MAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது

Share with your friend

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளரான MAS Holdings (Pvt) Ltd நிறுவனத்தின் மிகப்பெரிய அங்கமான MAS Intimates, 450 படுக்கைகளைக் கொண்ட ஒரு இடைநிலை பராமரிப்பு மையத்தை 2021 ஜூலை 1 ஆம் திகதியன்று திறந்து வைத்துள்ளது. பொல்கஹவலையில் அமைந்துள்ள இந்த மையமானது வடமேல் பிராந்தியத்தில் வைரஸ் வேகமாக பரவுவதால் அப்பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், அந்த மாகாணத்தில் உள்ள ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பொது மக்களின் நலன் மற்றும் சிகிச்சைக்காக இலங்கை இராணுவத்தின் உதவியுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநிலை பராமரிப்பு மையம், ரூபா. 48 மில்லியன் தொகைக்கும் மேற்பட்ட செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாண ஆளுநரான கௌரவ திரு. ராஜா கொலுரே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. MAS Intimates நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. ரஜீவ் தர்மேந்திரா, உற்பத்தி மற்றும் தொழில்பாடுகளுக்கான பணிப்பாளரான திரு. ருவான் கேரகல மற்றும் MAS Intimates இன் உற்பத்தித்துறை பணிப்பாளரான றொஹான் தளுகல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளரான வைத்தியர் எம்.கே. சம்பத் இந்திக குமார அவர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடைநிலை பராமரிப்பு மையமானது, பாரதூரமான கொவிட்-19 நோயாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த மையம் உயர் மட்ட துணைப் பிரிவு மற்றும் விசேட வசதிகளை வழங்குவதுடன், அதிக அளவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 20 நோயாளர்களுக்கு இடமளிக்கும். எந்தவொரு நோயாளியின் ஒட்சிசன் மட்டங்களையும், சிசிடிவி கண்காணிப்புக் கமெராக்கள் மூலமாக நோயாளர்களை அவதானிக்கவும் தேவையான திறனுடன், மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மனதில் கொண்டு இந்த மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவலை பிராந்திய வைத்தியசாலை இந்த பராமரிப்பு மையத்தில் நோயாளர்களுக்கு தேவையான நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்குவதுடன், வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணக்களம் மற்றும் வடமேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இதன் முக்கிய பங்குதாரர்களாக செயல்படுகின்றன.

இந்த முயற்சியின் மூலம், தனது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அது செயல்படும் சமூகங்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் MAS Intimates, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலுள்ள  மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றது.  


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply