இலங்கையின் முதல்தர ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வருட மத்திய விநியோக விருதுகள் 2022 நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. முகவர் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இரு பிரிவுகளையும் சேர்ந்த 450 க்கும் அதிகமான ஆலோசகர்கள் மற்றும் கணக்கு முகாமையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வாத்துவ, ப்ளு வோட்டர் ஹோட்டலில் இடம்பெற்றது.
பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு எம் அனைவருக்கும் நெருக்கடிகள் நிறைந்ததாக அமைந்துள்ளது. சந்தைச் சூழல்களில் பல தடைகள் எழுந்த போதிலும், முதல் அரையாண்டு காலப்பகுதியில் நிறுவனம் முன்நோக்கி நகர்ந்திருந்ததுடன், பல்வேறு பிரிவுகளில் முன்னேற்றங்கள அவதானித்திருந்தது. இந்த முன்னேற்றங்களை எய்துவதற்கு எமது ஆலோசகர்கள் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அப்பால் சென்று, நிதியளவில் பாதுகாப்பாக திகழ்வதற்கு உதவும் வகையில் இயங்குகின்றமைக்காக எமது சகல ஆலோசகர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
சிலாபம் பிராந்தியத்தின் சானக அப்புஹாமிக்கு, தேசிய புதிய வியாபார சம்பியன் எனும் உயர்ந்த விருது முகவர் பிரிவில் வழங்கப்பட்டது.
கூட்டாண்மை நாளிகை புதிய வியாபார சம்பியன் வெற்றியாளராக பிரனீத் விமலசிறி தெரிவு செய்யப்பட்டிருந்தார். கயான் பண்டாரவின் தலைமைத்துவத்தின் கீழ் வோட் பிளேஸ் பிராந்தியம் சிறந்த பிராந்தியத்துக்கான விருதை சுவீகரித்தது. யோகநாதன் லட்சுமிஹரன் தலைமையில் இயங்கும் கிழக்கு வலயம், சிறிய நடுத்தரளவு பிரிவில் சிறந்த வலயத்துக்கான விருதை பெற்றுக் கொண்டது. பாரிய பிரிவில் சிறந்த வலயத்துக்கான விருதை வட வலயம் பெற்றுக் கொண்டது.
பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சிறந்த செயற்பாடுகளை பதிவு செய்திருந்தமைக்காக எமது அணியினர் தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன். நிபுணத்துவம் மற்றும் சேவைச் சிறப்பு போன்றவற்றின் அடிப்படையில் எமது ஆலோசகர்கள் மற்றும் கணக்கு முகாமையாளர்கள் வழிநடத்தப்படுகின்றனர். அவற்றினூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. மேலும், சகல ஆலோசகர்களுக்கும் எமது நவீன பயிற்சிகளினூடாக தமது திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, தமது தொழில் நிலைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்கும் கலாசார முறைமை எமது நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எமது வெற்றிகரமான செயற்பாடுகளில் ஆலோசகர்கள் முக்கிய அங்கமாக அமைந்துள்ளனர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அவர்கள் தொடர்ந்து தம்மை விருத்தி செய்து, சிறந்த வெற்றிகரமான சாதனையை எய்தச் செய்யும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் எப்போதும் கவனம் செலுத்துகின்றோம். அத்துடன், தொழிற்துறையில் எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவையை பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்பு வழங்குகின்றோம்.” என்றார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 15.7 பில்லியனைக் கொண்டுள்ளது. 2022 ஜுன் மாதமளவில் ஆயுள் நிதியமாக ரூ. 51.5 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.