செலான் வங்கி பிஎல்சியின் இஸ்லாமிய வங்கிப் பிரிவு (SBK IBU) 2025ஆம் ஆண்டு SLIBFI விருதுகளில் மதிப்புமிக்க “ஆண்டின் இஸ்லாமிய நிதி ஒப்பந்தம்” எனும் விருதை வென்றுள்ளது. இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஒரு முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்திற்கு நிதியுதவி அளித்ததை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டது. இந்த திட்ட முன்மொழிவை வழிநடத்திய செலானின் பெருநிறுவன வங்கியின் திட்ட நிதியின் (Corporate Banking) ஆதரவுடன் இப் பரிவர்த்தனை ஆரம்பிக்கப்பட்டதுடன் SBK IBU அதன் இஸ்லாமிய கட்டமைப்பு மற்றும் ஆவணங்களை நிர்வகித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில், 10 MW தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி நிலையத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நோக்க வாகனமான (SPV) Sooryashakthi (Pvt) Ltdஇற்கு சொத்து/ செயற்திட்ட முதலீட்டு நிதி (குறைந்து வரும் முஷாரகா) ஊடாக SBK IBUஆல் தனித்து நிதியளித்தமைக்காக இந்தப் பாராட்டு வழங்கப்பட்டது. சூரியபல சங்க்ராமய திட்டத்தின் கீழ் போட்டிமிக்க ஏல செயன்முறை மூலம் வழங்கப்பட்ட இந்த சூரிய மின்சக்தி திட்டம், 2030 மற்றும் அதற்கு அப்பால் இலங்கையின் பரந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவையின் முக்கிய பகுதியாகும்.
ரூ.2.3 பில்லியனைத் தாண்டியுள்ள இத் திட்டத்தின் மொத்தச் செலவு, இந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் அளவு மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Sooryashakthi (Pvt) Ltd என்பது விதுலங்கா PLC மற்றும் Windforce PLC இடையேயான கூட்டு நிறுவனமான Solar Universe (Pvt) Ltdஇன் முழு உரிமைத்துவம் பெற்ற துணை நிறுவனமாகும். மேலும் தற்போது Solar Universe (Pvt) Ltd, செலான் நிறுவனத்தின் இஸ்லாமிய வங்கிப் பிரிவால் நிதியளிக்கப்பட்ட சூரிய மின்சக்தி முயற்சியின் முதல் கட்டத்தை மேற்பார்வையிடுகிறது.
இந்தப் பரிவர்த்தனை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மட்டுமல்ல, இலங்கையில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதிக்கும் (IBF) ஒரு மைல்கல் தருணமாகும். ஒப்பீட்டளவில் 20 ஆண்டுகால இளம் வரலாற்றைக் கொண்டிருந்தாலும், IBF துறையானது, ஷரியா-இணக்க கட்டமைப்புகளை பயன்படுத்தி பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை ஆதரிக்கும் அதன் திறனை நிரூபித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்படும் குறைந்து வரும் முஷாரகா கட்டமைப்பு, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை வழங்கும் இஸ்லாமிய நிதியின் மதிப்பை நிரூபிக்கிறது.
இந்த சூரிய மின்சக்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புக்கு 10 MWஐ வழங்குவதுடன் ஆண்டுதோறும் 18.25 GWh மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளியீடு ஆண்டுதோறும் சுமார் 5 பில்லியன் லீற்றர் எண்ணெய் சேமிப்பையும் 12,709 மெட்ரிக் டொன் CO₂ உமிழ்வை குறைப்பதற்கும் வழிவகுப்பதோடு 2050ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காபன் நடுநிலைமைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
“இவ் விருது, நிலையான வளர்ச்சி மற்றும் புதுமையான நிதி தீர்வுகளுக்கான எங்கள் உறுதியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியின் முதல் கட்டத்திற்கு நிதியளித்ததன் மூலம் தேசிய ஆற்றல் இலக்குகளை முன்னேற்றும் திட்டங்களை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்ளும் அதே வேளை இஸ்லாமிய நிதி, அபிவிருத்திக்கு சேர்க்கும் தனித்துவமான மதிப்பைக் காட்டுகிறது.” என்று செலான் வங்கியின் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் இஸ்லாமிய வங்கித் தலைவர் சமீர் மொஹமட் கூறினார்.
மேலும், இத் திட்டம் உள்ளூர் பொறியியல் மற்றும் திட்ட செயற்படுத்தல் திறன்களையும், வணிக மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளுடன் ஒத்துப்போகும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடுகளுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஏனைய இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு (IFIகள்) புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நிதியளிப்பிற்கான ஒரு வலுவான முன்னுதாரணத்தை அமைக்கிறது.
ஆகஸ்ட் 2018இல் தொடங்கப்பட்டதிலிருந்து SBK IBU, இஸ்லாமிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிதியளிப்பில் முன்னோடிப் பங்காற்றியுள்ளதுடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை ஆதரித்து வருகிறது.