பெண்களுக்கான மத்தியஸ்த சபைகள்

Share with your friend

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் இரு தரப்பினருக்கிடையில் ஏற்படும் சிறு சிறு  சச்சரவுகளை அதே சமூகத்தில் வாழும் படித்த, புத்திக்கூர்மையுள்ள, பாரபட்சமற்ற மற்றும் நடுநிலையான நபர்கள் அடங்கிய மூன்றாம் தரப்பினரின் தலையீட்டின்  மூலம் தீர்க்கும் 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. நீதி அமைச்சின் கொள்கைகள் மற்றும் நிர்வாகம் சார்ந்த ஆதரவுடன், சமரசத் திட்டம் மத்தியஸ்த சபைகள்  ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சமூகத்தில் பொதுப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தங்கள் நேரத்தை செலவழித்து தன்னார்வமாக முன்வந்து செயற்படும்  மத்தியஸ்தர்களால் மேலும் இந்தத் திட்டம்  பலப்படுத்தப்படுகிறது.

1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டம் ‘மத்தியஸ்தம்’ என்பதை பின்வருமாறு வரையறை செய்கின்றது.

மத்தியஸ்தம் என்பது வழமையாக முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் மூலம், பிணக்குகளுடன் தொடர்புபட்ட தரப்பினரின் சம்மதத்துடன் மற்றும் அவர்களுக்கு சாத்தியமான நாட்களில் அவர்களின் பங்கேற்புடன், அந்தப் பிணக்கு அல்லது தவறு மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க அவர்களின் பிரச்சினைக்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து தீர்ப்பதன் மூலம் ஒரு இணக்கமான தீர்வைக் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு செயல்முறையாகும்.”

சமூகத்தினுள் நிலவும் பிணக்குகளைக் குறைத்து, அடிப்படை மட்டத்திலிருந்து மோதல்களைத் தீர்த்து, சமூகத்தில் உள்ள மக்களிடையே  அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்குத் தேவையான வழிகாட்டல்களை முன்னெடுப்பதே மத்தியஸ்த சபைகள் நிறுவப்பட்டமைக்கான முக்கிய நோக்கமாகும். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பிரதேச செயலகப்பிரிவுகளில் மத்தியஸ்த சபைகள் குழாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனிடையில், ‘பெண்களை’ மையப்படுத்தி மத்தியஸ்த சபைகள் குழாம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக பெண்கள்,  மத்தியஸ்த சபைகள் பெண்களுக்காக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது  என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான உரிமை உண்டு. அதுமட்டுமல்லாமல், சமத்துவம் மற்றும் சுதந்திரம் தொடர்பான உரிமைகள் பிறப்பிலிருந்தே பெண்களுக்குக் காணப்படுகின்றது. சித்திரவதைகள் அல்லது பிற மனிதாபிமானமற்ற நடத்தைகள் அல்லது தண்டனைகளுக்கு உட்டபடாமல் இருப்பதற்கான உரிமைகள் இருப்பது கட்டாயமான ஒன்றாகும். ஆனால் தற்போது, ​​உலகின் பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு சிக்கலான சமூகப் பிரச்சனையாகவும், அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. குறிப்பாக இலங்கையில், இந்தப் பிரச்சினைகள் தொடர்பான அடிப்படைச் சிக்கல்களில் ஒன்று, பெரும்பான்மையான இலங்கைப் பெண்களைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்றால் என்ன? இது எப்படி இடம்பெறுகின்றது? இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? இதற்கு எதிரான சட்ட நடைமுறைகள் என்ன? இந்தச் சிக்கல்களை தீர்ப்பதற்கான சரியான இடம் எது? என்பவை பற்றிய சொற்ப அளவிலான விளக்கம் காணப்படுவதேயாகும். மேலும் பல பெண்களுக்கு முக்கியப் பிரச்சனையாக இருப்பது ‘இரகசியத்தன்மை’ தொடர்பான சந்தேகம் தான். ஆனால், இவ்வாறான பிணக்குகளை ‘மத்தியஸ்த சபையில்’ நேரில் வந்து எந்தக் குழப்பங்களும் இல்லாமல் தீர்க்கலாம் என்பது தெரியுமா? இங்கு பிணக்குகள் தொடர்பான தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பேணப்படும். 

மத்தியஸ்த சபைகளுக்கு  சமூகத்தில் எழும் பல்வேறு சர்ச்சைகள், பிணக்குகள் கொண்டுவரப்படுகின்றன. பின்னர், மத்தியஸ்த சபையின் தவிசாளர் சம்பந்தப்பட்ட பிணக்கு அல்லது முரண்பாட்டினைப் பற்றிக் கலந்துரையாட மூன்று மத்தியஸ்தர்களைக் கொண்ட ஒரு மத்தியஸ்தர் குழுவை தரப்பினரின் விருப்பத்தின்படி நியமிப்பார். மூவரில் ஒருவர் பிரதான மத்தியஸ்தராகவும், மற்ற இருவரும் மத்தியஸ்த உறுப்பினர்களாகவும் பங்குவகிப்பர். புகார் அளித்த முறைப்பாட்டாளர் முதலாம் தரப்பினராகவும், மற்றைய தரப்பினர் இரண்டாவது தரப்பினராகவும் கருதப்படுவார்கள். மத்தியஸ்த செயற்பாட்டின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான பிணக்கானது மூன்றாம் தரப்பினராகக் கருதப்படும் மூன்று மத்தியஸ்தர்கள் முன்னிலையில்  கலந்துரையாடப்படும். இந்தச் சந்தர்ப்பத்தில், முறைப்பாட்டாளர் ஒரு பெண்ணாக இருந்தால், அவரது பிரச்சனையை முன்வைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின், குறைந்தபட்சம் ஒரு பெண் மத்தியஸ்தரை நியமிப்பதற்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும். அதேபோன்று ஒரு சில சந்தர்ப்பங்களில் பிரச்சினையை நேரடியாகக் கூறமுடியவில்லை என்றால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதனை விளக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும். அதேபோன்று, மத்தியஸ்த செயற்பாடுகளுக்கு பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. நேரில் வந்து புகார் அளித்தால் ரூபாய் 5.00 எனும் சிறிய தொகை செலவாகும். ஆனால், பொலிஸ் அல்லது நீதிமன்றத்தின் மூலம் புகார் அளித்தால் அந்தத் தொகை கூட செலவாகாது. மத்தியஸ்த செயன்முறையில் காணப்படும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், பிணக்குகள் மற்றும் சிக்கல்களை தொடர்புடைய நபர்களே தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகும். நீதித்துறைச் செயற்பாடுகளில், தொடர்புடைய தரப்பினரின் பிரச்சனைகள் பெரும்பாலும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபரினாலேயே முன்வைக்கப்படுகின்றது.  அதேபோல், பிணக்கில் தொடர்புடைய தரப்பினர் தங்களுடைய உணர்வுகளையும், பிரச்சனைகளையும் மத்தியஸ்தர் குழுவிடம் தாங்களே தெரிவிக்கலாம். இது மனச் சுமையை தீர்க்க உதவும். ஏனெனில் இது மிகவும் இரகசியமான செயன்முறையாகும். இங்கு இரகசியத்தன்மை பாதுகாப்புகள் இருந்தபோதிலும், தொடர்புடைய அறிக்கைகளை நீதிமன்றத்திற்கோ அல்லது ஒரு ஆதாரமாகவோ வழங்கப்படாதிருக்க சட்டத்தின் மூலம் மத்தியஸ்த சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இறுதியில், தொடர்புபட்ட தரப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில் பல மாற்றுவழித் தீர்வுகளையும் மிகவும் பொருத்தமான, சரியான மற்றும் நியாயமான உடன்பாடு ஒன்றினையும் எட்டுவது சாத்தியமாகின்றது. மத்தியஸ்த செயல்பாட்டில் ஈடுபடுகின்ற மத்தியஸ்தர்கள், தொடர்புபட்ட தரப்பினர்களின் விவாதங்களை எவ்வாறு செவிமடுப்பது, அத்துடன் பிணக்குகளை பகுப்பாய்வு செய்வது மற்றும் தொடர்புபட்ட தரப்பினருக்கு எவ்வாறு உதவுவது, என்பவை தொடர்பான தொடர்பாடல், கையாளுகை நுட்பங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதனால், சிறந்த, தரமான சேவையை வழங்க முடிகின்றது.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள மத்தியஸ்த சபைகள் குழாம்கள் குறித்த தகவல்களை பிரதேச செயலகம் அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகம் அல்லது மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெண்களே, இன்று முதல் விழிப்புடன் இருங்கள். உங்கள் பிரச்சனைகளை மத்தியஸ்த சபைகள் குழாத்திற்குத் தெரிவியுங்கள். நேரம், முயற்சி மற்றும் பணம் என்பவற்றை விரயமாக்காமல், வெற்றிகரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தீர்வினை எட்டுங்கள்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply