக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்:

பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரை பிரிட்டிஷ் கவுன்சில் கற்பித்தல் நிலையத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் வரவேற்றதுடன், அதனைத் தொடர்ந்து உபாலி ரத்நாயக்க (இலங்கை ஆங்கில உரையாடல் சங்கத்தின் தலைவர்) வரவேற்றிருந்தார். முன்பு முன்னெடுக்கப்பட்ட பொது பேச்சுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருதுகளையும் வழங்கியிருந்தனர்.

வளர்ந்து வரும் நவநாகரீக அலங்கார வடிவமைப்பாளர்களையும் அவர்கள் சந்தித்திருந்தனர். இவர்கள் பிரித்தானியாவுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளதுடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருந்தனர். இவர்கள் தமது பணிகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் ஆடைகள், தொழிற்துறை மற்றும் நவநாகரீகத் துறை பற்றி பேசியிருந்தனர். பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர், இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்சில் 75 வருட கால சேவைகளை பூர்த்தி செய்துள்ளமையைக் குறிக்கும் நினைவுச்சின்னத்தையும் திரை நீக்கம் செய்திருந்தனர்.

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர் ஒர்லான்டோ எட்வர்ட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரை இன்றைய தினம் வரவேற்பதில் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றோம். கொழும்பு அலுவலகத்துக்கான அவர்களின் விஜயத்தினூடாக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இரு முக்கிய மைல்கற்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2024 இல், நாம் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் 75 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றோம். 1949 ஆம் ஆண்டில் இந்த அழகிய நாட்டில் எமது அலுவலகத்தை முதன் முதலில் ஆரம்பித்திருந்தோம். அத்துடன், 1934 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சிலின் 90 வருட பூர்த்தியையும் 2024 ஆம் ஆண்டில் நாம் கொண்டாடுகின்றோம். இலங்கையில் கடந்த 75 வருடங்களாக, முறைசார் மற்றும் முறைசாரா கல்வி வாய்ப்புகளினூடாகவும், கலாசார பரிமாற்றத்தினூடாகவும் பல இளம் மக்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நாம் ஆதரவளித்துள்ளோம். நாம் மேற்கொள்ளும் வாழ்வை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை எமது பெருமைக்குரிய விருந்தினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது.” என்றார்.


Share with your friend
Exit mobile version