Eyeview Sri Lanka

INSEE சீமெந்து நிறுவனம் தனது பல்லுயிரின பாதுகாப்பு முயற்சிகளைத் தொடர்கிறது

Share with your friend

பல்வேறு நீண்ட கால, உயர் விளைவுடனான பல்லுயிரின மறுசீரமைப்பு திட்டங்களின் வெற்றிகரமான விஸ்தரிப்புடன் 2022 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது  

இலங்கையில், 1 ஆவது ஸ்தானத்திலுள்ள சீமெந்து வர்த்தகநாமம் மற்றும் தீர்வுகள் வழங்குநரான INSEE சீமெந்து நிறுவனம், பல்வேறு பாரிய அளவிலான பல்லுயிரின பாதுகாப்புத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் 2022 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளதுடன், வருங்கால தலைமுறைகளின் நலனுக்காக இலங்கையின் உள்ளூர் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளின் மீட்சி மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறது.

INSEE இன் உலகளாவிய குழும-வாரியான நிலைபேற்றியல் மூலோபாயமான INSEE நிலைபேற்றியல் இலட்சியம் 2030 ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், INSEE சீமெந்து நிறுவனம், ஐக்கிய நாடுகளின் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகள் (Sustainable Development Goals – SDGs) மற்றும் பிற உலகளாவிய கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்துள்ளது. மேலும், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றியலை நிறுவனத்தின் வரையறுக்கும் அங்கமாக மாற்றியது. INSEE இன் நிலைபேற்றியல் இலட்சியம் 2030 இன் அடிப்படைத் தூண்களில் ஒன்று பல்லுயிரின மற்றும் நீர் பாதுகாப்பு ஆகும். இது அதன் வணிகத்தின் அடிப்படைத் தன்மையின் அத்திவார மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக முறையாக வரையறுக்கப்படுவதற்கு முன்னரேயே நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் இயல்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மையப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக, இலங்கையில் INSEE சீமெந்து நிறுவனமானது, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) அனுசரணையின் கீழ் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) போன்ற நிறுவனங்களுடன் நீண்டகால கூட்டாண்மைகளைப் பேணுவதன் மூலம் பல்லுயிரினப் பாதுகாப்பிற்கான வலுவான அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது. பல்லுயிரினம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தனியார் துறை நிறுவனங்களால், அவற்றுக்கு முற்றிலும் சொந்தமான மற்றும் அவற்றால் இயக்கப்படும் ஒரு தேசிய தளமான Biodiversity Sri Lanka உடனும் அது தன்னை ஒருங்கிணைத்துள்ளது. இந்நிறுவனம் 2022 இல் பல நீண்ட கால உயர்-விளைவுடனான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தியுள்ளதுடன், முக்கிய திட்டங்களின் தொகுப்பு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

விலங்குகள் மீட்பு திட்டம்

2008 ஆம் ஆண்டு INSEE இன் அருவாக்காடு அகழ்வுத் தளத்தில் அகழ்விடத்தின் முந்தைய நிலைமைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் கட்டமைப்பை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், நடைமுறைப்படுத்தப்பட்ட அகழ்விட புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியான விலங்குகள் மீட்புத் திட்டம் இப்போது INSEE ஊழியர் தன்னார்வத் தொண்டு நாட்காட்டியில் உச்ச ஸ்தானத்திலுள்ள வருடாந்த செயல்பாட்டு நடவடிக்கையாக மாறியுள்ளது. இந்த நடவடிக்கையானது குறைவான நடமாட்டங்களைக் கொண்ட சிறிய விலங்குகள் மற்றும் உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய விலங்கினங்களை மீட்பதுடன், இயற்கை பன்மைத்துவத்தை உறுதி செய்வதற்கும், அழிவின் அபாயத்தைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விலங்குகள் மற்றும் உயிரினங்களை உடனடி சூழலில் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்வது அவற்றின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதுவே இத்தகைய வகையில் இலங்கையில் தனியார் துறை நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயற்திட்டம் என்பதுடன், நாட்டில் இத்தகைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மிக நீண்ட கண்காணிப்பு பணியாகும். பயன்படுத்தப்படும் முறையானது இப்போது தேசிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களில் சிறந்த நடைமுறையின் கீழான உயிரினங்கள் பாதுகாப்பு கருவியாக இணைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 2400 சிறிய விலங்குகள் மற்றும் 82 உயிரினங்கள் பாதுகாப்பிற்காக இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டன.
A group of people posing for a photo

Description automatically generated

பவளப்பாறை புனர்வாழ்வு

உலகின் மிகவும் மாறுபட்ட கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்புகளாக அறியப்படுவதுடன், மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்ற பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக, IUCN உடன் INSEE சீமெந்து கூட்டாண்மையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், 2007 இல் உனவட்டுன கடற்கரையில் உள்ள கொங்கிரீட் கட்டமைப்புகளுடன் பவளம் மற்றும் பவள பாறைகளை இணைப்பதன் மூலம் 25 பவளக் காலனிகள் ஸ்தாபிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2016 இல் ருமஸ்ஸலவில் கடலின் அடிப்பகுதியில் 30 கொங்கிரீட் பாறைப் பந்துகள் மேம்பட்ட பவளக் குடியேற்றத்திற்காக அமைக்கப்பட்டன.

பாழடைந்த 12 ஹெக்டேயர் பன்னம் செடி நிலத்தை மீட்டமைத்தல்

Biodiversity Sri Lanka, IUCN, இலங்கை வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனியார் துறை நிறுவனங்களுடனான அரச-தனியார் கூட்டாண்மையின் ஒரு அங்கமாக INSEE சீமெந்து மாறியதுடன், கன்னெலிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் அமைந்துள்ள ஹல்கஹவல, ஓபாதவில் 12 ஹெக்டேயர் பாழடைந்த காடுகளை மீட்டெடுப்பதில் பங்கெடுத்துள்ளது. ஒரு காலத்தில் வேளாண்மைக்காக துப்பரவு செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலமானது, Dicranopteris Linearis (Kekilla) எனப்படுகின்ற பன்னம் செடி இனத்தால் சூழப்பட்டுள்ளது. நான்கரை வருட தீவிர முயற்சிக்குப் பிறகு, மறுசீரமைப்புப் பகுதி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, இது முழு நிலப்பரப்பின் 80% க்கும் அதிகமான பகுதியாக உள்ளது. வன மறுசீரமைப்பின் முன்னேற்றத்துடன் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் செழிப்பான புதிய வாழ்விடங்களை உருவாக்கியுள்ளன, இதன் மூலம் வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள் மற்றும் பறவைகள் உட்பட பல புதிய உயிரினங்களை இப்பகுதிக்குள் ஈர்க்கின்றன.

2023 மற்றும் அதற்கு அப்பால் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு

2022 டிசம்பரில், IUCN உடனான தனது நீண்டகால கூட்டாண்மையை, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த பல்லுயிரின பாதுகாப்புத் திட்டங்களை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதன் மூலம் INSEE சீமெந்து, இலங்கையின் வருங்கால தலைமுறைகளின் நலனுக்காக, சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் INSEE இன் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

“வணிகத்திற்கும் இயற்கைக்கும் இடையே அதிகரித்துவரும் அவசரமான, ஒன்றையொன்று சார்ந்திருத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், பல்லுயிரின பெருக்கம் நமது ஆணையில் முக்கியமானவற்றில் ஒன்று,” என்று INSEE சீமெந்து நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் கூறினார். “IUCN உடனான எங்கள் கூட்டாண்மையானது, நிலைபேற்றியல் இலட்சியம் 2030 க்கு இணங்க, எங்கள் சொந்த இலட்சிய நிலைபேற்றியல் இலக்குகளை அடைய INSEE சீமெந்து நிறுவனத்துக்கு உதவுகிறது. அதே நேரத்தில் இலங்கையின் பல்லுயிரின பெருக்கத்தில் ஏற்படும் பொதுவான வீழ்ச்சி மற்றும் நமது இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதில் எங்களின் பங்கை ஆற்ற வேண்டிய அவசரம் ஆகியன தொடர்பான விழிப்புணர்வையும் தோற்றுவிக்கின்றது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.


Share with your friend
Exit mobile version