29ஆவது வருடாந்த NCE ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், இலங்கையின் மாபெரும் அலுமினிய உற்பத்தியாளரான Alumex PLC, தங்க விருதை சுவீகரித்திருந்தது. ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமாகத் திகழும் Alumex, மத்திய பிரிவில் “எந்திரங்கள் மற்றும் எளிய பொறியியல் தயாரிப்புகள்” பிரிவில் தங்க விருதை பெற்றுக் கொண்டது. அதன் மூலம் நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முன்னணி பங்களிப்பாளராக திகழ்வதுடன், முன்னணி ஏற்றுமதியாளர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.
தற்போதைய தொற்றுப் பரவலுக்கு மத்தியில் ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு 2021 என்பது சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்தது. இந்த ஆண்டின் NCE ஏற்றுமதி விருதுகளினூடாக மீட்சி மற்றும் மீண்டெழுகைக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், ஏற்றுமதித் துறையைச் சேர்ந்தவர்களின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், தேசிய பொருளாதாரம் மற்றும் தொழிற்துறைக்கு ஆற்றும் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது.
Alumex PLC முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவெல கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய கௌரவிப்பைப் பெற்றுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இதனூடாக எமது உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை தொடர்ச்சியாக வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. எமது ஏற்றுமதி தந்திரோபாயத்துக்காக கௌரவிக்கப்பட்டிருந்தமைக்கு மேலாக, சர்வதேச வியாபாரத் தேவைகளை தொடர்ச்சியாக நிவர்த்தி செய்த வண்ணமுள்ளது. தொழிற்துறையின் நிலைபேறான எதிர்காலத்துக்காக இந்த சூழலுக்கு நட்பான செயன்முறைகளின் வெற்றிகரமான செயற்பாடுகளையும் இந்த விருது உறுதி செய்துள்ளது.” என்றார்.
முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட அலுமினிய உற்பத்தி செயற்பாடுகளை 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல் பேணி வரும் Alumex, இலங்கையின் முன்னணி மற்றும் விசேடத்துவம் வாய்ந்த வணிக, தொழிற்துறை, வதிவிட மற்றும் கட்டட வடிவமைப்பு அலுமினிய தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக அமைந்துள்ளது. நிலைபேறாண்மைக்கு தன்னை அர்ப்பணித்து, உலகளாவிய ரீதியில் காணப்படும் தொழிற்துறைகளை நியமத்துவப்படுத்திய வண்ணமுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தைக்கு நாட்டின் சென்றடைவை முன்னிலைப்படுத்தியிருந்த Alumex, துரித வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் எய்தியிருந்தது. தற்போது தனது உற்பத்திகளை அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, கென்யா, மாலைதீவுகள், நேபாளம், நியுசிலாந்து, சீஷெல்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், உலகளாவிய ரீதியில் தனது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்த வண்ணமுள்ளது.
நிலைபேறான உற்பத்தி செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில், நிறுவனத்தின் முழு அலுமினிய தயாரிப்பு பிரிவுக்கும் இலங்கை Green Building Council இனால் Eco-Label சான்று வழங்கப்பட்டிருந்தது.
சர்வதேச ரீதியில் ஐந்து பிராந்தியங்களில் சர்வதேச பிரசன்னத்தைக் கொண்டுள்ள, 16 துறைகளில் தனது வர்த்தக செயற்பாடுகளைப் பேணும் இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமாக Alumex திகழ்கின்றது. நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களிப்புச் செய்வதுடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 4.2% பங்களிப்பை பதிவு செய்யும் ஹேலீஸ், நிலைபேறான புத்தாக்கத்தைப் பின்பற்றுவதில் சம்பியனாகத் திகழ்வதுடன், இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகரமான கதைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.