Site icon Eyeview Sri Lanka

19 ஆவது ஆண்டாகவும் அட்லஸ் சிப்சவியினால் ரிதீ விஹாரை நன்கொடைத் திட்டத்தினூடாக குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களுக்கு பெறுமதி சேர்க்கும் பணி முன்னெடுப்பு

Share with your friend

இலங்கையின் முன்னணி காகிதாதிகள் மற்றும் பயிலல் சாதன வர்த்தக நாமமான அட்லஸ், தனது வருடாந்த ரிதீ விஹாரை நன்கொடைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. தொடர்ச்சியான 19ஆவது வருடமாகவும் சுமார் 2300 குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அட்லஸ் சிப்சவி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ரிதீ கம, ரிதீ விஹாரையைச் சேர்ந்த சங்கைக்குரிய திப்பட்டுவே புத்தரக்கித தேரரின் மேற்பார்வையின் கீழ் நன்கொடை வழங்கல் இடம்பெற்றது. இந்த ஆண்டு நன்கொடை வழங்கும் நிகழ்வின் போது 100 மாணவ பௌத்த பிக்குகளுக்கும் அட்லஸ் கொப்பிகள் வழங்கப்பட்டிருந்தன.

அட்லஸ் அக்சிலியா கம்பனி. பிரைவட் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர்களுக்கு 62 வருடங்களுக்கு மேலாக சேவைகளை வழங்கி வருவதுடன், அவர்களின் கடினமான சூழ்நிலைகளைப் பற்றி இரகசியமான முறையில் நாம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறந்த கல்வி பயிலல் தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு எம்மாலான பங்களிப்புகளை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம். ரிதீ விஹாரையுடனான எமது நிகழ்ச்சித் திட்டம் சுமார் இரண்டு தசாப்த காலமாக முன்னெடுக்கப்படுகின்றது. எமது தேசத்தின் எதிர்கால சந்ததியினருக்கு உதவும் எமது நடவடிக்கைகளை அட்லஸ் சிப்சவி நடவடிக்கைகளின் கீழ் கொண்டு வந்துள்ளோம். மேலும், அட்லஸ் புத்தகமொன்றை எவரும் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அட்லஸ் சிப்சவி புலமைப் பரிசில் நிதியத்துக்கு ஒரு பகுதி பங்களிப்பு செய்யப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகள் அவர்களின் பெற்றோரின் இழப்பு மற்றும் பொருளாதார சிக்கல் நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவக்கூடிய வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு சிப்சவி மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்திருந்தோம்.” என்றார். 

இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் சங்கைக்குரிய திப்பட்டுவே புத்தரக்கித தேரர் கருத்துத் தெரிவிக்கையில், “அட்லஸ் மற்றும் ரிதீ விஹாரை நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மையினூடாக, கடந்த 18 வருட காலப்பகுதியில் ஆயிரக் கணக்கான சிறுவர்களுக்கு தமது கல்வியைத் தொடர உதவியாக அமைந்திருந்தது. பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில் அட்லஸ் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் தொடர்பில் அட்லஸுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

சிறுவர்களின் நலன்புரிச் செயற்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்துள்ள அட்லஸ் சிப்சவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து, இலங்கை முழுவதிலும் காணப்படும் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்கள் மத்தியில் நிவாரணத்தை ஏற்படுத்தவும் வருடாந்தம் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் 22,000க்கும் அதிகமான சிறுவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேலும், நாடு முழுவதையும் சேர்ந்த பின்தங்கிய சமூகங்களிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தக அன்பளிப்புகளை மேற்கொள்வதுடன், சமமான பயிலல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வலுவூட்டுகின்றது. கடந்த ஆண்டில் மாத்திரம் அட்லஸினால் 14,400 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு தமது கல்வியைத் தொடர்வதற்கான ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

பெருமளவான சிறுவர்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், பல்வேறு பங்காண்மைகளினூடாக சிப்சவி நிகழ்ச்சித் திட்டத்தை விரிவாக்கும் எண்ணத்தை அட்லஸ் கொண்டுள்ளது. பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் சிறுவர்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் சிப்சவி கவனத்தில் கொண்டு, தேசிய மட்டத்தில் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சமூக ஈடுபாட்டை மேம்படுத்திக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. 
முன்னர் சிலோன் பென்சில் கம்பனி (பிரைவட்) லிமிடெட் என அழைக்கப்பட்ட அட்லஸ் அக்ஸிலியா கம்பனி பிரைவட் லிமிடெட், 1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஸ்தாபிக்கப்பட்டது முதல், பாடசாலை காகிதாதிகள் உற்பத்தியில் சந்தையின் முன்னோடி எனும் நிலைக்கு உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு தமது கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு அவசியமான சாதனங்களை வழங்குவது எனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ‘அட்லஸ்’ இலங்கையின் நுகர்வோருடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், இலங்கையர்கள் அதிகளவு விரும்பும் நாமமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் 2018 ஆம் ஆண்டின் பெருமைக்குரிய தேசிய தர விருதையும் வெற்றியீட்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் சர்வதேச வினைத்திறன் சிறப்பு விருது அடங்கலாக பல சர்வதேச விருதுகளையும் சுவீகரித்திருந்தது.


Share with your friend
Exit mobile version