பரந்தளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கவும் மற்றும் நிதிச் சேவைகள் அனைத்தையும் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளை அதிகரிக்கவும், இலங்கையின் புகழ்பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றான IDEAL Finance Limited (IFL), கடவத்தையில் புதிய கிளை ஒன்றை ஆரம்பிப்பதன் மூலமாக, தனது கிளை வலையமைப்பில் மற்றுமொரு கிளையை சமீபத்தில் சேர்த்துக் கொண்டுள்ளது. இக் கிளையானது, மேல் மாகாணத்தில் உயர்-வளர்ச்சி கொண்ட பிராந்தியத்தின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, IFL இன் சேவைகளை சௌகரியத்துடன் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. IDEAL Finance இன் புதிய கடவத்தை கிளையானது 2021 டிசம்பர் 10 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய உயர் அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பங்களிப்புடன் ஒரு விசேட திறப்பு விழா வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
IDEAL Finance Limited இன் தலைமை நிர்வாக அதிகாரியாகிய திரு. துமிந்த வீரசேகர அவர்கள், புதிய கிளையை திறந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “கடவத்தையில் நாங்கள் கிளையை ஆரம்பிப்பது எங்கள் பயணத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளதுடன், எங்கள் பரந்த வலையமைப்பு விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. 2022 மார்ச் இறுதிக்குள், எங்கள் அடைவு மட்டத்தை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இப் பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதித் தீர்வுகளை வழங்க இந்தப் புதிய கிளை எங்களுக்கு உதவுவதோடு, ஒன்றுபட்டு உழைப்பதன் மூலம், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி, எமது நிறுவனத்தில் தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள ஊழியர்களுக்கும் நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். தொடர்ச்சியாக 3 வருடங்கள் Great Place to Work என்ற அங்கீகாரத்துடன், இலங்கையில் அபிமானம் பெற்றுள்ள தொழில் தருநராக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வலையமைப்பு விரிவாக்கத்துடன் நாங்கள் வளர்ச்சி காணும் போது, எதிர்கால சவால்களைச் சமாளிக்க எங்கள் அணியை ஒருங்கிணைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Mahindra and Mahindra Financial Services Limited நிறுவனம் IDEAL Finance Limited நிறுவனத்தில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து IFL இன் வலையமைப்பு விரிவாக்கம் மற்றும் சேவைகள், தீர்வுகள் பல்வகைப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது பல கட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு என்பதுடன், 2020 பெப்ரவரியில் தொடங்கியது. Mahindra ஆரம்பத்தில் IFL இல் 38.2% பங்குகளை கொள்முதல் செய்தது. முதலீட்டின் இறுதி தவணையானது 2021/22 நிதியாண்டில் 58.2% ஆக உயர்வடைந்ததன் விளைவாக இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொத்தமாக ரூபா 2 பில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. எனவே, இன்று, IDEAL Finance ஆனது, 11 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை நிர்வகித்து வருகின்ற உலகளாவிய நிதி நிறுவனத்தின் பக்கபலத்தைக் கொண்டுள்ளது.
அதன் வலையமைப்பு விரிவாக்கத்திட்டம், வளர்ச்சி மூலோபாயம் மற்றும் Mahindra உடனான கூட்டணி ஆகியவற்றின் வெற்றிக்கு சான்று பகரும் வகையில், உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை நேர்த்தியாக வழிநடத்தி, 2021 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், IDEAL Finance தனது சிறந்த வருடாந்த பெறுபேற்றுத்திறனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. வரிக்கு முந்தைய இலாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 76% அதிகரித்து ரூபா 288.4 மில்லியனாக பதிவாக்கப்பட்டது. அதே நேரத்தில் வரிக்குப்பிந்திய இலாபம் 74% அதிகரித்து ரூபா 183.8 மில்லியனாக பதிவாக்கப்பட்டது. நிறுவனத்தின் தொழிற்படா கடன்கள் விகிதமும் 3.3% ஆல் மேம்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டில் 5.2% ஆக இருந்த தொழில்துறையின் போக்கை விடவும் மேம்பட்டமை குறிப்பிடத்தக்கது. IDEAL Finance Limited நிறுவனத்தில் Mahindra நிறுவனத்தின் முதலீட்டைத் தொடர்ந்து, Fitch Ratings ஆனது IDEAL Finance நிறுவனத்தின் தர மதிப்பீட்டை BB (lka) இலிருந்து AA – (lka) க்கு நிலையான கண்ணோட்டத்துடன் மேம்படுத்தியுள்ளது.
IDEAL Finance Limited (IFL) என்பது இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஆகும். கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறத்துறைகளில் தெளிவான கவனம் செலுத்தியவாறு 2012 மார்ச்சில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன் கடன் வழங்கல் சேவைகள் துறையில் தங்கக் கடன்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கடன்கள், தனிநபர் கடன்கள், மோட்டார் கார்கள், முச்சக்கர வாகனங்கள், விவசாய வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கான குத்தகை வசதிகள் அடங்கியுள்ளன. IFL ஒரு தரமான கடன் வழங்கல் துறையை உருவாக்கியுள்ள அதே நேரத்தில் இலாபத்தில் நிலைபேற்றியலுடனான வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
புகைப்பட தலைப்புகள்
IDEAL Finance நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளரான திரு. நிஷாந்த கன்னங்கர மற்றும் IDEAL Finance இன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து கடவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட IDEAL Finance பணியாளர்களுடன் காணப்படுகின்றார்.