- முதல் 100 தனிப்பயனாக்கப்பட்ட மின்னியக்க வண்டிகள் விநியோக பங்காளர்களிடம் கையளிப்பு
- Uber தளத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் இன்னொரு முன்முயற்சி
- தனிப்பயனாக்கப்பட்ட, விநியோகத்துக்கு ஏற்ற மின்னியக்க சைக்கிள்கள்: 100+ கிமீ வரையான வரம்பு மற்றும் மணித்தியாலத்துக்கு 30 கிமீ அதிகபட்ச வேகம்
இலங்கையரால் மிகவும் விரும்பப்படும் உணவு மற்றும் மளிகைப்பொருட்களின் விநியோக தளமான Uber Eats, இன்று 100 மின்னியக்க இருசக்கர வண்டிகளை அதன் தளத்தில் இணைத்துள்ளது. ‘Voltage Edition’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மின்னியக்க சைக்கிள்கள், இலங்கையின் மிகப்பெரிய சைக்கிள் உற்பத்தியாளரான Lumala நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்றன. மட்டுமல்லாமல், இந்த சைக்கிள்கள் விநியோக தேவைகளுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சைக்கிள்கள் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியவை. அத்தோடு, அதிகபட்சமாக மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கக்கூடியதாக இருக்கும். கடந்த ஆண்டு இலங்கையில் சைக்கிள் மூலம் விநியோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்திய முதல் தளமாக Uber Eats இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மின்னியக்க சைக்கிள்கள் மூலம் வழக்கமான சைக்கிள்களை விட நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும். அத்தோடு, மோட்டார் சைக்கிள்களை விட இந்த சைக்கிள்களை எளிதாக பராமரிக்கலாம். இந்த சைக்கிள்கள் மின்களனை 4 மணிநேரத்தில் மின்னேற்ற முடியும். ஆகையால் விநியோகம் அல்லாத ஒய்வு நேரத்தின் அளவை இது வெகுவாகக் குறைக்கின்றதோடு, எரிபொருள் செலவுகளையும் குறைக்கின்றது. இந்த முயற்சி, குறைந்த முயற்சியுடன் பெரிய தூரத்தை கடக்க எளிதாக்குகின்றது. இதன்மூலம், விநியோக பங்காளர்கள் அதிக விநியோகங்களில் ஈடுபட்டு அதிக வருமானத்தை ஈட்ட முடியும். Uber இன் இந்த முன்முயற்சியானது, 2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து விநியோகப் பயணங்களையும் நிலையான இயங்குதலை நோக்கி நகர்த்தும் Uber Eats இன் உலகளாவிய தொலைநோக்கு பார்வையை நோக்கிய ஒரு படியாகும்.
Uber Eats தனது 100 விநியோகப் பங்காளர்களுக்கு 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்னியக்க சைக்கிள்கள் வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்கு அனுசரணை வழங்கிய நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விநியோகப் பங்காளர்களில் 90 பேர் பெட்ரோலில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தினர். ஏனைய 10 பேர் சாதாரண சைக்கிள்களைப் பயன்படுத்தினர். அதேவேளை, Uber நிறுவனம், Lumala மின்னியக்க சைக்கிள்களுக்கான மேம்படுத்தலில் 30% தள்ளுபடியையும், உதிரி பாகங்களுக்கு 15% தள்ளுபடியையும் அதன் விநியோக பங்காளர்களுக்கு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் இலங்கையின் மாண்புமிகு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, Uber Eats இன் நிலைத்தன்மையை நோக்கிய செயல்பாடுகளைக் குறித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்தோடு, தெரிவுசெய்யப்பட்ட விநியோக பங்காளர்களுக்கு மின்னியக்க சைக்கிள்களையும் வழங்கினார். அத்தோடு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. செங் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டார். மேலும், Uber இன் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க உறவுகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் மைக் ஆர்கில் மற்றும் Uber Eats Sri Lankaவின் இடைக்கால பொது முகாமையாளர் பிவித்துரு கொடிகார மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, “தொழில்நுட்பம் சார்ந்த தளங்கள் இலங்கை மக்களின் பிரயாணம் மற்றும் இணையம் ஊடாக உணவை பெற்றுக்கொள்ளும் முறை ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் ஒரு பாரிய மாற்றத்திற்கு வழிவகுத்தன. இப்போது, பசுமை இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் மற்றொரு பெரிய மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எரிபொருளில் சார்ந்திருப்பதைக் குறைத்து, நமது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். பசுமைப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதும் அதனை கட்டியெழுப்புவதும் இன்று நமது முன்னுரிமைகளில் ஒன்றாகும். Uber Eats இன் மின்னியக்க சைக்கள்களை அவர்களது தளத்திற்குள் உள்வாங்குவதற்கான முடிவை நாங்கள் வரவேற்பத்தோடு இந்த நிறுவனம் இலங்கையில் நிலையான இயங்குதலை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.”
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது விநியோக பங்காளர்கள் எரிபொருள் மீது சார்ந்திருப்பதைக் குறைக்கும் முகமாக Uber Eats நிறுவனம் கடந்த ஆண்டு சைக்கிள் டெலிவரிகளை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இன்று, இலங்கையில் Uber Eats இன் மொத்த விநியோகங்களில் 10 சதவீதம் சைக்கிள்கள் மூலமாக இடம்பெறுகின்றன. மின்னியக்க சைக்கிள்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் Uber Eats ஆனது நிலையான இயங்குதலை நோக்கிய அடுத்த படியை எடுத்து வைப்பது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் அதன் தளத்தில் மின்னியக்க சைக்கிள்கள் மற்றும் மின்னியக்க ஸ்கூட்டர்களுக்கு வழி வகுக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து Uber இன் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க உறவுகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் மைக் ஒர்கில் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் இலங்கையின் மீது அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அத்தோடு Uber Eats இன் சிறந்த மாமிசங்களை இந்த நாட்டிற்கு தொடர்ந்து கொண்டு வருகிறோம். குறிப்பாக, சைக்கிள் விநியோகங்களை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் தளமாகியதன் பின்னர், 2040 ஆம் ஆண்டளவில் நிலையான இயங்குதலை நோக்கி செல்வதற்கான எமது உலகளாவிய தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, தனிப்பயனாக்கப்பட்ட மின்னியக்க சைக்கிள்களை நாங்கள் இன்று அறிமுகப்படுத்துகிறோம். நாட்டில் நிலையான இயங்குதலை ஊக்குவிக்கும் முகமாக, எங்களது விநியோக சேவைக்கு விரைவில் மின்னியக்க ஸ்கூட்டர்கள் மற்றும் மின்னியக்க மோட்டார்பைக்குகளையும் சேர்த்துக்கொள்ள எண்ணியுள்ளோம்.”
Voltage Edition மின்னியக்க சைக்கிள்கள் மின்னியக்க ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பைக்குகளுடன் போட்டியிடக்க்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஒருமுறை மின்னேற்றினால் 100 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை pedal assist மூலம் பயணிக்கக்கூடிய திறன் கொண்டவை. அத்தோடு, hrottle full electric cruising மூலம் 60 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வதற்காக, பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் இரவு நேரத்திற்காக LED ப்ரொஜெக்டர் மற்றும் LED டெயில் லைட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மின்னியக்க சைக்கிள்கள் விநியோகத்திற்கான பைகளை வண்டியின் பின்புறத்தில் தனியாக வைப்பதற்கான ஒரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பைகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மோட்டார் ஒலி குறைக்கப்படுவதால் சாலைகளில் சத்தம் இல்லாமல் பயணிக்கும்.
சமீபத்தில், Uber Sri Lanka தனது தளத்தில் மின்னியக்க இரு சக்கர வாகனங்களை ( EV) அறிமுகப்படுத்த Sling Mobility யுடன் ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையை அறிவித்திருந்தது. இலங்கையில் நிலையான இயங்குதலை முன்னெடுப்பதற்காக, Uber நிறுவனம் தொடர்ந்து ஒரு கூட்டாண்மை சார்ந்த மாதிரியை அணுகுவதோடு, OEMகள், வாகனத்தொகுதி பங்காளர்கள், மற்றும் EV உள்கட்டமைப்பு பங்காளர்கள் ஆகியோருடன் கைகோர்க்கும்.
Uber Eats பற்றி
Uber Eats ஆனது, உள்ளூர் உணவகங்களைத் தேடவும் அவற்றைக் கண்டறியவும், ஒரு பொத்தானை அலுத்துவதன் மூலம் உணவை பெற்றுக்கொள்ளவும், நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் விநியோகம் செய்யவும் உபயோகப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Uber Eats செயலியை அறிமுகப்படுத்தியதில் இருந்து இந்த வணிகமானது Uber இன் தொழில்நுட்பம் மற்றும் சரக்கியக்க நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உலகளவில் 6,000 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சேவை செய்துள்ளது.