Eyeview Sri Lanka

இளைஞர், யுவதிகளுக்கு சுற்றுலாத் துறைக்கு பிரவேசிப்பதற்கு வாயப்பளிக்கும் Sri Lanka Tourism Job Fair and Career Expo 2025 வெற்றிகரமாக நிறைவு

Share with your friend

இளைஞர் யுவதிகளுக்கு சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் நடாத்தப்பட்ட Sri Lanka Tourism Job Fair and Career Expo நிகழ்வு கொழும்பு One Galle Face ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்புகைத் துறைக்கு பிரவேசிப்பதற்கு ஆரவங்கொண்டுள்ள மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அதில் பங்கேற்றனர். மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட தொழில் சந்தை இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள், தொழில்சார் வழிகாட்டுதல் அமர்வுகள் மற்றும் செயலமர்வுகள் ஊடாக பிரதான நிறுவனங்களுடன் இணைவதற்கு வாய்பேற்படுத்திக் கொடுத்துள்ளது.

தொழில் சந்தை நிகழ்வில் உரையாற்றிய தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த இந்த எண்ணக்கரு மூலம் பல்வேறு கூட்டிணைவு மற்றும் வாய்ப்புகள் உருவாகுமென தெரிவித்தார். “இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஒரே நோக்கத்துக்காக உழைப்பார்களானால் அந்த நோக்கத்தை வெற்றிகரமாக அடைய முடியும். இந்த தொழில் சந்தையே அதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.  நாம் எங்கே இருக்கிறோம், எவ்வாறு தொழிலொன்றை பெறுவது என்று இன்று பலருக்கும் தெரியவில்லை. அரசாங்கம் என்ற வகையில் சுற்றுலாத்துறையை மே்படுத்துவதற்கு நாம் பல விடயங்களை செய்துக்கொண்டிருக்கின்றோம். பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், மக்கள் அவர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வின்றி இருக்கிறார்கள். இவ்வாறான நிகழ்ச்சிகள் ஊடாக அவர்களுக்கு சகல விபரங்களும் போய் சேரும். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பட்டதாரிகளுக்கு மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு இத் துறைக்கு பிரவேசிப்பதற்கும், ஏற்கனவே இத் துறையில் கால் பதித்துள்ள தொழில் வல்லுநர்களுக்கு மேலும் முன்னேறவும் வாய்ப்பாக உள்ளது” அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் “சுற்றுலாத் துறையும் நிலைபேறான மாற்றமும்” எனும் சர்வதேச தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு 2025 உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு இலங்கை ஏற்பாடு செய்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி தொழில் சந்தை நடைபெற்றது. இம்முறை உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மாகாண மட்டத்திலான போட்டி நிகழ்ச்சிகளில் தொடங்கி சர்வதேச மட்டத்திலான கருந்தரங்குகள் வரை பரந்தளவிலான பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு அது அண்மைய காலங்களில் நடைபெற்ற சுற்றுலா தின கொண்டாட்டங்களில் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவக் கற்கை நிறுவகம் {SLITHM}, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை {SLTDA}, இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் {THASL} மற்றும் இலங்கை உள்ளக சுற்றுலா வழிநடத்துனர்களின் சங்கம் {SLAITO} ஆகியவை மேற்படி கொண்டாட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்புகை முகாமைத்துவ சங்கம் {AATEHM} மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலைப்பேறான சுற்றுலா பிரிவு ஆகியவையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.


Share with your friend
Exit mobile version