Eyeview Sri Lanka

DFCC வங்கி தனது புத்தாக்கம்மிக்க Investment Planner மூலமாக, நீண்ட கால மூலதன வளர்ச்சியுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டுகிறது  

Share with your friend

DFCC வங்கி தனது 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் படிப்படியாக மூலதனத்தைக் கட்டியெழுப்பி, தமது நீண்ட கால நிதியியல் நெகிழ்திறனை வலுப்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் மூலோபாயரீதியான புதிய நிதித் தீர்வொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடன் அல்லது குறுகிய தவணைக் கடன்களை நம்பியிராது முன்கணிப்புடன், கட்டமைக்கப்பட்ட மூலதனத்தை திரட்டுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையான வருமானமீட்டும் முதலீட்டுத் தீர்வாக DFCC Business Investment Planner காணப்படுகிறது.   

Business Investment Planner தீர்வின் மூலமாக, தனியுரிமை கொண்ட வணிகங்கள், கூட்டாண்மைகள், நிறுவனங்கள், கழகங்கள், சங்கங்கள், மற்றும் அரச நிறுவனங்கள் கூட இரண்டு முதல் பதினைந்து ஆண்டுகள் வரையான காலத்திற்கு நிலையான மாதாந்த தொகையை முதலீடு செய்ய முடியும். தற்போது இந்த முதலீடுகள் அனைத்திற்கும் 9% என்ற வருடாந்த வட்டி வீதத்திற்கான (ஆண்டு சம வீதம் 9.38%) உத்தரவாதம் கிடைப்பதுடன், தளம்பலான சூழலில் சீரான வருமானங்களுடன் வணிகங்கள் பயன்பெற உதவுகின்றன. தற்சமயம் இத்தீர்வானது இலங்கை ரூபா மற்றும் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் கிடைக்கப்பெறுவதுடன், இறக்குமதி சார்ந்த அல்லது ஏற்றுமதியை மையப்படுத்திய நிறுவனங்களுக்கு மகத்தான நெகிழ்திறனுக்கு இடமளிக்கின்றது.    

தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என பரவலாகப் போற்றப்படுகின்ற நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு உதவுவதில் DFCC வங்கியின் பரந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக இந்த முயற்சி காணப்படுகின்றது. தொழிற்படு மூலதனம் மற்றும் கடன் வசதிகளுக்கான அணுகல் இறுக்கமடைந்து வருகின்ற ஒரு சூழலில், ஒழுங்கமைக்கப்பட்ட, மற்றும் முற்போக்கான மாற்றுத் தீர்வுகளை இது வழங்குகின்றது. எதிர்கால விரிவாக்க நடவடிக்கைகளுக்கு மூலதன இருப்பினைக் கட்டியெழுப்புதல், மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நிதியைத் திரட்டுதல், அல்லது பருவகால வருமான ஏற்றத்தாழ்வுகளை நிர்வகிப்பதற்கு பணத்தை ஒதுக்கி வைத்தல் போன்ற அனைத்தையும் மேலதிக கடனைப் பெற்றுக்கொள்ளாது மேற்கொள்ளும் பயனை இது வழங்குகின்றது.    

DFCC வங்கியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான தலைமை அதிகாரியுமான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வெறுமனே கடன்படுனர்கள் என்ற பதத்திற்குள் அடக்கி விட முடியாது, அவர்கள் அனைத்தையும் கட்டியெழுப்புபவர்கள், திட்டமிடுபவர்கள், மற்றும் ஆபத்தைக் கையிலெடுத்து வெற்றி காண்பவர்கள் என பல பரிமாணங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு கடன் வசதியைக் கொண்டிருப்பது மாத்திரமன்றி, சிறப்பாக கட்டமைக்கப்பட்ட, நீண்ட கால நிதி உட்கட்டமைப்பிற்கான வசதியே அவர்களின் தேவையாகவுள்ளது. DFCC Business Investment Planner மூலமாக, அவர்கள் தாம் விரும்பியவாறு விஸ்தரிப்பிற்கான ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்கு ஐந்து, பத்து, மற்றும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பதாக சிந்தித்து, திட்டமிடுவதற்கான வாய்ப்பினை நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

இத்திட்டம் ஒவ்வொன்றும் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கொன்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதுடன், தன்னியக்கமயமாக்கப்பட்ட மாதாந்த பங்களிப்புக்கள், மற்றும் நெகிழ்திறன் கொண்ட 28 நாள் ஏற்பாட்டு கால வரையறை, ஆகியன வணிகங்கள் தமது வசதிக்கேற்றவாறு ஆரம்பிக்கும் திகதியை நிர்ணயித்துக் கொள்வதற்கு இடமளிக்கின்றன. மீள்கொடுப்பனவு கால அட்டவணைகள் மற்றும் வீதங்களில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்ற மேலதிப்பற்று அல்லது வழங்குனர் கடன் வசதி போன்ற குறும் தவணை கடன் வசதிகளைப் போலவன்றி, இத்தீர்வானது அர்ப்பணிப்புடனான, குறைந்த முயற்சிகளுடன் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்புக்களுடன் சீரான வகையில் நிதியியல் வளர்ச்சி காண்பதற்கு இடமளிக்கின்றது.    

பல்வகைப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகள் மற்றும் நிதியியல் இலக்குகள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டு, வளர்ச்சி கண்டு வருகின்ற DFCC வங்கியின் முதலீட்டுத் தீர்வுகளுக்கு கூடுதல் நன்மை சேர்க்கும் வகையில் Business Investment Planner தீர்வு காணப்படுகிறது. தனிநபர்கள், குடும்பங்கள், மற்றும் தொழில் முயற்சியாளர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற தீர்வுகள் அவற்றுள் அடங்கியுள்ளதுடன், இவை அனைத்தும் மூலதன இருப்பின் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான தயார்நிலை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பகிரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் நிலைபேணத்தக்க நிதியியல் நடைமுறைகளில் DFCC வங்கி தற்போது கவனம் செலுத்தியுள்ளதை இந்த அறிமுகம் பிரதிபலிக்கின்றது. வணிகங்களுக்கு மகத்தான அளவில் நிச்சயத்தன்மையுடன் திட்டமிடுவதற்கு வலுவூட்டுவதன் மூலமாக, எதிர்வினை கொண்ட கடன்படுவதில் தங்கியிருப்பதைக் குறைத்து, நிதியியல் சுதந்திரத்தை ஊக்குவித்து, இன்னும் கூடுதலான அளவில் நெகிழ்திறன் கொண்ட மற்றும் வளர்ச்சிக்கு தயாரான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைக்குப் பங்களிப்பதே வங்கியின் நோக்கம்.   

இலங்கை வணிகங்கள் மத்தியில் பரிணாம மாற்றங் கண்டு வருகின்ற தேவைகளுக்கு ஏற்ற வகையில் முற்போக்கான நிதியியல் கருவிகளை வழங்கி, எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் வளர்ச்சி, பன்மைத்துவம், மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கு இடமளிப்பதில் DFCC வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.


Share with your friend
Exit mobile version