கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் பழமையான பாடசாலைகளில் ஒன்றான தக்சிலா கல்லூரி 2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் போது பரவலாக பேசப்பட்டிருந்தது. பரீட்சை இடம்பெற்ற காலப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, சேதமடைந்த கட்டடத்தில் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இணைந்து இந்தப் பாடசாலையின் நிலையை வெளி உலகுக்கு கொண்டு வந்திருந்தனர். இதனை கவனத்தில் கொண்ட றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட், பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு, நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தம்மாலான பங்களிப்பை வழங்க முன்வந்திருந்தது.

அறுபது மாணவர்களுடன், 1992 ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையில் தற்போது 2250 மாணவர்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் பயில்கின்றனர். எவ்வாறாயினும், அப்பாடசாலை அண்மையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்ததுடன், தமது வாழ்க்கையின் முக்கியமான திருப்பு முனையான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்திருந்த மாணவர்களையும் பாதிப்பதாக அமைந்திருந்தது. றைனோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரின் தலைமைத்துவத்தின் கீழ், பாடசாலையின் பாதிப்படைந்த கட்டடத்தை புனருத்தாரணம் செய்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான பயிலும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஹைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லமிடெட் முகாமைத்துவ பணிப்பாளரான ஈ.ஜே. ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் சிறுவர்களும் இளைஞர்களும் மாற்றத்தின் முன்னோடிகளாக திகழ்கின்றனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனவே, நாம் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் சமூகத்திலுள்ள மூத்த குடிமக்கள் எனும் வகையில், சிறந்த தலைவர்களை உருவாக்குவதற்கான உதவிகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் வாழ்க்கையிலும் பாடசாலை என்பது அடிப்படை அம்சமாக அமைந்துள்ளது. கம்பஹா, தக்சிலா கல்லூரியின் மாணவர்களுக்கு, கல்வியைத் தொடர்வதற்கு சமத்துவமான வாய்ப்பை வழங்குவதற்கு நாம் தீர்மானித்தோம். தக்சிலா கல்லூரியின் திறமை வாய்ந்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.
கடந்த 60 வருடங்களாக பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் முன்னணியில் திகழ்கின்றது. இம்முறை நிறுவனத்தினால் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்தாக அமைந்துள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படிமுறை மேற்கொள்ளப்படுகின்றது. நிர்மாணத்துறையின் ஸ்தம்பிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, கூட்டாண்மை பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் இந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுக்க நிறுவனம் முன்வந்திருந்தது.
கம்பஹா தக்சிலா கல்லூரியின் அதிபர் எம்.ஏ. அனுலா பத்மினி கருத்துத் தெரிவிக்கையில், “30 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கல்விக் கட்டமைப்பில் இணைந்துள்ள புகழ்பெற்ற பாடசாலையாக தக்சிலா கல்லூரி திகழ்கின்றது. 2021 க.பொ.த சாதாரண பரீட்சை இடம்பெற்ற போது நிகழ்ந்த அனர்த்த சூழ்நிலை முற்றிலும் எதிர்பாராததாக அமைந்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் கட்டடத்தை புதுப்பிப்பதற்கு றைனோ உதவிகளை வழங்க முன்வந்திருந்தது. திறமை வாய்ந்த மாணவர்களை தயார்ப்படுத்துவதில் அங்கம் வகித்திருந்த பாடசாலை எனும் வகையில், தற்போதைய மேம்படுத்தல்களினூடாக, சிறுவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளை மகிழ்ச்சிகரமாகவும், நிம்மதியான மனநிலையிலும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என கருதுகின்றோம். தக்சிலா கல்லூரியின் தற்போதைய மற்றும் எதிர்கால மாணவர்களுக்கு இது பெறுமதி வாய்ந்த அன்பளிப்பாக அமைந்துள்ளதுடன், மாணவர்கள் ஊக்கத்துடன் திகழ்கின்றனர்.” என்றார்.
புதுப்பிக்கப்பட்ட கட்டடம், தக்சிலா கல்லூரியின் அதிபரிடம், கம்பஹா பிராந்திய கல்விப் பணிப்பாளர் சார்பாக அழகியல் பிரிவின் பணிப்பாளர் கே.எஸ்.பி. கருணாநாயக்கவின் முன்னிலையில், முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.ஜே.ஞானம், பணிப்பாளர் ஜுட் பெர்னான்டோ, பிரதம செயற்பாட்டு அதிகாரி இந்திக ராஜபக்ச, றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் ஆகியோரின் முன்னிலையில் கையளிக்கப்பட்டிருந்தது. பாடசாலை வளாகத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் இதர பல விருந்தினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல், றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் நிறுவனம், தேசத்தின் முன்னணி கூரைத் தகடுகள் தீர்வுகள் வழங்குநர்களாக வளர்ச்சி கண்டுள்ளது. பல தசாப்த காலமாக, உயர் தரம் வாய்ந்த கூரைத் தகடுகள் மற்றும் அவற்றுடன் சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக திகழ்வதுடன், இலங்கையின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.