Site icon Eyeview Sri Lanka

உலகெங்கிலும் உள்ள கல்வி முறைகளில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் அனுபவங்கள் தொடர்பில் புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share with your friend

இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில், “Being a Teacher with Disabilities: Perspectives, Practices, and Opportunities.” அதாவது ‘மாற்றுத்திறனாளி ஆசிரியராக இருப்பது: முன்னோக்குகள், நடைமுறைகள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சிறந்ததொரு படைப்பை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. இந்த விரிவான அறிக்கையானது, இலங்கை மற்றும் ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஏனைய நான்கு நாடுகளில் உள்ள கல்வி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் ஆதரவு வலையமைப்புகள் தொடர்பில் ஆராய்கிறது.

விரிவான இந்த ஆராய்ச்சி அறிக்கை, இலங்கை, பிரேசில், ஜோர்டான், ருவாண்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில், தேசிய கல்வி முறைகளில் ஆங்கில மொழி மற்றும் பிற பாடங்களுக்கான மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கண்ணுக்குப் புலப்படும் அல்லது புலப்படாத குறைபாடுகளை  உடையவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 25 ஆசிரியர்களுடனான நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட முதன்மைத் தரவுகளின் அடிப்படையில், அவர்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைப் பணியை வழிநடத்தும் முறை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகெனாண்டனர்.

இலங்கையின் ஆசிரியர் கதைகளில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஒரே பள்ளியில் நீண்ட காலம் பணிபுரிந்த பிறகும், சிலருக்கு கால அட்டவணைகள் ஒதுக்கப்படவில்லை, அதாவது அதிகாரப்பூர்வமாக கற்பித்தல் பொறுப்புகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்பதாகும்.

சமிந்த, தனது கிராமத்தில் உள்ள ஒரு பிரதான பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றுகிறார். ‘நான் ஏழு வருடங்களாக இந்தப் பாடசாலையில் பணிபுரிகிறேன். ஆனாலும் எனக்கு இன்னமும் நேர அட்டவணை ஒதுக்கப்படவில்லை’ என்று கூறுகிறார்.

‘என்னிடம் நேர அட்டவணை இல்லாதது என் தவறு இல்லை. ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் தான் நேர அட்டவணையை வழங்க வேண்டும். நான் கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன், எனது பாடத்தில் எனக்குத் திறமை உள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். நேர அட்டவணையை வழங்க வேண்டியது அவர்களது வேலை. நானாகப் போய் கேட்க முடியாது. நான் ஏன் ஒரு பாடத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டேன் என்று, என்னிடம் வரும் பெற்றோர்களும் கேட்க முடியாது,’ என்று சமிந்த மேலும் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் நாட்டுக்கான பணிப்பாளர் ஆர்லாண்டோ எட்வர்ட்ஸ் கருத்து வெளியிடும் போது: ‘தனித்துவமான மற்றும் சமத்துவமான கல்வி முறைகளை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சிகளில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் அனுபவங்களையும் முன்னோக்குகளையும் கருத்தில் கொள்வது அவசியம். ஆசிரியர்கள் நேர்மறையான முன்மாதிரிகளாக பணியாற்றுவதிலும், கல்வித் துறையில் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் மாணவர்களுக்கான கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதோடு புரிந்துணர்வு, பச்சாதாபம் மற்றும் சம வாய்ப்புக்கான பரந்த சமூக மாற்றத்திற்கும் பங்களிக்கிறது’ என்று கூறினார்.

நேரடித் தரவுகளுக்கு மேலதிகமாக, மாற்றுத்திறனாளி ஆசிரியர்களைச் சுற்றியுள்ள முழுமையான கொள்கை மற்றும் மதிப்பாய்வின் கண்டுபிடிப்புகளை அறிக்கை வழங்குகிறது.

சர்வதேச வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு விரிவான நுண்ணறிவு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதே இந்த வெளியீட்டின் நோக்கமாகும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எடுத்துரைப்பதன் மூலம், இந்த அறிக்கையானது தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க முயல்கிறது, அதே நேரத்தில் உலகளாவிய கல்வி முறைகளுக்கான சிறந்த கொள்கைகளையும் உருவாக்குகிறது.

பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி:

பிரிட்டிஷ் கவுன்சில் என்பது இங்கிலாந்தின் கலாசார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான சர்வதேச அமைப்பாகும். இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இடையே தொடர்புகள், புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம் அமைதி மற்றும் செழுமையை நாங்கள் ஆதரிக்கிறோம். கலை, கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் எங்கள் பணி மூலம் இதைச் செய்கிறோம். நாங்கள் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ளவர்களுடன் பணிபுரிகிறோம், மேலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலைகொண்டுள்ளோம். 2022-23ல் 600 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளோம்.


Share with your friend
Exit mobile version