Eyeview Sri Lanka

53 ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபட் கனிஷ்ட பாடசாலைகள் தடகள சம்பியன்ஷிப் 2024 வெற்றிகரமாக பூர்த்தி

Share with your friend

53ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபட் கனிஷ்ட பாடசாலைகள் தடகள சம்பியன்ஷிப் 2024 வெற்றிகரமாக பூர்த்தியடைந்தது. மாத்தறையில் இந்தப் போட்டிகள் இளம் திறமையாளர்களின் குழுநிலை செயற்பாடுகள், விளையாட்டு பண்புகளை வெளிக் கொண்டு வந்து நிறைவடைந்திருந்தது. ரிட்ஸ்பரி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போட்டிகளினூடாக, இலங்கையின் பாடசாலை மட்ட போட்டிகளுக்கு ஆதரவளிப்பதில் வர்த்தக நாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கை பாடசாலைகள் தடகள சம்மேளனத்தினால் (SLSAA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் 18000 முதல் 20000 வரையான இளம் தடகள வீரர்கள் பங்கேற்றிருந்தனர். 12 வயதுக்குட்பட்டது முதல் 15 வயதுக்குட்பட்டது வரையான வயதுப் பிரிவினருக்கு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் ஆர்வத்துடன் இந்தப் போட்டிகளில் பாடசாலைகளின் இளம் போட்டியாள மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். திறமைகளையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியிருந்த இந்த இளம் தடகள வீரர்கள் போட்டிகரமான தெரிவு செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். ஆரம்ப சுற்று போட்டிகள் பண்டாரகம, எம்பிலிபிட்டிய, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வென்னப்புவ ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு, மாரிஸ் ஸ்டெலா கல்லூரி 82 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. கொட்டாஞ்சேனை சென் பெனடிக்ட் கல்லூரி அணி 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரி அணி 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

பெண்கள் பிரிவில் வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலை 60 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. நீர்கொழும்பு, ஆவே மரியா கன்னியர்மடம் அணி 51 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், மாத்தறை சுஜாதா வித்தியாலய அணி 38 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

ஆண்கள் பிரிவின் சிறந்த தடகள வீரராக, கோனகல மகா வித்தியாலயத்தின் டி.ஏ.எஸ். சமல்க, 14 வயதுக்குட்பட்ட நீளம் பாய்தல் போட்டியில் 6.54m பதிந்து 824 புள்ளிகளுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலையின் டி.ராஜபக்ச, சிறந்த பெண் தடகள வீராங்கனையாக 15 வயதுக்குபட்ட நீளம் பாய்தல் போட்டியில் 6.04m பதிந்து 1007 புள்ளிகளுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மொத்தமாக 11 புதிய சாதனைகள் பதியப்பட்டிருந்ததுடன், தடகள வீரர்களின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆண்கள் பிரிவில் 15 வயதுக்குட்பட்ட ஜவலின் வீசலில் கொழும்பு 10, சென் ஜோசப் கல்லூரியின் எம். ராஜசிங்க 56.07M பதிந்து சாதனை படைத்ததுடன், பெண்கள் பிரிவில் வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலையின் டி.ராஜபக்ச 15 வயதுக்குபட்ட நீளம் பாய்தல் போட்டியில் 6.04m பதிந்து சாதனை நிலைநாட்டியிருந்தார்.

CBL ஃபுட்ஸ் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “53ஆவது சேர் ஜோன் டாபட் கனிஷ்ட பாடசாலைகள் தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ந்தும் பாடசாலைகளின் தடகள நிகழ்வு நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இளம் தடகள வீரர்களின் ஊக்கமளிக்கும் திறமைகளைக் காண்பதனூடாக, இலங்கையில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் எமது அர்ப்பணிப்புக்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது. இளம் தடகள வீரர்களுக்கு தமது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தி விளையாட்டில் சிறப்பை எய்துவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க ரிட்ஸ்பரி தன்னை அர்ப்பணித்துள்ளது.” என்றார்.

இலங்கை பாடசாலைகள் தடகள வீரர்கள் சம்மேளனத்தின் தலைவர் டி.ஏ.எஸ்.எஸ். விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “53ஆவது சேர் ஜோன் டாபட் கனிஷ்ட பாடசாலைகள் தடகள சம்பியன்ஷிப் போட்டிகளினூடாக, இலங்கையின் பாடசாலைமட்ட தடகள வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரிட்ஸ்பரி உடனான பங்காண்மையுடன், எம்மால் உயர் நியமங்களை பேண முடிந்துள்ளதுடன், இளம் தடகள வீரர்களுக்கு தமது கனவுகளை நோக்கி பயணிக்க மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது. இலங்கையின் அடுத்த தலைமுறை தேசிய தடகள வீரர்களை தயார்ப்படுத்துவதில் ரிட்ஸ்பரியின் ஆதரவு பாராட்டுதலுக்குரியது.” என்றார்.

இலங்கை முழுவதையும் சேர்ந்த இளம் தடகள வீர திறமைசாலிகளை இனங்கண்டு கட்டியெழுப்புவதில் முக்கிய கட்டமைப்பாக இந்த சம்பியன்ஷிப் அமைந்திருப்பதுடன், பாடசாலை மட்ட விளையாட்டுகளின் விருத்தியில் முக்கிய கட்டம் எனும் அதன் நிலையை தொடர்ந்து பேணுகின்றது.


Share with your friend
Exit mobile version