2025 உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் Colombo Travel Mart 2025 அங்குரார்ப்பண வைபவம் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு One Galle Face ஹோட்டலில் கடந்த செப்தம்பர் மாதம் 07 ஆம் திகதி நடைபெற்றது. சுற்றுலா அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA), இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM0), சுற்றுலாப் பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் சங்கம் (AATEHM), இலங்கை சுற்றுலா வழிநடத்துனர் சங்கம் (SLAITO), இலங்கைச் சுற்றுலா ஹோட்டல் சங்கம் (THASL), ஆகியவை மேற்படி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.

இதன் போது அனைவரையும் வரவேற்றுப் பேசிய ATEHM சங்கத்தின் தலைவர் திரு நிஹால் முகாந்திரம் சுற்றுலாத் துறையில் தலைவர்களை உருவாக்குவதில் கொழும்பு பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றுவதாகவும் இத்துறையின் வளர்ச்சிக்கு கல்விசார் கூட்டிணைவு இன்றியமையாததெனவும் குறிப்பிட்டார்.
SLTDA இன் தலைவர் திரு புத்திக்க ஹேவாவசம் கருத்து தெரிவிக்கையில் Travel Mart திட்டம் கடந்த காலங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை நாட்காட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்ததாக தெரிவித்தார். அரச மற்றும் தனியார்துறை பங்குதாரர்களுடன் வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதோடு புத்தாக்கம் மற்றும் நிலைபேறான துறை சார் வழங்கங்கள் தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கோரினார். சேவை தரம் மற்றும் விருந்தினர்களுக்கு தனித்துவ அனுபவங்களை வழங்குவதன் மூலம் இலங்கைச் சுற்றுலா எனும் வர்த்தகநாமத்தை மேலும் வலுவூட்ட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தலைமை உரையை நிகழ்த்திய திரு டேவிட் பயின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகிய விடயங்களுக்கு மேலதிகமாக நியூசிலாந்து இலங்கையுடன் தொடர்புபடும் விடயங்களில் சுற்றுலாத் துறை பெரும் முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார். ஏனைய துறைகளை தொடர்ந்து மேம்படுத்துவதோடு அந்நியச் செலாவணியை கூடுதலாக ஈட்ட வேண்டுமெனில் சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாததெனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அடுத்து வரும் மாதங்களில் இலங்கைக்கு வரும் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அவர் தெரிவித்தார். அது நிலைப்பேறானதன்மை, சமுதாயப் பங்கேற்பு மற்றும் சுழல் பாதுகாப்பை ஊக்குவிக்கின்ற நாட்டின் தேசிய சுற்றுலாக் கொள்கையுடன் ஒத்திசைவை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறிய அளவிலான ஹோட்டல்கள் தொடக்கம் பாரியளவிலான ஹோட்டல் கருத்திட்டங்கள் வரை நியூசிலாந்து முதலீட்டாளர்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் அதகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இத் துறையின் நீடித்த வளர்ச்சி கருதி ஆற்றல் நிறைந்த இளம் தலைமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பொருட்டு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் இயலளவு விருத்தி ஆகிய துறைகளை விருத்தி செய்வதற்கு கொழும்பு பல்கலைக்கழகம் ஆற்றிடும் பங்களிப்பு இங்கு பெரிதும் பாராட்டுக்குள்ளானது. இளம் பிள்ளைகள் மத்தியில் சுற்றுலா மற்றும் விருந்தோம்புகை மீதுள்ள ஆர்வத்தை தான் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். அண்மையில் தான் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் விருந்தோம்புகை முகாமைத்துவத் துறையுடன் தொடர்புடைய அறிவை பெறுவதில் இளம் தலைமுறையினரிடமிருந்து காணக்கூடியதாக இருந்த ஆக்கத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியதெனவும் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் சுற்றுலாத் துறை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.
SLAITO முன்னாள் தலைவர் நிசாத் விஜேதுங்க கருத்து தெரிவிக்கையில் சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் உள்ளக சுற்றுலா தொழிற்பாட்டுத் துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார். சேவைத்தரத்தை தக்க வைப்பதோடு தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டிய தேவையையும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க கருத்து தெரிவிக்கையில், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகக் கூறினார். இந்தத் துறை ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். விழாவைத் தொடர்ந்து, விருந்தினர்கள் கொழும்பு Travel Mart ஐ திறந்து வைத்தனர். இதில் சுற்றுலாத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன.