இலங்கையில் நிலைபேண்தகு எரிசக்தி நிறுவனமான Anka EnergyX, அதிநவீன ஹைட்ரஜன் எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Harnyss USA உடன் இணைந்து, நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மின்கட்டமைப்புக்களை (smart grid) அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஹைட்ரஜன் எரிசக்தி சேமிப்பு மற்றும் ஸ்மார்ட் மின்கட்டமைப்புக்கள் பற்றிய இலங்கையின் முதல் பகிரங்க கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வு நிகழ்வான “ஹைட்ரஜன் வலு” (The Power of Hydrogen) ஐ Anka EnergyX நடத்தியது. ஹைட்ரஜன் எரிசக்தி சேமிப்பு மற்றும் ஸ்மார்ட் மின்கட்டமைப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களான சூரிய, நீர் மற்றும் காற்று போன்ற ஏற்கனவே பாரியளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரையாடல்களை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு. அனுர திஸாநாயக்க, இலங்கை நிலைபேண்தகு எரிசக்தி அதிகார சபை மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், எரிசக்தி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் உட்பட இதனுடன் தொடர்புபட்ட பல தரப்பினரும் கலந்துகொண்டனர். ஸ்மார்ட் மின்கட்டமைப்பு தொழில்நுட்பமானது, இலங்கைக்கு தற்போதுள்ள எரிசக்தி உட்கட்டமைப்பை சிறந்த முறையில் நிர்வகிக்கவும், புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை ஒருங்கிணைக்கவும், மேலும் சுற்றாடல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் நன்மையளிக்கக்கூடிய மிகவும் நெகிழ்வுடைய, நம்பகமான மற்றும் நிலைபேண்தகு எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கும் உதவும். மேலும், நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு ஏற்படும் அதிர்ச்சிகளுக்கு எதிராக தனியார் துறை தன்னை சிறப்பாக காப்பிட இடமளிக்கும்.
இந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்ட Harnyss USA இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான கிர்பி ஸ்மித் அவர்கள் மேலும் விளக்கமளிக்கையில், “எமது அதிநவீன ஹைட்ரஜன் எரிசக்தி சேமிப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதே எங்கள் இலக்காகும். இது பாரிய அளவில் மாற்றப்படக்கூடியது மற்றும் நெகிழ்வானது என்பதுடன், இது இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகள் மற்றும் பெரிய அளவிலான தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஏற்றது. ஸ்மார்ட் மின்கட்டமைப்பு தொழில்நுட்பம் மூலம், எரிசக்தி வழங்கல் மற்றும் தேவையை சமநிலைப்படுத்தவும், மின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவலாம். எமது தீர்வுகள் இலங்கையின் வணிகத் துறைக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும், இடைவிட்ட வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் சவால்களை, அமைப்பில் உள்ள மற்ற இடர்களுடன் சமாளித்து, எரிசக்தி பாதுகாப்பை அடைய உதவும்,” என்று குறிப்பிட்டார்.
“Harnyss USA உடன் இணைந்து அவர்களின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று Anka EnergyX இன் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜூட் சேவியர் அவர்கள் குறிப்பிட்டார். “இந்த தொழில்நுட்பம் நாட்டிற்கு மிகவும் நிலைபேண்தகு மற்றும் நம்பகமான எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கும் இலங்கையை எரிசக்தி சுதந்திரமாக மாற்றுவதற்கும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
“The Power of Hydrogen” நிகழ்வு இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினைக் குறித்ததுடன், இது நிலைபேண்தகு மற்றும் சூழல்நேய எதிர்காலத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. தொழில்துறை தலைவர்களின் ஆதரவுடன், நம்பகமான, நிலைபேண்தகு மற்றும் தங்கியிருக்கக்கூடிய எரிசக்தி மின்கட்டமைப்பு என்ற இலக்கை அடைவதற்கான வலுவான மற்றும் நிலையான தளத்தை இலங்கை உருவாக்கி வருகிறது.