Eyeview Sri Lanka

2025 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறந்த சுகாதாரத் துறைச் செயற்பாடுகளால் 45.2 பில்லியன் வருவாயை ஈட்டிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share with your friend

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN), டிசம்பர் 31, 2024 இல் (9MFY25) முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாயாக 45.2 பில்லியன் ரூபாவை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது முன்னைய ஆண்டை விட 6.7% அதிகரிப்பாகும்.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் மொத்த இலாப விகிதம் 30.8% ஆக அமைந்திருந்தது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 31.3% ஆக இருந்ததை விட குறைவாக உள்ளது, இது முக்கிய செயல்பாடுகளின் மீள்தன்மையை பிரதிபலிக்கிறது. நிகர இலாபம் (PAT) மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் 14.1% குறைந்து 4.7 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. இதற்கு நுகர்வோர் வர்த்தக நாமங்கள் பிரிவில் இலாப விகிதம் குறைவு, மற்றும் விவசாயத் துறையில் அதிகரித்த வரிவிதிப்பு தாக்கமே பிரதான காரணமாகும்.

குழுமத்தின் மருத்துவத் துறை சன்ஷைனின் மொத்த வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது, இது மொத்த வருவாயில் 54.9% பங்கைக் கொண்டுள்ளது. குழுவின் நுகர்வோர் வர்த்தக நாமங்கள் மற்றும் விவசாயத் துறைகள் முறையே 31.8% மற்றும் 13.3% பங்களிப்பை மொத்த வருவாயில் வழங்கியுள்ளன.

செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “சன்ஷைன் குழுமம் எங்கள் முக்கிய வணிகத் துறைகளில் வலுவான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. கடன் மதிப்பீடுகள் மேம்பட்டு பொருளாதாரம் மிதமான நிலைத்தன்மையைக் காண்பித்தாலும், நுகர்வோர் வாங்கும் திறனில் நுண் பொருளாதார அழுத்தங்கள் தொடர்கின்றன, இது குழுவிற்கு சவாலாக உள்ளது, குறிப்பாக எங்கள் நுகர்வோர் வர்த்தக நாமங்களுக்கு சவாலாக. எவ்வாறாயினும், இந்த சவால்களை நாங்கள் சமாளிக்கும் திறனில் நம்பிக்கை கொண்டுள்ளோம் மற்றும் வரும் காலாண்டுகளில் நிலைப்புத்தன்மையை பராமரிக்க முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் முன்னேறும்போது, எங்கள் அனைத்து வணிகத் துறைகளிலும் நிலையான வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறோம். மேலும், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இன் சாதாரண பங்கு மூலதனத்தை பிரிக்க முடிவு செய்துள்ளோம், இது எங்கள் முதலீட்டாளர்களுக்கு சந்தை அணுகல் மற்றும் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.” என தெரிவித்தார்.

ஹெல்த்கெயார்

குழுமத்தின் மருத்துவத் துறை அதன் வலுவான வருவாய் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டதுடன், மருந்து முகவர், விநியோகம் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளில் அதிகரித்த அளவுகளின் ஒத்துழைப்புடன் 17.8% ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பைப் பதிவு செய்தது. மேலே குறிப்பிட்டுள்ள துறைகளில் வருவாய் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இத்துறையின் இலாபம் அதிகரித்தது, மேலும் EBIT இலாப வரம்புகள் 2025ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 17.9% ஆக உயர்ந்தன (9MFY24 இல் 16.2% உடன் ஒப்பிடுகையில்).

குழுமத்தின் மருந்து உற்பத்தி வணிகமான Lina Manufacturing, 101.5% ஆண்டுக்கு ஆண்டு என்ற குறிப்பிடத்தக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது Metered Dose Inhaler (MDI) Plantஇல் அதிகரித்த உற்பத்தி அளவுகளால் ஏற்பட்டது.

நுகர்வோர் வர்த்தக நாமங்கள்

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகங்களை உள்ளடக்கிய நுகர்வோர் வர்த்தக நாமங்கள் துறை, 14.4 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது 9MFY25 இல் 3.1% ஆண்டுக்கு ஆண்டு சிறிய வீழ்ச்சியைக் காட்டுகிறது. Branded Tea மற்றும் Confectionery (உள்நாட்டு வணிகம்) வணிகங்களின் வருவாய் 17.4% ஆண்டுக்கு ஆண்டு குறைந்துள்ளது, இது முக்கியமான காலகட்டத்தில் Confectionery பிரிவில் குறைந்த விற்பனை அளவுகளால் ஏற்பட்டது. நுகர்வோருக்கு VAT ஓரளவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், 9MFY25 இல் 13.3% ஆண்டுக்கு ஆண்டு மதிப்பு சுருக்கம் இருந்தபோதிலும், Branded Teaஇன் விற்பனை அளவு 1.4% ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், Confectionery பிரிவின் வருவாய் 30.0% ஆண்டுக்கு ஆண்டு குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதி பிரிவின் வருவாய் 30.0% ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.

வேளாண்மை வணிகம்

வட்டவளை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி. (CSE: WATA) மற்றும் வட்டவளை டெய்ரி லிமிடெட் (WDL) ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குழுவின் விவசாயத் துறை, 9MFY25 இல் Palm Oil பிரிவில் குறைந்த விலைகள் காரணமாக 7.1% ஆண்டுக்கு ஆண்டு வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்து 6.0 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. இந்த விளைவு, திருத்தப்பட்ட வரி விகிதங்களுடன் சேர்ந்து, இத்துறையின் இலாபத்தை பாதித்தது, இதன் விளைவாக 9MFY25 முடியும் காலகட்டத்தில் நிகர இலாப விகிதம் 31.2% ஆக உள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 40.8% ஆக இருந்தது. பால் வணிகம் 9MFY25 இல் 916.5 மில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 1,088.5 மில்லியன் ரூபாவாக இருந்தது, இது விற்பனை அளவு மற்றும் விற்பனை விலை இரண்டிலும் குறைவு காரணமாக ஏற்பட்டது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தொடர்பாக

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத்தில் பெறுமதியை உருவாக்குவதன் மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு’ பங்களிக்கும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.

1967 இல் ஸ்தாபிக்கப்பட்ட குழுவானது, தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee Confectionary மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 55 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. மேலும் அந்த துறைகள் 2024 இல் “வேலை செய்வதற்கான சிறந்த இடம்” என்று சான்றளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version