Eyeview Sri Lanka

இலங்கையின் பிரபலமான திறந்தவெளி கலைக் கண்காட்சி கலா பொல – 32ஆவது வருடமாக பெப்ரவரி 16 இல் ஆரம்பம்

Share with your friend

கொழும்பு: இலங்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொல, அதன் 32ஆவது பதிப்பாக பெப்ரவரி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு 07, ஆனந்த குமாரசாமி மாவத்தையில் (கிரீன் பாத்) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கலை பன்முகத்தன்மை மற்றும் படைப்பாற்றலின் தனித்துவமான அம்சங்களுடன், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு காட்சிக் கலையை ஊக்குவிப்பதன் பாரம்பரியத்தைக் கொண்ட இந்நிகழ்வு, இவ்வருடத்தில் முன்னரை விட இன்னும் கவர்ச்சிகரமானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையின் எண்ணக்கருவில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1994 முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தால் ஆதரவளிக்கப்பட்டு இணைந்து வழங்கப்பட்ட கலா பொல, கொழும்பு கலைத் துறை நாட்காட்டியில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிகழ்வில், பல்வேறு நிலைகளைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகள், உருவப்படக் கலைஞர்கள் மற்றும் கேலிச்சித்திர கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும், கலை ஆர்வலர்களுடன் இணையவும், ஏனைய கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவர்களுடன் இணைந்து கொள்ளவும், தங்கள் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தவும் இந்நிகழ்வு வாய்ப்பளிக்கிறது.

இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த, ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையின் தலைவரான மாலக தல்வத்த,”கடந்த மூன்று தசாப்தங்களாக கலா பொல கண்காட்சி, இலங்கையின் கலையை ஆதரித்து வரும் ஒரு செழிப்புமிக்க நிகழ்வாக வளர்ந்துள்ள அதே நேரத்தில், எமது கலைஞர்களுக்கு அவர்களது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்ட வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மக்களை மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும், ஒன்றிணைப்பதற்கும் கலையின் நீடித்த திறனுக்கு இது சான்றாகும்” என்றார்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகள் (CSR) தலைவர் கார்மெலின் ஜயசூர்ய இது பற்றித் தெரிவிக்கையில், “கலா பொல என்பது வெறுமனே ஒரு கலைக் கண்காட்சி மாத்திரமல்ல. இலங்கையின் திறமை, கலாசாரம் மற்றும் சமூகத்தின் கொண்டாட்டமாகும். 31ஆவது வருடமாக இடம்பெறும் இந்த நிகழ்வில் இணைந்திருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இதன் மூலம் உள்ளூர் கலைஞர்களை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம். நாட்டின் படைப்பாற்றலையும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அவர்களின் மகத்தான ஆற்றலையும், எமது மக்களின் சமூக ஆரோக்கியத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விமர்சனம் மிக்க கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதில் கலை மற்றும் கலாசாரம் கொண்டுள்ள ஒட்டுமொத்த பங்கிற்கு நாம் கௌரவமளிக்கிறோம்.” என்றார்.

கலா பொல பல்வேறு வகையான வடிவங்களையும், பாணிகளையும் கொண்டுள்ளது. இதில் சிக்கலான சிற்பங்கள், நகைச்சுவையான கேலிச்சித்திரங்கள் மற்றும் சிறு ஓவியங்கள் முதல் நவீன மற்றும் பாரம்பரிய இலங்கை கலைகள் வரை உள்ளடக்கியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலை ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த நிகழ்வு, இசை, நட்புறவு, கலை விவாதங்கள் மற்றும் கலாசார பரிமாற்றத்தால் தூண்டப்பட்ட ஒரு துடிப்பான, வரவேற்கத்தக்க மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறும் கலா பொல நிகழ்வானது, ஒரு தனித்துவமான திறந்தவெளி கலை கண்காட்சியாகும். இது பல்வேறு வகையான காட்சிக் கலைகளை கொண்டுள்ளது. இதில் சிரேஷ்ட கலைஞர்கள், வளர்ந்து வரும் கலைஞர்கள் என, அனைவருக்கும் அவர்களது படைப்புகளை சந்தைப்படுத்துவதற்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதோடு, பார்வையாளர்களின் மாறுபட்ட இரசனைகள் மற்றும் விலைகளுக்கு ஏற்ப, கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு தனித்துவமான கலை அனுபவத்தை வழங்கவும் உதவுகிறது.

John Keells Holdings PLC (JKH) இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ‘சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை’ எனும் பிரிவின் கீழ் கலை மற்றும் கலாசாரம் இணைகிறது. ஜோன் கீல்ஸ் நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வேறுபட்ட தொழில் துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 15,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, கடந்த 19 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் ‘பெருநிறுவன அறிக்கை மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’ எனும் தரப்படுத்தலில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழுமையான அங்கத்துவம் கொண்ட உறுப்பினராகவும், UN Global Compact இல் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக உள்ள ‘Plasticcycle’ எனும் சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும் “நாளைய தேசத்தை  வலுப்படுத்துவோம் ” எனும் அதன் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான தூரநோக்கை JKH முன்னெடுத்து வருகிறது.

ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை பற்றி

1988 ஆம் ஆண்டு ஜோர்ஜ் கீத்தின் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையானது (GKF), கலை மற்றும் கலைஞர்களின் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும், கலையை ஊக்குவிப்பதற்குமாக இலங்கைக்கு உதவுவதற்கான கடமையைக் கொண்டுள்ளது. GKF அமைப்பு அதன் ஆரம்பத்திலிருந்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் கலைகளின் முக்கிய ஊக்குவிப்பாளராக இருந்து வருகிறது.

மேலதிக விபரங்களுக்கு, www.kalapola.lk இணையத்தளத்தைப் பார்வையிடவும்.


Share with your friend
Exit mobile version