சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் (ITRC), 10 ஆம் கட்டம் அக்டோபர் 1 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சர்வதேச பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் என 30 இற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுலாத் தினத்துக்கு இணையாக நடைபெற்ற இந் நிகழ்வானது, இலங்கையின் அறிவுசார் சுற்றுலாத் துறையின் மைல்கல்லாகும். பேராசிரியர் டி.ஏ.சி. சுரங்க சில்வாவின் தலைமையில், கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீடத்தின் நிலைப்பேறானச் சுற்றுலா பிரிவினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்வி நிபுணர்களுக்கும் சுற்றுலாத் துறைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வரும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க மாநாட்டை தொடக்கி வைத்தார்.

“நிலைப்பேறான சுபீட்சம் கருதிய சுற்றுலாத் துறை மாற்றம்” எனும் தொனிப்பொருளிலான இந்த மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், போரத்துக்கல், கொரியா, ஜப்பான், இந்தியா, இந்தோனிசியா மற்றும் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இதில் பங்களிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 100 இற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு சர்வதேச ரீதியாக நிலைப்பேறான சுற்றுலாத் துறையொன்றை உருவாக்குதல் தொடர்பான ஆராய்ச்சிகளும் இங்கு வெளியிடப்பட்டன. 50 இற்கும் மேற்பட்டோர் சுற்றுலாத் துறையின் பல்வேறு கோணங்களுக்குரிய ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்தனர். சர்வதேச ரீதியாக சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. கூடியிருந்தோர் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை அறிவு உள்ளீடு மற்றும் பல்பரிமாண தீர்வுகளை நிலைப்பேறான சுற்றுலாத் துறையொன்றை உருவாக்குவதில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்திய – இலங்கை சுற்றுலாத் துறையின் ஊடாக மேலும் வலுவான பிராந்திய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும் பரஸ்பர பொருளாதார நலன்களை பெறுவதற்குமான சாத்தியம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் நாட்டின் சுற்றுலாத் துறை தொடர்பான சான்றுகளை அடிப்படையாக கொண்ட ஏராளமான தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன. அதன் மூலம் சுற்றுலாத்துறை போட்டித்தன்மையுடன் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விதம் வெளிப்பட்டது. அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும், உயர் தரத்திலான தொழில்வாய்ப்புகளை உருவாக்கவும் நீண்ட கால அபிவிருத்தி இலக்குகளை அடையவும் சுற்றுலாத் துறை தனித்துவமான பங்களிப்பை வழங்குகிறது. “நிலைப்பேறான சுற்றுலா அபிவிருத்திக்கு சர்வதேச நற்பழக்கங்கள்” என்பதை தொனிப்பொருளாக கொண்ட சர்வதேச தலைவர்களின் கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது. இராஜதந்திர அலுவலர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இதன் போது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு இலங்கை ஏற்பாடு செய்த நிகழ்ச்சித்திட்டங்களின் இன்னுமொரு கட்டமாக இந்த மாநாடு நடைபெற்றது.