தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது புதிய அனுபவ நிலையமான ‘The Arena’ வை கொழும்பில் நிறுவியுள்ளது. அடுத்த தலைமுறை புத்தாக்கமான வாடிக்கையாளர் மையப்படுத்திய தீர்வுகள் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ள இந்த நிலையத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தமது வாழ்க்கைமுறை அனுபவங்களை மாற்றியமைத்துக் கொள்வது எவ்வாறு என்பது பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்த Arena, கொழும்பு 7 இலிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய டிஜிட்டல் உலகில், இல்லங்கள் மற்றும் வியாபாரச் சூழலில் புத்தாக்கமான தீர்வுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். SLT-MOBITEL இன் Arena அறிமுகத்துடன், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு, அவர்களின் வாழ்க்கைமுறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலமைந்த சேவைகள் மற்றும் தீர்வுகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மதிநுட்பமான புத்தாக்கங்களும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் இந்த அனுபவ நிலையமானது, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழிற்துறையின் அடையாளமாக அமைந்திருக்கும்.” என்றார்.
SLT-MOBITEL மற்றும் முன்னணி கண்காட்சி நிலையமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியன இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளன. Arena வில் டிஜிட்டல் வாழ்க்கை முறைகளுக்கு அவசியமான பிரத்தியேகமான உள்ளம்சங்கள், வியாபாரங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகள் மற்றும் eSports வலயப் பகுதி போன்றன அடங்கியுள்ளன. சமூகத்துக்கு இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவியாக அமைந்திருக்கும் என்பது தொடர்பான விளக்கங்களை வழங்கும் பகுதியாக இது அமைந்துள்ளது.
டிஜிட்டல் வாழ்க்கைமுறை arena வில், Smart Home அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதனூடாக 5G பரீட்சார்த்த அனுபவங்கள் மற்றும் ஸ்மார்ட் கட்ஜெட்கள் போன்றன வழங்கப்படும்.
வியாபாரங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு வரையறைகளற்ற வாய்ப்புகளை வழங்கும் இந்த Arena வில், கள்வுட் தீர்வுகள், டிஜிட்டல் சேவைகள், வலையமைப்பு தீர்வுகள், இணையத் தீர்வுகள், டேட்டா நிலைய தீர்வுகள், சைபர் பாதுகாப்பு தீர்வுகள், குரல் மற்றும் கைகோர்ப்புகள், தகவல் பரிமாற்ற தீர்வுகள், களியாட்ட மற்றும் IOT தீர்வுகள், NFC தீர்வுகள், மென்பொருள் விருத்தி மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தீர்வுகள் போன்றன வழங்கப்படும். இந்த நிலையம், நேரலை ஸ்ட்ரீமிங் நிலையமாகவும் செயலாற்றும்.
eSports வலயத்தினூடாக புத்தாக்கமான கணனி மற்றும் கொன்சோல் கேமிங் வசதிகள், போட்டித் தொடர்கள், eSport கட்டமைப்பு மற்றும் டேட்டா சேவைகள் போன்றன அதிவேக இணைய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்படுகின்றன.
மதிநுட்பமான புத்தாக்கங்களும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் இந்த அனுபவ நிலையத்துக்கு விஜயம் செய்யுமாறு பொது மக்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.