JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, நிதியியல் புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இளைஞர் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், MAGNATE 2025 நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக கைகோர்த்திருந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதியியல் பீடத்தின் நிதிப் பிரிவு மாணவர் சம்மேளனத்தின் பிரதான நிகழ்வாக MAGNATE 2025 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுடன் First Capital கைகோர்த்துள்ளமையினூடாக, கல்விச் சமூகம் மற்றும் நிதிச் சேவைகள் துறை ஆகியவற்றுக்கிடையே காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

MAGNATE 2025 ஊடாக, வளர்ந்து வரும் திறமைசாலிகள், சிந்தனை தலைவர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்கள் ஆகிய சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, மாறும் சகாப்தத்திலும் டிஜிட்டல் மாற்றத்திலும் நிதியை நிலைமாற்றுதல் எனும் கருப்பொருளில் கலந்துரையாடல்கள், குழுநிலை விவாதங்கள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பதற்கான ஈடுபாட்டுடனான களத்தை இந்நிகழ்வு வழங்கியிருந்தது. தொழிற்துறையின் எதிர்காலத்துக்காக புத்தாக்கமான நிதிசார் தீர்வுகள் மற்றும் மூலோபாய சிந்தனைகளை வெளிப்படுத்தியிருந்தது.
First Capital Holdings PLC இன் கூட்டாண்மை நிதியியல் மற்றும் ஆலோசனை பிரிவின் உப தலைவர் அச்சுதன் ஸ்ரீரங்கன், “Transforming the Financial Ecosystem through Disruptive Finance” எனும் தலைப்பில் பிரதான உரையை ஆற்றியிருந்ததுடன், நிதியியல் கட்டமைப்புகளில் புத்தாக்கம் மற்றும் கைகோர்ப்பு ஆகியன எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார். தமது உரையின் போது, “First Capital ஐச் சேர்ந்த நாம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகியவற்றினூடாக நிலை மாற்றம் ஆரம்பிக்கிறது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். MAGNATE போன்ற திட்டங்களினூடாக, மாணவர்களை ஊக்குவித்து, பாரம்பரிய கட்டமைப்புகளுக்கு அப்பால் சிந்திக்கச் செய்து, இலங்கையின் நிதிக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை கண்டறிவதற்கு ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
நிகழ்வின் நடுவர் குழாமில் அங்கம் வகித்திருந்த First Capital Holdings PLC இன் பிரதம தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் அதிகாரி மித்தில அபேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகியன ஆழமான இணைப்பைக் கொண்டுள்ளன. இந்த இணைவு தொடர்பில் இளம் சிந்தனையாளர்களுக்கு ஆராய்வதற்கு ஊக்குவிப்பதனூடாக, தொழிற்துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுக்கக்கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்க நாம் உதவுகிறோம்.” என்றார். தொழில்நுட்பத்தினால் தலைமையளிக்கப்பட்ட நிதியியல் புத்தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட மாணவர்களின் செயல்விளக்கங்களை இவர் மதிப்பீடு செய்திருந்தார்.
MAGNATE உடனான First Capital இன் ஈடுபாடு, அனுசரணை வழங்குவது என்பதற்கு அப்பாலானதாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் அடுத்த தலைமுறை நிதிசார் நிபுணர்களை கட்டியெழுப்புவதில் அசல் முதலீட்டை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. அதன் ஈடுபாட்டுனான பங்கேற்புடன், சிந்தனை தலைமைத்துவத்தை வழங்கி, ஆலோசனை வழங்கலில் ஈடுபட்டு, அறிவு பகிர்வுக்கு ஆதரவளித்திருந்ததனூடாக, கல்வி, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் ஆழமாக தம்மை அர்ப்பணித்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் தனது நிலையை வர்த்தக நாமம் தொடர்ச்சியாக உறுதி செய்திருந்தது.
இளம் தலைவர்களுக்கு வலுவூட்டுவதனூடாகவும், கைகோர்ப்பு மற்றும் விசாரிப்புகளை ஊக்குவிப்பதனூடாகவும், இலங்கையின் நிதிச் சேவைகள் கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் First Capital தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்குவதுடன், தனிநபர்கள் மற்றும் பரந்தளவு பொருளாதாரத்துக்கு அனுகூலம் சேர்க்கும் முன்னேற்றகரமான கலாசாரத்தையும் முன்னெடுக்கிறது.