Site icon Eyeview Sri Lanka

இலங்கையில் செயற்கட்டமைப்பு மாற்றத்துக்கு டிஜிட்டல் ரீதியில் தயாராக இருப்பதாக SLT-MOBITEL அறிவிப்பு

Share with your friend

மாற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு தூண்டுகோல்களான எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட குடிமக்களுக்கான தேசிய பிரேரணை பற்றி அறிவித்துள்ளது

முன்னணி தொலைத்தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குநரான SLT-MOBITEL, அத்தியாவசிய சேவைகள் மற்றும் துறைகளை மேம்படுத்துவது மற்றும் குடிமக்களை டிஜிட்டல் முறையில் வலுவூட்டுவது தொடர்பான தேசிய திட்டத்தை முன்மொழிவது பற்றி அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த செயற்பாட்டாளர்களில் ஒன்றாகத் திகழும் SLT-MOBITEL, நாட்டில் செயற்கட்டமைப்பு மாற்றத்தை துரிதமாக மேற்கொள்ள வேண்டியதன் தேவைக்கான காரணங்களாக தொன்மை வாய்ந்த சட்ட கட்டமைப்புகள், வினைத்திறன் இன்மை, மோசடி, பெருமளவு செயற்பாட்டு செலவுகள் மற்றும் பிரதான துறைகள் மற்றும் சேவைகளில் நிலவும் விரயம் போன்றன காரணங்களாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

SLT-MOBITEL இனால் முன்மொழியப்பட்டுள்ள புதிய செயற்திட்ட மாற்றத்துக்கான அடித்தளம் டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட மக்கள் என்பதாக அமைந்திருப்பதுடன், அடையாளங்களின் டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் உறுதியான டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேக கட்டமைப்பு என்பதை குறிக்கின்றது. நாட்டுக்கு முக்கியமான சகல பிரிவுகளிலும் டிஜிட்டல் வணிக மற்றும் e-ஆளுகை ஆகியவற்றை அறிமுகம் செய்வதற்கு புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கும். சுகாதார பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீதி மற்றும் வங்கியியல் மற்றும் நிதியியல் போன்றவற்றை அத்தியாவசிய முக்கியமான சேவைகளாக இனங்கண்டுள்ளதுடன், இந்த புதிய கட்டமைப்பின் கீழ் அதிகளவு வினைத்திறனாகவும் வெளிப்படையாகவும் இயங்கும்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ இந்த புதிய கட்டமைப்பு பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்டதைப் போல, மதிநுட்பமான தேசம் (Smart Nation) ஆக மாற்றம் பெறக்கூடிய வாய்ப்புகள் இலங்கையில் காணப்படுகின்றது. அதனூடாக புத்தாக்கமான தொழில்நுட்பத்தை ஒவ்வொரு செயற்பாட்டின் முதுகெலும்பாக திகழச் செய்யக்கூடியதாக இருக்கும். இதை முன்னெடுப்பதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், முக்கியமான துறைகள் மற்றும் சேவைகள் அதிகளவு வினைத்திறன் வாய்ந்த, வெளிப்படையான, இலாபமீட்டக்கூடிய கட்டமைப்புகளாக மாற்றமடைந்து, மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் பயனளிப்பதாக அமைந்திருக்கும். நாட்டை E-ஆளுகையை (e-governance) நோக்கி நகர்த்துவது எமது நோக்காக அமைந்துள்ளது. பெறுமதி சங்கிலியில் நாம் பரந்தளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், தொழில்நுட்ப நிறுவனங்கள், பாரிய கூட்டாண்மை நிறுவனங்கள், பொது மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒப்பற்ற திறனையும் கொண்டுள்ளோம். எமது ஆற்றல்கள் மற்றும் நாட்டில் கொண்டுள்ள உறுதியான உட்கட்டமைப்பினூடாக, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நாம் முழுமையாக தயார் நிலையிலுள்ளோம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

160 வருடங்களுக்கு முன்னர் அரச உடைமையில் அமைந்த தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநராக தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த SLT-MOBITEL, கடந்த காலங்களில் தனது செயற்பாடுகளை மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளதுடன், அதிகளவு இலாபகரமான மற்றும் வினைத்திறனான பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக திகழ்கின்றது. இந்நிறுவனத்தினால் தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத் தீர்வுகள், உடனடியாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்புகள், மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு முதுகெலும்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் போன்றன வழங்கப்படுகின்றன.

பெர்னான்டோ மேலும் குறிப்பிடுகையில், “2020 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பு செயற்பாட்டினூடாக சிறந்த நிலையான மற்றும் மொபைல் தொழில்நுட்ப சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. உரிய காலத்தில் இந்த ஒன்றிணைவு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தொழில்நுட்பம் மற்றும் இணைப்புத் தீரவுகளுக்கான கேள்வி பெருமளவில் அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்பை புரிந்து கொண்டு, எதிர்கால கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில், எமது fibre வலையமைப்பை இலங்கையின் 65,000 கிலோமீற்றர் பகுதிக்கு வியாபித்திருந்தோம். அதனூடாக, வேகமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய புரோட்பான்ட் சேவைகளை வழங்கி, நாட்டின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தியிருந்தோம். SLT குழுமம் தன்வசம் நாட்டின் மாபெரும் டேட்டா நிலையங்களைக் கொண்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஜாம்பவான்களாகத் திகழும் Microsoft, Oracle மற்றும் vmware போன்றவற்றுடன் நாம் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மைகளினூடாக, பொது மக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாரிய கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சகல வசதிகளையும் கொண்டுள்ளோம். உட்கட்டமைப்பு வசதிகளில் நாம் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு இன்று எதிர்நோக்கியுள்ள மற்றும் நாளை எதிர்நோக்கவுள்ள சவால்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தீர்வுகளில் நாம் கவனம் செலுத்துகின்றோம். இலங்கையில் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் செயற்கட்டமைப்பு மாற்றத்துக்கு டிஜிட்டல் முறையில் SLT-MOBITEL தயாராக உள்ளது.” என்றார். 

செயற்கட்டமைப்பு மாற்றத்தின் கீழ், SLT-MOBITEL இனால் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தப்படும் துறைகளாக விவசாயம், சுற்றுலா, சட்டம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியன அடங்கியுள்ளன. துறைகளின் சவால்கள் மற்றும் பிரேரிக்கப்பட்டுள்ள தீர்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.

E -சுகாதாரம் (Online Education)

சுகாதார வசதிகளை அணுகுவது என்பது அடிப்படைத் தேவையாகும். எவ்வாறாயினும், எவ்வாறாயினும் இன்றைய சூழலில் பல சவால்களுக்கு சுகாதாரத் துறை முகங்கொடுத்துள்ளது. குடிமக்களுக்கு சேவைகள் மற்றும் தரவுகளை அணுகுவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. SLT-MOBITEL இன் பிரேரணையினூடாக, சுகாதார பராமரிப்புத் துறையை டிஜிட்டல் மயப்படுத்தி துறையை புரட்சிகரமாக்குவதாக அமைந்திருக்கும். உடனுக்குடனான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குவதுடன், ஓரிடத்திலிருந்து நோயாளரை கண்காணிப்பது, தவிர்ப்பு பராமரிப்பு, உரிய காலத்தில் உதவிகள், சுகாதார பராமரிப்பு பகுப்பாய்வு, ஒட்டுமொத்த நோயாளர் பராமரிப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு போன்றன உறுதி செய்யப்படும். துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதனூடாக துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொது மக்களுக்கும் தகவல்களை எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், வினைத்திறனை மேம்படுத்தக்கூடியதாக அமைந்திருப்பதுடன், துறைக்கு முதலீட்டின் மீதான வருமானத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

ஒன்லைன் கல்வி (Online Education)

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகவும், அண்மைய பொருளாதார சவால்கள் காரணமாகவும், கல்வியை தொடர்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றுமொரு தேசிய முன்னுரிமையாக அமைந்துள்ளது. இந்த பெரும்பொருளாதார காரணிகளால் வேறெந்த மாற்றுத் தெரிவுகளுமின்றி சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்லைன் கல்வியை நோக்கி நகர வேண்டியுள்ளதால், மேலும் முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டளவு வசதிகள் காணப்படுவதுடன், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அவசியமானதாக அமைந்துள்ளது. eபயிலல் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை போன்றவற்றுக்கான தேவை எதிர்காலக் கல்வியில் முக்கிய அங்கங்களாக ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இந்தக் காரணிகளை கவனத்தில் கொண்டு, SLT-MOBITEL இனால் இலங்கையின் கல்வித் துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான படிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பரந்த fibre வலையமைப்பினூடாக நாட்டிலுள்ள 10,000+ பாடசாலைகளுக்கு அதிவேக இணைய அணுகல் வசதிகள் வழங்கப்படலாம். டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் அறிமுகத்தினூடாக செயன்முறைகள் தன்னியக்கமயப்படுத்தப்படலாம். நூலகங்களையும் டிஜிட்டல் மயப்படுத்தி அணுகச் செய்யலாம். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Learning Management Systems (LMS) கட்டமைப்புகளுக்கு அறிமுகம் செய்யப்படுவார்கள். அதனூடாக வினைத்திறனான கல்வித் துறையை கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

E-போக்குவரத்து (E-transport)

நாட்டில் நகரமயமாக்கல் அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து மற்றும் நெரிசல் போன்றன பெருளாதாரத்தில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகின்றன. பயணம் செய்கையில் ஏற்படும் நேர இழப்பு, அளவுக்கதிகமான எரிபொருள் நுகர்வு, வாகனங்களின் அதிகளவு தேய்மானம் மற்றும் அதிகளவு வீதி விபத்துகள் போன்றன தேசிய உற்பத்தித்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாட்டின் போக்குவரத்து துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு SLT-MOBITEL முன்மொழிந்துள்ளது. பல்வகைப்படுத்தப்பட்ட பயணத் திட்டங்கள், ஒன்லைன் டிக்கட் முற்பதிவுகள், பொதுப் போக்குவரத்து சேவைகளான பேருந்து மற்றும் புகையிரதம் போன்றவற்றை கண்காணிப்பதற்கான appகள், களப்பகுதிகளில் WiFi வசதிகளை வழங்குவது மற்றும் பணமில்லா கொடுப்பனவு வசதிகளை செயற்படுத்துவது போன்றவற்றினூடாக இலங்கையின் போக்குவரத்து துறையை அதிகளவு வினைத்திறனானதாகவும் உற்பத்தித்திறன் வாய்ந்ததாகவும் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.

E-விவசாயம் (E-Agriculture)

உள்நாட்டு விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, கேள்வியை நிவர்த்தி செய்ய இயலாத நிலை எழுந்துள்ளமையால், இலங்கையின் உணவு பாதுகாப்பு என்பது தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயமாகா அமைந்துள்ளது. தற்போதைய விவசாய பெறுமதி சங்கிலி – முறையற்ற காலநிலை போக்குகள் மற்றும் பயிர்களை பாதிக்கும் களைகள் மற்றும் நோய்கள், விலைத் தளம்பல்கள், கேள்வி தொடர்பான போதியளவு துல்லியமான தகவல்கள் இன்மை போன்றன விவசாயிகளின் இலாபத்தை பாதிப்பதுடன், விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு போன்றன வினைத்திறனற்றதாக அமைந்து, அதிகளவு விரயம் ஏற்படலாம் என ஒவ்வொரு கட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாய பெறுமதி சங்கிலியில் Helaviru Digital Economic Centre எனும் கட்டமைப்பினூடாக விவசாயிகளுக்கு தகவல்கள் மற்றும் உள்ளார்ந்த அம்சங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளதுடன், வெளிப்படையான கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்கான வியாபார கட்டமைப்பை உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கலை SLT-MOBITEL முன்னெடுக்கின்றது. ஸ்மார்ட் விவசாய தீர்வுகளை அறிமுகம் செய்வது மற்றும் திறன் கட்டியெழுப்பல் நிகழ்ச்சிகளினூடாக விவசாய சமூகத்தாரிடையே டிஜிட்டல் முறைமையை பின்பற்றுவதை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளையும் நிறுவனம் முன்னெடுக்கின்றது.

E-சுற்றுலா (E-Tourism)

இலங்கையைப் பொறுத்தமட்டில் சுற்றுலாத்துறை மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக பெருமளவு அவசியமான அந்நியச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் துறையாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் அண்மைக்கால உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார சவால்களின் தாக்கம் காரணமாக இந்தத் துறை தற்போது சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் போட்டிகரமான அனுகூலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் தரவு பகுப்பாய்வு மற்றும் உள்ளார்ந்த தகவல்கள் போன்றன மிகவும் முக்கியமானவையாக அமைந்திருக்கும்.

SLT-MOBITEL தற்போது நாட்டின் சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் முறையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒற்றை வெப் போர்டலை வடிவமைத்த வண்ணமுள்ளது. இந்தக் கட்டமைப்பு, மையப்படுத்தப்பட்ட சுற்றுலா ஹப் பகுதியாக அமைந்திருக்கும். இதனூடாக சுற்றுலாப் பயணிகளுக்கு தமது தங்கியிருக்கும் காலப்பகுதியை திட்டமிடுவதற்கு அவசியமான தகவல்கள் வழங்கப்படும் அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்ட தெரிவுகளைக் கொண்டிருக்கும் சுற்றுலா செயற்பாட்டாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும். விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தேவைப்படும் தரவுகள் மற்றும் உள்ளம்சங்களை இந்தக் கட்டமைப்பு வழங்கும். துறையின் விருத்திக்கு இதனை மேலும் பயன்படுத்த முடியும்.

E-நீதி (E-judiciary)

தாமதிக்கும் நீதித் தீர்ப்பானது, நியாயத்தை நிலைநாட்ட தவறிவிடும் – இதுவே இலங்கையின் சட்டத்துறையில் தற்போது காணப்படும் பாரிய பிரச்சனையாக அமைந்துள்ளது. நிலுவையிலுள்ள பெருமளவான நீதிமன்ற வழக்குகள் முதல், வழக்கொன்றின் தீர்ப்பை வழங்குவதற்கு எடுக்கும் காலம், தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள், காலம் கடந்த பழைய கட்டமைப்புகள், ஆவணங்களை நேரடியாக பார்வையிட வேண்டியமை மற்றும் நீதித்துறையினுள் போதியளவு ஒன்றிணைப்புகள் இன்மை போன்ற அனைத்தும் செயன்முறையில் தாமதங்களை தோற்றுவிப்பதுடன், வினைத்திறனற்றதாகவும் திகழச் செய்கின்றது.

இலங்கையின் சட்டத்துறைக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்துவது SLT-MOBITEL இனால் முன்மொழியப்படும் தீர்வாக அமைந்துள்ளது. டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட பதிவு பேணல் செயன்முறையை நிறுவுவது முதல், தன்னியக்கமயமான முறையில் நீதிமன்றத்தில் வழக்கு விவாதிப்பது, போக்குவரத்து தடைப்பட்டிருந்தால் மெய்நிகரான முறையில் நீதிமன்ற வழக்குகளை கேட்பது மற்றும் ஏனைய பிரிவுகளுடன் டிஜிட்டல் முறையில் இணைப்பை ஏற்படுத்துவது (உதாரணம்: பொலிஸ்), போன்றவற்றினூடாக நாட்டில் அதிகளவு வினைத்திறனான நீதிக்க் கட்டமைப்பை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.

நிதியியல் மற்றும் வங்கியியல் (Banking & Finance)

பெருமளவான மக்கள் பணியாற்றும், விளையாடும், வாழ்க்கையை முன்னெடுக்கும் சூழலில், பெருமளவான வாய்ப்புகள் இலங்கையின் வியாபாரங்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் காத்திருக்கின்றன. இந்த எதிர்காலத்துக்கு இணைப்புத் திறன் மற்றும் வேகம் போன்றன முக்கியமானவையாகும். தற்போதைய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையை எதிர்காலத்துக்கேற்ற வகையில் மாற்றியமைப்பதனூடாக இந்தத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு SLT-MOBITEL எதிர்பார்க்கின்றது. அதனூடாக, இலத்திரனியல் கொடுப்பனவுகளை முன்னெடுக்க உதவுவதுடன், இலங்கையில் e-வணிக செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் ஏதுவாக இருக்கும்.


Share with your friend
Exit mobile version