Site icon Eyeview Sri Lanka

2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிலைபேறான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

Share with your friend

சரக்குக் கையாளல், ஓய்வு விருந்தோம்பல் மற்றும் முதலீடுகள் போன்ற துறைகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளதுடன், 34 நாடுகளின் 70 க்கும் அதிகமான நகரங்களில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ள இலங்கையின் முன்னணி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2022 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உறுதியான தந்திரோபாய நிறைவேற்றம் மற்றும் அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்தல் போன்றவற்றினூடாக எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ரூ. 235.1 பில்லியனை (வருடாந்த உயர்வு +146%) வருமானமாகவும், தேறிய வட்டியாக ரூ. 36.9 பில்லியனையும் (வருடாந்த உயர்வு +156%) மற்றும் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 20.1 பில்லியனையும் (வருடாந்த உயர்வு +220%) பதிவு செய்துள்ளது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீஃவ் யூசுஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “எளிமையான சொத்துக்களைக் கொண்ட எமது வியாபார மாதிரி, சர்வதேச வலையமைப்பு, உறுதியான ஐந்தொகை மற்றும் வியாபாரத்தை ஒன்றிணைந்து அணுகுவது மற்றும் உறுதியான தலைமைத்துவம் போன்றன, சகல பங்காளர்களுக்கும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியை பிரத்தியேகமான பெறுமதிக் கூறாக அமையச் செய்துள்ளன.” என்றார்.

குழுமம் தொடர்ச்சியாக உறுதியான வருமதிகளைப் பதிவு செய்திருந்ததுடன், கடந்த பன்னிரண்டு மாதங்களில் (trailing twelve month) 96.16% எனும் பங்கு உரிமை மீதான  வருமானத்தை (ROE) பதிவு செய்து, குழுமத்தினால் பின்பற்றப்பட்டிருந்த வினைத்திறன் வாய்ந்த சொத்துகள் பயன்பாட்டு தந்திரோபாயங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்பாட்டு ஈடுபாடு போன்றவற்றில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கத்தின் காரணமாக அந்நியச் செலாவணி வருமதி ரூ. 6.9 பில்லியனை பதிவு செய்திருந்ததுடன், நிறுவனத்தின் தேறிய சொத்துப் பெறுமதி ரூ. 25 பில்லியனினால் அதிகரித்திருந்தது. இதனூடாக கடந்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் வியாபாரக் கோவை மற்றும் ஐந்தொகை போன்றன கட்டியெழுப்பப்பட்டுள்ளமைக்கான மேலதிக ஆதாரமாக இது அமைந்துள்ளது.

சரக்குக் கையாளல் துறையில் சர்வதேச சந்தைச் சூழல்கள் மற்றும் பாரம்பரியமான கேள்வி குறைவான போக்குகள் போன்றன நிலவிய போதிலும், தந்திரோபாயத்தில் கவனம் செலுத்துவதனூடாக, அதன் செயற்பாடுகளை வெளிப்படுத்த முடிந்திருந்ததுடன், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் துறையினால் தொடர்ச்சியான வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்தது. இந்தப் பிரிவின் வருமானம் ரூ.233 பில்லியனாகவும் (வருடாந்த உயர்வு +146%), தேறிய இலாபம் ரூ. 36.2 பில்லியனாகவும் (வருடாந்த உயர்வு +154%) மற்றும் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 18.8 பில்லியனாகவும் (வருடாந்த உயர்வு +183%) பதிவாகியிருந்தது.

யூசுஃவ் மேலும் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளினூடாக பெறுமதிகளை உருவாக்குவது, உறுதியான கொள்முதல் செயன்முறைகளினூடாக திறனை கட்டியெழுப்பல் மற்றும் வினைத்திறனான செயற்பாட்டு சிறப்பினூடாாக வியாபாரத்துக்கு ஆதரவளித்தல் போன்றவற்றை மையப்படுத்தி எமது வியாபாரத்தின் மீதான பன்முகப்படுத்தப்பட்ட வழிமுறை அமைந்திருந்தது. வாடிக்கையாளர் விரிவாக்க தந்திரோபாயம் என்பது முறையாக சிந்தித்து மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், அதனூடாக பிரதான துறைகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தக நாமங்களுக்கு நிறுவனத்தினால் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது.” என்றார்.

பிரதான சந்தைகளில் குறைந்தளவு கேள்வி காணப்பட்டமையால், ஆகாய சரக்கு பொருட்கள் பிரிவு இந்த காலாண்டில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. மாறாக, கடல்மார்க்க சரக்கு கையாளல் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.  இந்தத் துறையின் மீது காண்பிக்கப்பட்டிருந்த அதிகளவு கவனத்தினூடாக இந்த உறுதியான வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. உறுதியான பங்காளர் வலையமைப்பு, அதிகரித்த வாடிக்கையாளர் ஊடுருவல், மேம்படுத்தப்பட்ட ஆற்றல்திறன் போன்றன, கடல்சார் சரக்குக் கையாளல் பிரிவுக்கு உறுதியான நிலையை பேண உதவியிருந்தன.

EFL, சர்வதேச சரக்கு கையாளல் செயற்பாடுகளில் பிரதானமாக கவனம் செலுத்தியிருந்ததுடன், உள்ளக சரக்குக் கையாளல் பிரிவில் தனது ஆற்றல்களை மேம்படுத்தி, பிரதானமாக வடக்கு அமெரிக்க சந்தையில் தனது செயற்பாடுகளை வியாபித்திருந்தது.

குழுமத்தினால் கட்டியெழுப்பப்பட்டிருந்த தூர நோக்குடைய கொள்முதல் தந்திரோபாயத்தினூடாக திறனைக் கட்டியெழுப்பவும், எல்லைப் பெறுமதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. கொள்முதல் செயன்முறையில் ஏற்கனவே காணப்படும் உறவுகளை வலிமைப்படுத்துவது மற்றும் புதிய உறவுகளை கட்டியெழுப்புவது போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

யூசுஃவ் நிறைவாக தெரிவிக்கையில், “மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சர்வதேச சந்தைச் சூழல்கள் தளம்பல்கள் நிறைந்ததாக காணப்பட்டன. வட அமெரிக்க சந்தைகளில் நுகர்வோர் கேள்வி என்பது பணவீக்கத்தின் தாக்கத்தினால் மந்தமடைந்திருந்ததுடன், சர்வதேச வலு நெருக்கடியின் காரணமாக எண்ணெய் விலைகளிலும் அழுத்தம் ஏற்பட்டிருந்தது. சீனாவில் நிலவிய நீடித்த முடக்கநிலைகளால் விநியோகம் குறைந்திருந்ததுடன், விநியோக சங்கிலியில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆகாய மற்றும் கடல்வழி சரக்கு கட்டணங்களில் சீராக்கத்தை அவதானிக்க முடிந்த போதிலும், தற்போதும் உயர்ந்த மட்டங்களில் காணப்படுகின்றன.” என்றார்.

உள்நாட்டு சந்தையில் சவால்கள் நிலவிய போதிலும் ஓய்வு விருந்தோம்பல் துறை உறுதியான பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. வியாபாரத்தினால் தனது பிரிவை மீளமைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நெகிழ்ச்சியான மற்றும் வினைத்திறனான தொழிற்பாட்டு மாதிரியை பின்பற்றுகின்றமை போன்றன இந்த பெறுபேறுகளினூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவினால் வருமானமாக ரூ. 727 மில்லியன் (வருடாந்த உயர்வு +379%) மற்றும் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ.  233 மில்லியன் (வருடாந்த உயர்வு +736%) போன்றன பதிவு செய்யப்பட்டிருந்தன. வரலாற்று ரீதியில் இந்தத் துறையினால் இதுவரையில் பதிவாகியிருந்த சிறந்த பெறுபேறாக இது அமைந்துள்ளது. கூட்டாண்மை பிரயாணப் பிரிவினால் இந்த பெறுபேறுகளில் உயர் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

முதலீட்டுத் துறை சிறந்த நிலையில் காணப்பட்டதுடன், வருமானமாக ரூ. 1.4 பில்லியனையும் (வருடாந்த உயர்வு +100%), வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 17.3 பில்லியனையும் (வருடாந்த உயர்வு +608%) பதிவு செய்திருந்தது. இதற்கு, ஏற்றுமதி செயற்பாடுகளினூடாக பிரதான பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. துறையின் இலாபத்தில் குழுமத்தின் பங்கிலாபங்களான ரூ. 16.0 பில்லியனும் அடங்கியுள்ளது. குறைந்த தளம்பல்களுடன் உயர் எல்லை தயாரிப்புகளினுள் பிரவேசிக்கும் பிரிவுசார் தந்திரோபாயத்தினூடாக துறையின் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்ப வியாபாரமும் வளர்ச்சியைப் பதிவு செய்து, குழுமத்தின் ஒட்டுமொத்த வினைத்திறனில் முக்கிய பங்காற்றியிருந்தது.

வியாபாரத்தின் மீது தனது பரிபூரண வழிமுறையை வெளிப்படுத்தி, எக்ஸ்போலங்கா தொடர்ந்தும் தனது சூழல், சமூக மற்றும் ஆளுகைசார் (Environmental, Social, and Governance – E.S.G) செயற்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தது. ஒட்டுமொத்த தந்திரோபாய இலக்குகளுக்கமைய, சில முன்நோக்குடைய செயன்முறைகளை குழுமம் பின்பற்றியிருந்தது.

உறுதியற்ற சந்தைச் சூழலில், நுகர்வோரின் மாற்றமடையும் கேள்வி முறைகள், துரித விநியோக சங்கிலிகள் மற்றும் அதிகளவு டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றினூடாக பாரிய சூழல் வியாபிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சவால்களை நிவர்த்தி செய்வது தொடர்பில் நிறுவனம் எனும் வகையில் எக்ஸ்போ தன்னை அர்ப்பணித்திருக்கும் என்பதுடன், தனது சகல பங்காளர்களுக்கும் பெறுமதி உருவாக்கம் என்பதில் கவனம் செலுத்தி கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து பயன்பெறுவதில் கவனம் செலுத்தும்.


Share with your friend
Exit mobile version