Site icon Eyeview Sri Lanka

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை பூர்த்தி செய்கிறது

Share with your friend

துறைமுக நகரம் என்பது சேவைகளை ஏற்றுமதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வலிமை பெற்ற முதலாவது விசேட பொருளாதார வலயமாகும். இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனமான CHEC Port City Colombo இன்றுவரை, 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை கடலிலிருந்து நிலத்தை மீட்பதற்காக முதலீடு செய்துள்ளதுடன் மற்றும் அனைத்து உள்ளக பயன்பாட்டு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் CHEC Port City Colombo (Pvt) Ltdநிறுவனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. துல்சி அலுவிஹார அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடலிலிருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றதும், 269 ஹெக்டேயர் நிலம் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரம் பொருளாதார ஆணைக்குழு சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக, 2021 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் ஆணைக்குழுவிடம் காணி கையளிக்கப்பட்டது. எனவே 269 ஹெக்டேயர் நிலம் இலங்கை அரசுக்கு சொந்தமானது.CPCC க்கு எந்த காணி உரிமையும் இல்லை, ஆனால் இந்நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டை மீட்டெடுப்பதற்கு ஈடாக, அதாவது இன்றுவரை முதலிடப்பட்ட சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு ஈடாக, சில பகுதிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது சுமார் 116 ஹெக்டேயர் என்பதுடன், இதில் 46 நிலப்பகுதிகளின் மூலம் முதலீட்டை மீட்க முடியும். எனவே துறைமுக நகரத்தினுள் இருக்கும் நில உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர் எப்பொழுதும் இலங்கை அரசாங்கம் அல்லது இலங்கை அரசின் சார்பாக ஆணைக்குழுவே செயல்படும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் 23 நிலங்களை கட்டுமான அபிவிருத்திக்கு உட்படுத்த இந்நிறுவனம் இனங்கண்டுள்ளது. அதாவது சுமார் 65 ஹெக்டேயர் பரப்பளவாக இது காணப்படுகின்றது. இதை நிர்மாணிக்க தேவையான முதலீடு சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீட்டை முன்னெடுக்க முடியும் என நிறுவனம் நம்புகிறது. மேலும், இதன் பொருளாதார விளைவு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவனம் தனது திட்டத்தைச் செயல்படுத்த 5.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 120,000 நேரடி வேலை வாய்ப்புகள் தோற்றுவிக்கப்படும். மிக முக்கியமாக, இது இயங்கத் தொடங்கியதும், கொடுப்பனவு சமநிலையின் தாக்கம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கிட்டியதாக இருக்கும். எனவே வெளிநாட்டு நாணயத்தின் தேறிய வரவு 1.8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கிட்டியதாக இருக்கும்.

அடுத்த தசாப்தத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு முகங்கொடுக்கவுள்ளது. நெருங்கிய அண்டை நாடாக, இந்திய வளர்ச்சியின் அந்த அலையில் இலங்கையும் சவாரி செய்ய முடியும். வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையை போட்டித்தன்மையுடன் நிலைநிறுத்த முடிந்தால், இந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது. 

துறைமுக நகரத்திற்கு பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள் ஏற்றுமதியாகக் கருதப்படும், ஏனெனில் அவற்றுக்கு வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகள் செலுத்தப்படும். எனவே, துறைமுக நகரம் குறுகிய காலத்தில் உருவாக்கும் தாக்கத்தை கற்பனை செய்து பாருங்கள், ஐந்து ஆண்டுகளில் ஆதன கட்டுமான அபிவிருத்திக்காக மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்க உள்ளது. உள்ளூர் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் துறைமுக நகரத்திற்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி, வெளிநாட்டு நாணயத்தில் தமது வருவாயைப் பெறலாம்.

தெற்காசியாவில் உள்ள இந்தியா, வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் நிச்சயமாக சீனா ஆகிய நாடுகளில் துறைமுக நகரத்தின் முதன்மை இலக்கு சந்தை உள்ளது. இருப்பினும், தொற்றுநோய் பரவியமை மற்றும் நாட்டின் நிலைமை உகந்ததாக காணப்பட்டிருக்காமை காரணமாக இதில் பின்னடைவு ஏற்பட்டது. துறைமுக நகரம் விசேட பொருளாதார வலயச் சட்டத்தை இயற்றியதன் மூலம், ஒற்றைச் சாளர முதலீட்டு வசதியாக மாறியுள்ள ஆணைக்குழு, வணிகத்தை ஆரம்பிப்பது, கட்டுமான அனுமதி, விசாக்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் அங்கீகரிக்கும் ஒற்றை அதிகார நிறுவனமாக உள்ளது. இது வணிகச் சிக்கல்களை எளிதாகச் சமாளிக்க உதவும்.

துறைமுக நகரம் விசேட பொருளாதார வலய சட்டத்தின்படி வணிக தலைநகரத்தை இயக்குவதன் மூலம், கடல்கடந்த சேவைகளாக கருதப்படல் வேண்டும் மற்றும் இது நூறு சதவீத சேவை ஏற்றுமதியாகும். அதாவது இதன் வருவாய் வெளிநாட்டு நாணயத்தில் கிடைக்கப்பெறும். எனவே, அதிக சிரமமின்றி வெளிநாட்டு நாணயத்தில் சுதந்திரமாக பரிவர்த்தனை செய்யலாம். சிங்கப்பூர் செய்துள்ளதைப் போல, பிராந்திய தலைமையகமாக இதனை நாம் ஊக்குவிக்கலாம். நாம் தெற்காசியாவில் அணிசேரா நாடு என்ற வகையில், கொழும்பு துறைமுக நகரத்தை நாம் சிறப்பாக நிலைநிறுத்தினால் அங்கு ஒரு பெரிய முன்மொழிவுக்கான வாய்ப்பு உள்ளது. 

எமது நாடு உண்மையில் தனது கேந்திர அமைவிடத்தின் அனுகூலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. துபாய் அல்லது சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது இலங்கையில் பல சலுகைகள் உள்ளன. பல்லுயிரினம், சுற்றுலா போன்றவை சிறப்பானவை. திட்டமிட்ட நகரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு துடிப்பான வணிக மாவட்டத்தை கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் வீதியைக் கடந்து உள்ளே சென்றால் அங்குள்ள வாழ்க்கை முறையின் தரம் கடற்கரை வாழ்க்கை சலுகைகள், அதிநவீன பொழுதுபோக்கு சலுகைகள், விருந்தோம்பல் போன்றவற்றின் விசேட ஆடம்பரங்களை அனுபவிக்க முடியும். எனவே இது முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த முன்மொழிவாக இருக்கும் என்று இந்நிறுவனம் நம்புகிறது. துபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஐந்தில் ஒரு பங்கு செலவுடன் வணிக செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும். வாழ்வதைப் பொறுத்தவரை இது துபாய், சிங்கப்பூரை விடவும் மிகவும் போட்டித்தன்மையுடன் உள்ளது. 


Share with your friend
Exit mobile version