Eyeview Sri Lanka

30% மான ஆடைத் தொழிலாளர்களுக்கு ஜூன் இறுதிக்குள் முதல் கட்ட தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

Share with your friend

தனது ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மற்றும் ஆடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் முயற்சிகளின் விளைவாக கூட்டு ஆடை மன்றம் (JAAF) கொவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பு மருந்தை ஆடைத் தொழிலில் மொத்த தொழிலாளர்களில் சுமார் 30% வீதமானோருக்கு ஜூன் மாத இறுதிக்குள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

JAAF நிறுவனத்தின் பொதுச்செயலாளர் டியூலி குரே கூறுகையில், சுகாதார அமைச்சின் நெருங்கிய ஒத்துழைப்புடன் மற்றும் அமைச்சர் நமல் ராஜபக்ஷவின் நேரடி ஆதரவுடன், தமது மன்றத்திலுள்ள ஏராளமான ஆடைத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது.

‘இந்த சமீபத்திய தடுப்பூசி திட்டத்திற்கு முன்னர், கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக எமது பணியாளர்களில் 5% பேர் மட்டுமே தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பு மருந்தை பெற முடிந்தது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களில், மொத்த ஆடைத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு தேவையான முதல் கட்ட தடுப்பு மருந்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்க முடிந்தது. இது எமது ஊழியர்களின் ஆரோக்கியத்தை நோக்கிய ஒரு பெரிய படியாக நாங்கள் பார்க்கிறோம். ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பான எங்களது முன்பிருந்த கவலைகளைத் தீர்த்து வைத்த அதிகாரிகளுக்கும் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.’ என அவர் தெரிவித்தார். சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தடுப்பூசி செலுத்தும் செயல்முறை உயர் மட்டத்தில் இருந்தது, தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு மற்றும் தொற்றுநோய்க்கு ஏற்ப தம்மை தயார்படுத்திக் கொள்வதற்காக உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. உற்பத்தித் துறையிலும் ஏனைய இடங்களிலும் உள்ள எமது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளுக்கு இணங்க செயற்பட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.’ என குரே மேலும் கூறினார். ‘எமது  ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்ப உறுப்பினர்களும் விரைவில் பாதுகாப்பாக அவர்களின் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமெனவும் நாங்கள் நம்புகிறோம்.’

இலங்கை ஆடைத் தொழிலில் உள்ள மொத்த 300,000 ஊழியர்களில் சுமார் 30% பேர் 2021 ஜூன் மாத இறுதியில் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக் கொண்டனர்.

இலங்கை முழுவதிலுமுள்ள ஆடைத் தொழில் சுமார் 300,000 இலங்கையர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தை வழங்குகிறது.

‘நோய்த்தடுப்பு மருந்துகள் இதேவிதமாக வழங்கப்படுவதன் மூலம், ஆடைத் தொழிலாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் முதல் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகஸ்ட் மாதத்திற்குள், அந்த எண்ணிக்கை 80%ஆக இருக்கும். அனைத்தும் திட்டமிட்ட படி நடந்தால், டிசம்பர் மாதத்திற்குள் எமது அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி பெற்று பாதுகாப்பாக வேலைக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறோம். தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப உதவிய சமூகங்களுக்கும், ஆடைத் தொழில் மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்திற்கும் இது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும்.’ என குரே கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்க JAAFஇன் உறுப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன, இதனால் ஆடைத் தொழிலில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் விரைவாக தடுப்பூசியை வழங்க முடியும்; இந்த தடுப்பூசியின் அடுத்த கட்டம், பணியாளர்களைத் தாண்டி, அவர்களது குடும்பங்களுக்கும், அவர்கள் வாழும் மற்றும் பணிபுரியும் சமூகங்களுக்கும் விரிவுபடுத்துவதாகும். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் பற்றி

ஒன்றிணைந்த ஆடை சங்கங்கள் மன்றம் இலங்கையை உலகின் முதல் தர ஆடை விநியோக இடமாக மாற்றுவதற்கான இறுதி இலக்கை வழிநடத்தும் சிறந்த அமைப்பாகும். விநியோகச் சங்கிலி பங்காளிகள், ஏற்றுமதி சார்ந்த ஆடை உற்பத்தியாளர்கள், கொள்வனவு செய்யும் மத்திய நிலையங்கள் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச பிராண்டுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 5 சங்கங்களை JAAF பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


Share with your friend
Exit mobile version