அண்மையில் நடைபெற்ற ‘CONNECT – அரச பால வடிவமைப்பு 2021’ போட்டியில் SLIIT இன் பொறியியல் பீடத்தின் பொறியியல் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட SLIIT ட்ரான்ஸ்போமர்ஸ் அணி தனது வடிவமைப்புத் திறன் மற்றும் புத்தாக்கத் திறனின் ஊடாக பல்கலைக்கழகப் பிரிவில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டியானது கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான இராஜாங்க அமைச்சினால் நடத்தப்பட்டது.
வெற்றிபெற்ற அணியில் எம்.பி.என்.அஹமட், எச்.எஸ்.எம்.இஸ்ஸதீன், கே.யதுஷன், எம்.டபிள்யூ டில்ஷாட் அஹமட், எம்.என்.எம்.நஜில், வி.விவேக் மற்றும் எம்.எம்.அஃபிர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இந்த அணிக்கு 350,000 பணப் பரிசும், பங்கு பற்றியமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டன.
தமது அனுபவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரான்ஸ்போமர்ஸ் அணியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகையில், “பட்டதாரி வாழ்க்கையில் நாம் பெற்றுக் கொண்ட அறிவு இந்த வெற்றியை அடைவத்கு உதவியாக இருந்தது. எமது இந்தப் பயணம் முழுவதிலும் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காக சிவில் பொறியியல் திணைக்களத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்” என்றனர்.
வீதி வலையமைப்பை இணைக்கும் பாலங்களின் கட்டமைப்பை நவீன மயப்படுத்துவதற்கு விசேட முன்னுரிமை அளித்திருக்கும் இராஜாங்க அமைச்சு, இதன் ஊடாக 2000 கிராமியப் பாலங்களை இலக்காகக் கொண்டுள்ளது. பாலங்களை நிர்மாணிப்பதில் பல சவால்கள் அடையாளம் காணப்பட்டதால், பணியை முடிக்க புதுமையான பொறியியல் தீர்வுகள் இன்றியமையாதவை.
‘CONNECT – அரச பால வடிவமைப்பு 2021’ போட்டியானது பாடசாலைப் பிரிவு, பல்கலைக்கழகப் பிரிவு மற்றும் திறந்த பிரிவு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. புத்தாக்கம், கட்டடக்கலை வரைபடங்கள், கைகளினால்/கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வடிவமைப்புக்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வழங்குவது பல்கலைக்கழகப் பிரிவில் சமர்ப்பிப்பதற்கான அடிப்படைத் தேவையாக அமைந்தது.
CONNECT போட்டியானது கிராமப்புற பாலங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை விரைவாக முன்னெடுத்து வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேவையான தங்களின் இலக்குகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். இந்தப் போட்டியானது வருடாந்த நிகழ்வாக நடத்தப்படவிருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். மேலும், இந்தப் போட்டியானது பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சி நடைமுறைகளை தொழில்துறையில் கொண்டு செல்வதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையேயும் செயலில் உள்ள அறிவுப் பகிர்வை மேம்படுத்துவதற்கும் சிறந்த தளத்தை வழங்குகிறது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.