Eyeview Sri Lanka

இலங்கை கட்டளைகள் நிறுவனம் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கிறது

Share with your friend

இலங்கை கட்டளைகள் நிறுவனம் என்பது SLS தரங்களை தோற்றுவித்து நிர்ணயித்தல் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டுக்கான தேசிய அமைப்பாகும். தனது வகிபாகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகின்ற நிலையில், இலங்கையில் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்நிறுவனம் கடினமாக உழைத்து வருகிறது. அந்த வகையில், இலங்கை கட்டளைகள் நிறுவனம், 2021 செப்டெம்பர் முதல் 2022 செப்டெம்பர் வரை 1,000 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு பாரிய எண்ணிக்கையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளது. இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் மூலமாக ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த பல்வேறு வேலைத்திட்டங்களின் முதன்மை நோக்கங்கள், இலங்கை நுகர்வோருக்கு உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கு, தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவுதல், சந்தையில் நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு வலுவூட்டுதல் என்பவையாகும். நுகர்வோர் பாதுகாப்புக்கு மட்டுமின்றி மேம்பட்ட வணிக செயல்திறனுக்காகவும் தரம் மற்றும் தரப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்து தொழில்முயற்சியாளர்களுக்கு அறிவூட்டுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த பல்வேறு அமர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்வது மற்றும் சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும், இந்த தரநிலைகளை கடைப்பிடிப்பது எவ்வாறு சர்வதேச வாடிக்கையாளர்களை வெல்வதற்கும், அவர்களின் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கும் மற்றும் அவற்றைச் சென்றடைவதற்கும் உதவும் என்பது குறித்தும் அறிவை வளர்ப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி (திருமதி) சித்திகா ஜி சேனாரத்ன அவர்கள், “எமது தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளை உறுதி செய்வதன் மூலம், வணிகங்கள் நுகர்வோர் மத்தியில் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள முடியும். மேலும் சர்வதேச சந்தையில் ஒரு புகழ்பெற்ற இடமாக இலங்கையின் பெயரை நிலைநாட்டுவதற்கும் இது வழிகோலும். குறிப்பாக நாம் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களுக்கு மத்தியில், சர்வதேச தரத்திற்கு இணங்க உயர்தர ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவது, சர்வதேச சந்தைகளை கைப்பற்றி இலங்கைக்கு நீண்டகால பொருளாதார சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் எமது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் எதிர்காலத்தில் நிலைபேற்றியலுடனான, வலுவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் இந்த முயற்சியைத் தொடர விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் நடத்தப்படும் பல்வேறு செயலமர்வுகள், பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொழில்முயற்சியாளர்களுக்கு முக்கியமான கட்டமைப்புகளுக்கான சான்று அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியது. இதில் Vidatha, GMP, ISO 9001, ISO 22000, HACCP, SLS தயாரிப்பு மற்றும் இயற்கை உற்பத்தி சான்று அங்கீகாரங்கள் மற்றும் பிற கட்டமைப்புச் சான்று அங்கீகாரங்கள் அடங்கும். தேவையான சோதனை, தரப்படுத்தல், இறக்குமதி ஆய்வுகள் மற்றும் பிற முக்கியமான தேவைகள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டன.

கடந்த ஆண்டில் உணவு, விவசாயம், புடைவை மற்றும் ஆடைகள் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களை இலங்கை கட்டளைகள் நிறுவனம் இலக்கு வைத்தது. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இத்தகைய திட்டங்களால் பயனடையக்கூடிய பிற தொழில்களையும் உள்ளடக்கும் வகையில் இது விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலகங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்திப் பிரிவு, ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் உள்ளூர் பிரதேசங்களைச் சேர்ந்த பல தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.

இலங்கை கட்டளைகள் நிறுவனம் தொடர்பான விபரங்கள் 

இலங்கை கட்டளைகள் நிறுவனம் என்பது இலங்கையின் தேசிய தர நிர்ணய அமைப்பாகும். இது விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் செயல்படுகிறது. இலங்கையில் தேசிய தர நிர்ணய அமைப்பாக செயல்படுவதன் மூலம், இலங்கை கட்டளைகள் நிறுவனம் ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச தரப்படுத்தல் ஸ்தாபனத்தின் உறுப்பினராகவும் உள்ளது. சர்வதேச தரப்படுத்தல் ஸ்தாபனத்தின் உறுப்பினராக, சர்வதேச தர நிர்ணங்கள், தொழில்நுட்ப ஒழுங்குமுறைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தேசிய அளவில் சமூகத்திற்கு பரப்புவதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பொறுப்பாகும்.


Share with your friend
Exit mobile version