Eyeview Sri Lanka

இளைஞர் தொழில் வாய்ப்பை மேம்படுத்துவதற்காக ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் ‘The Final Step’ மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு 

Share with your friend

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தனது 23 ஆவது ‘The Final Step’ மென்திறன் விருத்தி பயிற்சிப் பட்டறையை 2025 ஜுலை 23 ஆம் திகதி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்திருந்தது. தொழில்நிலைக் கல்வி மற்றும் தொழில் வழங்குனர்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே காணப்படும் இடைவெளியை சீராக்கும் முயற்சியின் அங்கமாக இந்தப் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை கற்கைகள் பிரிவின் 310 க்கும் அதிகமான இறுதியாண்டு மாணவர்கள் இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றனர்.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட முழு நாள் செயலமர்வில், ஆளுமை விருத்தி மற்றும் தன்னம்பிக்கை கட்டியெழுப்பல், தனிப்பட்ட மேம்பாடு மற்றும் சமூக நன்னடத்தை மற்றும் சுயவிவரக்கோவை எழுதல் மற்றும் நேர்முகத் தேர்வு திறன்கள் பற்றிய தலைப்புகளில் ஜோன் கீல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களால் இந்த அமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தொழிற்துறையின் முன்னோடிகளைக் கொண்ட குழுநிலைக் கலந்துரையாடலினூடாக, தொழில் வழங்குனர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில்நிலை விருத்தி தொடர்பான விளக்கமளிப்புகள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருந்தன. இந்த கலந்துரையாடலில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை விவகாரங்கள் தலைமை அதிகாரி மற்றும் சர்வதேச பங்காண்மைகள் மற்றும் கைகோர்ப்புகள் சிரேஷ்ட உப தலைவர் திலீப் முத்தெனிய பங்கேற்றதுடன், பிரதான உரையை ஆற்றியிருந்தார். அவருடன், Whittall Boustead Travel லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி நாலிகா அபேசூரிய, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பாங்கசூரன்ஸ் பொது முகாமையாளர் விஷாந்த் விஜேசிங்க மற்றும் சினமன் பெந்தோட்ட பீச் ரிசோர்ட் முகாமையாளர் ஸ்ரீயாங்கனி தனபால ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

தமது பிரதான உரையின் போது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை விவகாரங்கள் தலைமை அதிகாரி மற்றும் சர்வதேச பங்காண்மைகள் மற்றும் கைகோர்ப்புகள் சிரேஷ்ட உப தலைவர் திலீப் முத்தெனிய விளக்கமளிக்கையில், “சுற்றுலாத்துறையில் இலங்கை பெருமளவு வளர்ச்சியை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. மீண்டும் ஆசியாவில் அதிகளவு நாடப்படும் சுற்றுலாத்தலமாக மாற்றமடைந்த வண்ணமுள்ளது. துரிதமாக வளர்ச்சியடையும் ஒரு துறையை நாம் அவதானிப்பதுடன், Cinnamon Life City of Dreams போன்ற புதிய முதலீடுகளினூடாக எமது கலாசாரத்தையும், இயற்கை அம்சங்களையும் நாம் மேம்படுத்திய வண்ணமுள்ளோம். இந்தத் துறையில் எதிர்காலத்தில் காலடி பதிக்கும் எதிர்பார்ப்புகளுடன், பட்டம் பயிலும் மாணவர்கள் எனும் வகையில், இன்றைய காலகட்டத்தில் நீங்கள் பல வளங்களை கொண்டிருப்பதுடன், சந்தையில் பல வாய்ப்புகளும் உங்களுக்காக காத்திருக்கின்றன. அதன் உச்ச பயனைப் பெறுங்கள். தொடர்ந்தும் பயின்று, மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, தொடர்ந்தும் துறையில் நிலைத்திருங்கள்.” என்றார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின், சுற்றுலாத்துறைக் கற்கைகள் பிரிவின் 3ஆம் ஆண்டில் பட்டம் பயிலும் மாணவரான சத்சர சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அமர்வுகளினூடாக நாம் ஒரு நேர்காணலுக்கு எப்படி உடை அணிய வேண்டும் ், எம்மை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் மற்றும் நேர்முகத்தேர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன பற்றி அறிந்து கொண்டோம். விரிவுரைகளினூடாக இந்த விடயங்களை எம்மால் பயில முடியாது. ஒரு நாள் முழுவதையும் எம்முடன் அவர்கள் செலவிட்டனர். ஜோன் கீல்ஸ் அறக்கட்டளைக்கும், முகாமைத்துவ பீடத்துக்கும் நன்றி.” என்றார்.

புகழ்பெற்ற ‘The Final Step’ மென்திறன் விருத்தி செயற்திட்டம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், 23 அமர்வுகளினூடாக 13 பல்கலைக்கழகங்களில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் திறன் விருத்தி தொடர்பில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை நீண்ட காலமாக காண்பிக்கும் அக்கறையின் வெளிப்பாடாக அமைந்திருப்பதுடன், இளைஞர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வளங்களை சமத்துவமான முறையில் அணுகச் செய்து, தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அமைந்துள்ளது.
கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு (மறுவகைப்படுத்தப்பட்ட) கவனம் செலுத்தும் பகுதிகளாகும் – இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக’ தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் ‘கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் ‘ Plasticcycle’ என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், “எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல்” என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.


Share with your friend
Exit mobile version