இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது.
Acuity Partners முன்பு HNB மற்றும் DFCC வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், இது நிதி சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற பல துணை நிறுவனங்கள் மூலம் செயல்பட்டது, அவையாவன:
- Acuity Partners (Pvt) Ltd: நிறுவன நிதி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.
- அக்யூட்டி செக்யூரிட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட்: இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க பத்திரங்களுக்கான முதன்மை வர்த்தகர்.
- அக்யூட்டி ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்: கொழும்பு பங்குச் சந்தையின் உறுப்பினராகவும், முன்னணி பங்கு தரகர் நிறுவனமாகவும் உள்ளது.
- LVL PLC: ஒரு வணிக மூலதன நிறுவனமாகும், மேலும் LVEF PLC இல் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது.
- LVEF PLC: ஆற்றல் துறையில் வணிக மூலதன முதலீடுகளில் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனம்.
இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும், மதிப்பை உருவாக்குவதன் மூலமும் இலங்கையின் நிதி சேவைத் துறையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்த மாற்றத்துடன், HNB Investment Bank, இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை தீர்வுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளை வழங்கும். இந்த கையகப்படுத்தல், HNB Investment Bankஇன் செயல்பாடுகளை அதன் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்திசைக்கவும், அதன் வலுவான நிதி அடித்தளத்தையும் நிபுணத்துவத்தையும் அதிகபட்சமாக பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி சேவைத் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்தவும் HNB எடுத்துள்ள மூலோபாய படியாகும்.
இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்ற HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த அவர்கள், “HNB குடும்பத்தின் முழு உரிமையுடன் கூடிய துணை நிறுவனமாக Acuity Partnersஐ அன்புடன் வரவேற்கிறோம், மேலும் HNB Investment Bank என அதன் புதிய அடையாளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கையகப்படுத்தல் மற்றும் மறுபெயரிடல் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான முதலீட்டு வங்கி தீர்வுகளை வழங்குவதற்கும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய மூலதன சந்தைகளில் எங்கள் இருப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் எங்கள் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.” என்று கூறினார்.
HNB Investment Bank இற்கு மாற்றம் செய்வதன் மூலம் புதிய வணிக வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமும், பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு ஏற்ற சேவைகளை வழங்குவதன் மூலமும் HNB இன் சந்தை முன்னிலை மற்றும் திறன்களை வலுப்படுத்தி வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிறுவனம் HNB இன் தூரநோக்குப் பார்வையுடன் இணைந்த புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, அதன் முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தும். மேலும், உயர்தர சேவை மற்றும் புத்தாக்கமான நிதி தீர்வுகளை வழங்குவதற்கு HNB இன் பரந்த வாடிக்கையாளர் வலையமைப்பு மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் திறன்களையும் அதிகபட்சமாக பயன்படுத்தும்.
இந்தப் படிகள், தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், ஒரு முழுமையான நிதி தீர்வுகள் வழங்குநராக தனது பங்கை வலுப்படுத்துவதற்கும் HNB கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. மேலும், புத்தாக்கமான உத்திகள் மற்றும் குறிப்பிடத்தக்க, நீடித்த முதலீடுகள் மூலம் பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்கு வங்கி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
“இந்த மறுபெயரிடல் HNB குழுமத்திற்கு மிகவும் சிறப்பான தருணம். இதன் மூலம், எங்கள் பங்குதாரர்களுக்கு தனித்துவமான மதிப்பை வழங்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எங்கள் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் புத்தாக்கங்களை முன்னெடுப்பதற்கும், இலங்கையின் நிதித் துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என HNB Investment Bankஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரே அபேவர்தன தெரிவித்தார்.