இலங்கையின் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான முனைப்பாக, லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆனது, LankaLifeLine எனும் அவசர சிகிச்சை பராமரிப்பு சேவை மற்றும் LankaCare எனும் பரந்த வீட்டுப் பராமரிப்பு சிகிச்சை சேவையை 2025 ஜூலை 02ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மிக விமர்சையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், பிரதி சுற்றுலாத் துறை அமைச்சர் கௌரவ பேராசிரியர் ருவன் ரணசிங்க ஆகிய விருந்தினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. அத்துடன், 2025 இலங்கை அழகி பட்டம் வென்ற அனுதி குணசேகர மற்றும் இலங்கை ஆணழகர் மேகா சூரியாராச்சி ஆகியோர், இவ்விழாவுக்கு இளைய தலைமுறையின் ஈர்ப்பு மற்றும் கவர்ச்சியை சேர்த்தனர். இவர்கள் இருவரும், மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மருத்துவமனையின் பராமரிப்பில் புத்தாக்கம் கொண்ட அணுகுமுறையை பாராட்டினர். இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், முன்னணி மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டமை, இந்நிகழ்வின் தேசிய முக்கியத்துவத்தையும் துறை தாண்டிய அதன் தாக்கத்தையும் பிரதிபலித்தது.



லங்கா ஹொஸ்பிடல்ஸின் பாரம்பரிய மருத்துவமனை எனும் எல்லைகளை கடந்த ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நோயாளிகள் வாழுகின்ற, வேலை செய்கின்ற, நடமாடுகின்ற, சிகிச்சை பெறுகின்ற இடங்களுக்கே நேரடியாகச் சென்று சேவைகளை வழங்கும் பிரத்தியேகமான முயற்சியாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது.
LankaLifeLine புதிய அவசர பராமரிப்பு சேவையானது, பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முற்றாக ஒருங்கிணைக்கப்பட்ட 24 மணிநேர, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கான அவசர பதிலளிப்பு கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர அழைப்புகள், அம்பியுலன்ஸ் போக்குவரத்து, மருத்துவமனைக்கான உடனடி மாற்றம், பல் துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை என்பவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து, அவசரகால சிகிச்சையில் காணப்படும் குறைபாடுகளை இது ஈடு செய்கிறது. இந்த சேவையானது வெறுமனே ஒரு கட்டமைப்பு என்பதற்கும் அப்பாற்பட்ட, கருணை, சமூகப் புரிதல் மற்றும் பண்பாட்டு உணர்வில் வேரூன்றிய ஒரு சேவையாகும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் தொடர்புகொள்ளக் கூடிய, இதற்காகவே பயிற்சியளிக்கப்பட்ட ஊழியர்கள் மூலம், முதற்கட்ட பதிலளிப்பை வேகமாக மாத்திரமன்றி, மனிதாபிமானம் மிக்கதாகவும், நோயாளிகளினதும் அவர்களது குடும்பங்களினதும் அச்சத்தை புரிந்து கொள்வதிலும் விசேடத்துவத்தை பேணுகிறது.
இந்த மாதிரி கட்டமைப்பானது, அவசர சிகிச்சையை கடந்து, அதற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் உளவியல் ஆதரவை விரிவாக்குகிறது. காயங்களில் இருந்து மீட்சியடைதலானது வெறுமனே உடல் சிகிச்சையால் மாத்திரம் முடியாது என்பதை இது உணர்த்துகிறது. LankaLifeLine ஆனது, இலங்கை அரசின் மிகப்பெரும் பொதுச் சுகாதார சேவை பிரிவுகளின் சுமையை பகிர்ந்து கொள்வதில், வார்த்தைகளில் மாத்திரமல்லாமல், மாறாக கட்டமைக்கப்பட்ட, தொழில்முறை ரீதியான பராமரிப்பு கட்டமைப்புகள் மூலம் லங்கா ஹொஸ்பிடல்ஸ் உறுதுணையாக செயற்படுவதையும் காட்டுகிறது.
LankaCare சேவையானது நோயாளிகளின் வீட்டுக்கே மருத்துவ பராமரிப்பை கொண்டு செல்லும் அதே வேளையில், தொலைதூர பிரதேசங்களுக்கும் வெவ்வேறு நேர வலயலங்களில் உள்ள இடங்களுக்கும் மருத்துவப் பராமரிப்பை கொண்டு சேர்க்க முடியும் என்பதையும், எமது அன்புக்குரிய உறவுகளை ஆதரிக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தும் புதிய பார்வையை ஏற்படுத்துகிறது. இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு மாத்திரமல்லாது, தங்கள் பாசமிகு சொந்தங்களுக்கு தொடர்ச்சியான, தொழில்முறை ரீதியான சிகிச்சையை உறுதி செய்ய விரும்பும் வெளிநாட்டில் வாழ்வோர் சார்பாகவும் LankaCare ஆனது, வீட்டுக்கே மருத்துவமனை தரத்திலான சேவைகளை கொண்டு செல்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு சேவை, நீண்டகால நோய் தொடர்பான பராமரிப்பு முதல் முதியோர் பராமரிப்பு வரை மாத்திரமன்றி நோய்த் தடுப்பு சேவை போன்ற அனைத்து வகை சேவைகளையும் முன்னெடுக்கிறது. இந்த சேவைகளை நேரடியாகச் சென்றும், தொலைநிலை கண்காணிப்பு, குடும்பத்தினரின் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கிறது. பராமரிப்பு எங்கு வழங்கப்படுகிறது என்பதற்கு அப்பால், அது எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதில் LankaCare தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது.
பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களினால், தாதியர் சேவை, பிசியோதெரபி, நேரத்திற்கு மருந்து வழங்குதல் மற்றும் தொலைநிலையிலான ஆலோசனை சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் மூலம், வெளிப்படையான, ஆறுதலான, அன்பான சேவையை அவர்கள் வழங்குகிறார்கள். இவ்விழாவின் முக்கிய தருணமாக, ஆயிராவது LankaCare உறுப்பினர் அட்டையானது, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கு வழங்கப்பட்டமையானது, இந்த சேவை தொடர்பான மக்கள் நம்பிக்கையை வலியுறுத்துவதோடு, அனைவராலும் அணுகக்கூடிய, குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சுகாதாரப் பராமரிப்பிற்கான வேகமாக வளர்ந்து வரும் தேவையையும் எடுத்துக் காட்டுகிறது. நம்பகமான, தொடர்ச்சியான மருத்துவ சேவையானது, தூரம் எனும் விடயத்தால் துண்டிக்கப்பட வேண்டியதில்லை என்பதை LankaCare மூலம் லங்கா ஹொஸ்பிடல்ஸ் உறுதி செய்கின்றது.
இந்த அறிமுக விழாவில் Lanka Hospitals Group குழும முகாமைத்துவ பணிப்பாளர் சாமிந்த குமாரசிறி அவர்கள் கருத்து வெளியிடுகையில்:
“இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தரமான சுகாதாரத்தை கொண்டு சேர்க்க நாம் உறுதி பூண்டுள்ளோம். ஒவ்வொரு நபரும் மரியாதை மற்றும் கருணையுடன் சிகிச்சை பெற வேண்டிய உரிமை கொண்டவர்கள் என லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆகிய நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் அடையும் நபர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த இரக்கமுள்ளவர்களாகவும் உணர்வு மிக்கவர்களாகவும் செயற்படுவோம். இந்த உறுதியை, LankaLifeLine மற்றும் LankaCare மூலம் சமூகத்திற்கும் வீடுகளுக்கும் நிபுணத்துவ பராமரிப்பை வழங்குவதன் மூலம் மருத்துவமனைச் சுவர்களுக்கு அப்பாலும் நாம் கொண்டு செல்கின்றோம்.” என்றார்.
இந்த அறிமுகமானது, லங்கா ஹொஸ்பிடல்ஸின் சுகாதாரம் தொடர்பான தொலைநோக்குப் பார்வையில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாகும் என குமாரசிறி தெரிவித்தார். LankaLifeLine மற்றும் LankaCare ஆகிய சேவைகளுக்கான எதிர்கால விரிவாக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த, சமூகத்தை மையப்படுத்திய சுகாதாரத் தீர்வுகளில் மேலும் முதலீடு செய்ய லங்கா ஹொஸ்பிடல்ஸ் குழுமம் தயாராகியுள்ளது. இதன் மூலம் கொழும்பில் மாத்திரமன்றி, நாடு முழுவதும் ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்புவதற்கும் இக்குழுமம் தன்னை அர்ப்பணித்துள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவில், இலங்கையின் சுகாதாரத்துறையில் மாற்றம் இடம்பெறத் தொடங்கியுள்ளது என்பதும், மக்கள் வாழும் இடங்களுக்கே சென்று, மிகச் சிறந்த பராமரிப்பை வழங்க லங்கா ஹொஸ்பிடல்ஸ் முக்கிய படியை எடுத்துள்ளது என்பதும் தெளிவாக வெளிப்பட்டது.