Eyeview Sri Lanka

DFCC வங்கி தற்போது UnionPay அட்டையை ஏற்கின்றது

Share with your friend

இலங்கையிலுள்ள முதன்மையான வர்த்தக வங்கிகளில் ஒன்றான DFCC வங்கியானது தனது விற்பனை மையங்களில் அட்டைக் கொடுப்பனவு இயந்திரங்கள் தற்போது UnionPay அட்டைகளையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. DFCC வங்கியானது 2020 ஆம் ஆண்டில் வணிகர்களை உள்ளிணைத்துக் கொள்ளும் வணிக முயற்சியை ஆரம்பித்ததில் இருந்து ஒரு தீவிரமான விஸ்தரிப்பு மூலோபாயத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. அன்று முதல் வங்கியானது தொழில்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாட்டாளராக வளர்ச்சி கண்டுள்ளதுடன், தனது வலையமைப்பில் பல்வேறு கொடுப்பனவுச் சேவை வழங்குநர்களை இணைத்துக் கொண்டுள்ளது. UnionPay தற்போது இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதன் மூலம், DFCC வங்கியின் வணிகர் உள்ளிணைப்பு வலையமைப்பு இப்போது அனைத்து பிரபலமான அட்டை வர்த்தகநாமங்களையும் ஏற்றுக்கொள்கிறது.

DFCC வங்கியின் வணிகர் வர்த்தகங்களை உள்ளிணைக்கும் நடவடிக்கையின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் துணைத் தலைமை அதிகாரியும், அட்டை மையத்தின் தலைமை அதிகாரிமான டென்வர் லூயிஸ் அவர்கள், “இரண்டு ஆண்டுகளுக்குள் இது போன்ற பரந்த அளவில் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் வசதியை செயல்படுத்த எங்களால் முடிந்தமை உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். அந்த வகையில், UnionPay உடனான புதிய கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை, வெகு விரைவில் எமது இணைய கொடுப்பனவு நுழைவாயில் சேவைகள் (Internet Payment Gateway Services – IPGS) UnionPay அட்டையை ஏற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். UnionPay சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்ற நிலையில், எமது இலத்திரனியல் மார்க்கங்கள் மூலம் சௌகரியமாக கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு அட்டைதாரர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நாம் ஆவலாக உள்ளோம். இந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இன்னும் கூடுதலான புதிய முயற்சிகளை முன்னெடுக்க நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். DFCC வங்கி, வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் முழுமையான வசதியை வழங்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அனுகூலத்தைப் பயன்படுத்தி, தனது வணிகர் உள்ளிணைப்பு முயற்சியைத் தொடர்ந்து மேம்படுத்த விரும்புகிறது. இந்த நோக்கத்திற்காக, தனது அனைத்து வணிக முனையங்களும் விரைவான மற்றும் திறன்மிக்க இணைப்புக்காக Android வசதி போன்ற குறிப்பிட்ட குறைந்தபட்ச தரநிலை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதை வங்கி உறுதி செய்கிறது. DFCC இன் வணிகர் உள்ளிணைப்பு வலையமைப்பால் UnionPay அட்டை ஏற்றுக்கொள்ளப்படுவது வங்கியின் அதிநவீன IPGS வரை நீட்டிக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும், வணிகர்களுக்கும் இது தங்குதடையற்ற இணைப்பினை வழங்கும்,” என்று குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களை வலுவாக ஆதரிக்கும் ஒரு வங்கியாக, DFCC வங்கி தற்போது நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மையமாகக் கொண்ட ஒரு இலட்சியப்பற்றுடனான வணிக வலையமைப்பு விரிவாக்கத் திட்டத்தில் இறங்கியுள்ளது. வங்கியானது சிறு வணிகர்களை டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவுகளை ஏற்க ஊக்குவிக்கும் வகையில் நுண் வணிகர் நிகழ்ச்சித்திட்டமொன்றை (Micro Merchant Programme) வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது. வணிகர் கணக்குகளில் நுழைவதில் அவை முகங்கொடுக்கின்ற முட்டுக்கட்டைகளை அகற்றி, இணைவு வசதியை அதிகரிக்கும் முயற்சியையும் இதற்கு இணையாக முன்னெடுத்து வருகின்றது. பாரம்பரியமாக, இணைந்து கொள்வதற்கான அதிக தடைகள் மற்றும் அதிகப்படியான செலவுகள் சிறு வணிகங்களை டிஜிட்டல் கொடுப்பனவு வழிமுறைகளிலிருந்து விலக்கி வைத்தன. ஆனால் DFCC வங்கி இந்த நிலைமையை மாற்ற முயற்சிக்கிறது. DFCC வங்கியின் விற்பனை மைய முனையங்கள் மற்றும் IPG க்கள் மருத்துவமனைகள், ஆடையணி விற்பனைச் சங்கிலிகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட சிறிய மற்றும் பெரிய வணிகங்கள் மத்தியில் பரந்துபட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றன.


Share with your friend
Exit mobile version