இலங்கையின் முன்னணி மொபைல் தொலைபேசி உதிரிப்பாகங்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பாகங்கள் வழங்குநரான Trans Asia Cellular (Pvt) Ltd. தனது முதலாவது சர்வதேச விற்பனை நிலையத்தை துபாய் நகரில் ஆரம்பித்துள்ளது. வர்த்தக நாமத்தின் சர்வதேச விரிவாக்கல் திட்டங்களின் முதல் அங்கமாக இந்த நிலையத்தை ஆரம்பித்துள்ளது.
துபாய் நகரின் மையப்பகுதியில் டெய்ராவில் அமைந்துள்ள இந்த நிலையத்தை, மே மாதம் 29 ஆம் திகதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஷேக் மொஹமட் அல் ஷெஹி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குழுமத்தின் தவிசாளர் முஃபீல் யசீன் கலந்து கொண்டதுடன், இதர முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், Trans Asia Cellular, அசல், உயர் தரம் வாய்ந்த மொபைல் தொலைபேசி மற்றும் தொடர்பாடல் சாதனங்களை சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் வழங்குவதில் கீர்த்தி நாமத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச தொழிற்துறை நியமங்களின் பிரகாரம், தனது தயாரிப்பு தெரிவுகளையும் விரிவாக்கம் செய்த வண்ணமுள்ளது. தனது புதிய சர்வதேச நிலையத்துக்கு மேலதிகமாக, கொழும்பு மற்றும் குருநாகல் நகரங்களில் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளதுடன், முழுமையாக செயற்படும் ஒன்லைன் சந்தைப்பகுதியையும் கொண்டுள்ளது.
“துபாயில் அமைந்துள்ள புதிய விற்பனை நிலையத்தினூடாக வெளிநாடுகளின் புதிய சந்தைகளில் Trans Asia Cellular வர்த்தக நாமம் அறிமுகம் செய்யப்படும் என்பதுடன், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் நாம் திட்டமிட்டுள்ள பாரியளவு விரிவாக்கத்துக்கு அடிப்படையாகவும் அமைந்திருக்கும்.” என Trans Asia Cellular பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் அபு அஹமட் பின் அலி தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “அடுத்த 5 ஆண்டு காலப்பகுதியில் எம்மை பிரதான செயற்பாட்டாளராக திகழச் செய்வதற்காக, ஓமான், சவுதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அருகாமையில் காணப்படும் நாடுகளுடன் நாம் பேச்சு வார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.” என்றார்.