Eyeview Sri Lanka

ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி, 2வது ஆண்டு நிறைவு மற்றும் Tenants Awards 2025 விருதுகள் நிகழ்வுடன் இரு ஆண்டுகளாக பகிரப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளது 

Share with your friend

கொழும்பின் உயர்ரக வாழ்க்கைமுறை அமைவிடமான ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி, “புன்னகை, மகிழ்ச்சி, மற்றும் பகிரப்பட்ட குதூகலம் நிறைந்த இரு ஆண்டுகள்” (Two Years of Smiles, Happiness, and Shared Joy) என்ற தொனிப்பொருளுடன் தனது 2வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியுள்ளது. பொருட் கொள்வனவு, உணவு விருந்து, மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் துடிதுடிப்பான சமூக மையமொன்றைத் தோற்றுவிப்பதில் இரு ஆண்டு கால மகத்தான பயணத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த சாதனை மைல்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் சில்லறை வர்த்தகத்துறையில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி கடந்த இரு ஆண்டுகளில் நிலைநாட்டியுள்ளது. மக்களை ஒன்றுகூடச் செய்யும் அனுபவங்களைத் தோற்றுவிப்பதற்காக, முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தகநாமங்களை அறிமுகப்படுத்தி, “எனது மகிழ்விடம்” (My Happy Place) என்ற தனது வர்த்தகநாம வாக்குறுதியை எவ்வாறு ஒரு நவீன வாழ்க்கைமுறை இடத்தால் கட்டிக்காக்க முடியும் என்பதற்கு இக்கடைத்தொகுதி மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளது. 

இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி ‘Tenant Partner Excellence Awards 2025’ நிகழ்வை ஒக்டோபர் 18 அன்று இது ஏற்பாடு செய்துள்ளதுடன், அதன் 135 குத்தகை கூட்டாளர்கள் மத்தியில் மகத்துவத்திற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காக காலைப்பொழுது ஒதுக்கப்பட்டடிருந்தது. விற்பனைப் பெறுபேறுகள், வாடிக்கையாளர் சேவை போன்றவை உள்ளிட்ட 19 பிரிவுகள் மத்தியில் ஈட்டப்பட்ட சாதனைகள் இவ்விருதுகள் நிகழ்வில் போற்றிக் கொண்டாடப்பட்டன.

குத்தகைதாரர்களின் முகாமைத்துவம், ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி முகாமைத்துவ அணி, Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் ஒன்றுகூடியதுடன், ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதியின் வெற்றியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் உத்வேகம் கொண்ட கூட்டாண்மையை அவர்களின் பிரசன்னம் எடுத்துக்காட்டியுள்ளது.

இத்தருணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பிரவீர் சமரசிங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: “இந்த சாதனை மைல்கல்லை நாம் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், எமக்கு தொடர்ச்சியான, ஓயாத விசுவாசத்தையும், ஆதரவையும் காண்பித்து வருகின்ற எமது கொள்வனவாளர்கள், சில்லறை வர்த்தக கூட்டாளர்கள், மற்றும் ஏனைய விற்பனையாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பயணத்தில் மகத்துவத்தையும், கூட்டாண்மையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, பாராட்டுக்குத் தகுதியான எமது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் ஒன்றிணைந்து, கொழும்பில் மிகவும் போற்றப்படும் மற்றும் குதூகலம்மிக்க, “எனது மகிழ்விடமாக” ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதியை மாற்றியமைத்துள்ளோம்.”

2வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக, ஒக்டோபர் 18, மற்றும் 19 ஆகிய தினங்களில் இரு நாள் கொண்டாட்டத்தை ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி ஏற்பாடு செய்துள்ளதுடன், கடைத்தொகுதியை குதூகலம் மிக்க கொண்டாட்டமாக மாற்றியமைக்கும் வகையில், 30% வரையான பிரத்தியேக தள்ளுபடிகள், ஒவ்வொரு மணி நேரமும் இடம்பெறும் அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டிழுப்பின் மூலமாக 200 வெற்றியாளர்களைத் தெரிவு செய்தல், சர்வதேச உணவுக் கொண்டாட்ட நிகழ்வு, மற்றும் நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்த குதூகலத்தை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் ஹவ்லொக் சிட்டி அடுக்குமனை குடியிருப்பாளர்களுக்கு பிரத்தியேகமான நம்பிக்கை அங்கத்துவ அட்டையொன்றையும் ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி அறிமுகப்படுத்தியுள்ளதுடன், விசேட வரப்பிரசாதங்கள் மற்றும் நன்மைகள் பலவற்றை அவர்களுக்கு வழங்குகின்றது.

ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு தற்போது இந்த சாதனை மைல்கல் நிலைநாட்டப்பட்டுள்ள காலம் வரை, மக்களை இணைத்து, மகிழ்ச்சிக்கு உத்வேகமளிக்கும் வகையில், அர்த்தமுள்ள, மறக்க முடியாத அனுபவங்களைத் தோற்றுவிப்பதில் ஹவ்லொக் சிட்டி கடைத்தொகுதி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைத்து வந்துள்ளது. இங்கு வருகை தருகின்ற அனைவருக்கும் தொடர்ந்தும் புன்னகை, மகிழ்ச்சி, மற்றும் பகிரப்பட்ட குதூகலம் ஆகியவற்றைக் கொண்டு வரும் வாக்குறுதியின் மீள் உறுதிப்படுத்தலாகவும், கொண்டாட்டமாகவும் 2வது ஆண்டு நிறைவு அமைந்துள்ளது.


Share with your friend
Exit mobile version