SportUnleash பாடசாலை விளையாட்டு விருதுகள் 2022

Share with your friend

SportUnleash பாடசாலை விளையாட்டு விருதுகள் 2022 நிகழ்வு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு 2022 ஆம் ஆண்டின் சிறந்த மூன்று விளையாட்டு வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்த மெய்வல்லுநர் வீர வீராங்கனைகளுக்கும், பதினைந்து விளையாட்டுக்களில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 15 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் மறக்கமுடியாத மாலைப் பொழுதாக அமைந்திருந்தது. SportUnleash அனுசரணையில் SPORTSINFO ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது, இலங்கையின் விளையாட்டுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. SportUnleash இனால்  9 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் விளையாட்டுத் திறமைகளை இனங்கண்டு, அந்த விளையாட்டுக்களில் சிறுவர்களை ஊக்குவிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. 

இலங்கையின் முதலாவது வருடாந்த தேசிய பாடசாலைகள் விளையாட்டு விருதுகள் நிகழ்வாக அறிமுகமாகியிருந்த இந்நிகழ்வு 2023 ஜனவரி 23 ஆம் திகதி BMICH இல் இடம்பெற்றது. SPORTSINFO தவிசாளரான திலான் ரங்கனவின் சிந்தனை வெளிப்பாடாக அமைந்திருந்த இந்நிகழ்வுக்கு, முன்னாள் தேசிய சாதனையாளரும், SportUnleash இன் தவிசாளரும் Power World Gyms இன் ஸ்தாபகருமான தலவு அலைலாமா  ஆதரவளித்திருந்தார். வருடாந்தம் இந்த நிகழ்வு மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெறும் நிகழ்வாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொண்டார். நாட்டின் கல்விக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இவர் குறிப்பிட்டிருந்ததுடன், சிறுவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு போன்றன சமாந்தரமாக இடம்பெறுவதனூடாக ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் படைத்த தேசத்தை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும் என்பதால் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற அங்கத்தவருமான எரான் விக்ரமரட்ன இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். பல விளையாட்டு சம்மேளனங்களின் தலைமை அதிகாரிகள், முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் வியாபாரத்தின் தலைவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தலவு அலைலாமா இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டு உலகில் தாக்கத்தை ஏற்படுத்த நாம் திட்டமிட வேண்டுமானால், எமது சிறுவர்கள் மத்தியில் காணப்படும் விளையாட்டுத் திறமைகளை ஆரம்ப வயதிலேயே நாம் கண்டிப்பாக இனங்கண்டு, அவர்களின் பாடசாலை விளையாட்டுப் பருவகாலம் முழுவதிலும் ஆதரவளிக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளாக இவர்கள் திகழ்கின்றனர். இவர்களின் விளையாட்டுத் திறமை என்பது பல வருடங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஆர்வம், ஈடுபாடு, விருப்பு மற்றும் முயற்சி போன்றன 2022 ஆம் ஆண்டில் உச்சத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தன. அடுத்த பத்தாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு பெருமை சேர்ப்பதில் இந்த மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகள் முக்கிய பங்காற்றுவார்கள் என்பதில் சந்தேகங்களில்லை. அனுசரணைக்கு எதிர்பார்க்கும் மெய்வல்லுநர்கள் காணப்பட்டால், இந்த வெற்றியாளர்களே அதற்கான சிறந்த தெரிவாகும். அனுசரணையாளர்களின் முதலீட்டுக்காக அவர்களின் வர்த்தக நாமத்துக்கும் நிறுவனத்துக்கும் சிறந்த அனுகூலத்தை வழங்கும்.” என்றார்.

SPORTSINFO இன் திலான் ரங்க கருத்துத் தெரிவிக்கையில், “பல வருடங்களாக, சில விளையாட்டுக்களில் விளையாடும் வீர, வீராங்கனைகள் மாத்திரம் கௌரவிக்கப்படுவதை நாம் கண்டுற்றோம். ஆனாலும், இலங்கையின் விளையாட்டு அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டுமாயின், சகல பாடசாலை மட்ட விளையாட்டுத்திறமைகளையும் நாம் கௌரவிக்க வேண்டும். தேசிய மட்ட விளையாட்டு வினைத்திறனுக்கு இதுவே ஆரம்பப்படியாக அமைந்துள்ளது. இந்த முக்கிய மைல்கல்லை நாம் எய்தியுள்ளோம், ஒவ்வொரு வருடத்திலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கி, எதிர்காலத்தில் தேசிய மட்டத்தில் சம்பியன்களாக திகழச் செய்வதற்கு பங்காற்றுவோம். அதனூடாக சிறுவர்கள் தமது விளையாட்டுக்களின் மீதான ஆர்வத்தை கைவிடாது தொடர ஊக்குவிப்பதுடன், இலங்கைக்காக அவர்களை சிறந்ததை எய்த ஆதரவளிப்போம்.” என்றார்.

2022 ஆம் ஆண்டுக்காக பின்வரும் மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. மெய்வல்லுநர் – சுவட்டு (Track) நிகழ்வுகளில் கொழும்பு றோயல் கல்லூரியின் நதுன் கவீஷ பண்டார மற்றும் கள (Field) நிகழ்வுகளில் சப்புகஸ்கந்த யொஷிடா சர்வதேச பாடசாலையின் அஷ்மிக கேஷான் கோரல ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பூப்பந்தாட்டம் – புனித பீட்டர் கல்லூரியின் விரேன் நெத்தசிங்க. கூடைப்பந்தாட்டம் – பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரியின் ஜி.ஜி.மினோலி மரியா டிரேக்ஸி. குத்துச்சண்டை – நாலந்த கல்லூரியின் பசிந்து உமயங்க மிஹிரான். சதுரங்கம் – நாலந்த கல்லூரி எல்.எம். சுசல் ரி டி சில்வா. கிரிக்கட் – புனித சூசையப்பர் கல்லூரியின் துனித் வெல்லால்லகே. கராதே – சப்புகஸ்கந்த விசாகா வித்தியாலயத்தின் சி.ஏ. தாருகி சஷிந்தி, வலைப்பந்தாட்டம் – குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரியின் ஹிருனி ஹேஷானி, ரோவிங் – ஏசியன் இன்டர்நஷனல் பாடசாலையின் ஷேலோன் ஷயான் குணரட்ன, ரக்பி – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் தினுப செனெவிரட்ன, நீச்சல் – விசாகா வித்தியாலயத்தின் கங்கா செனெவிரட்ன, டெனிஸ் – புனித பிரிட்ஜட் கன்னியர் மடத்தின் தினரா டி சில்வா, கரப்பந்தாட்டம் – ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் கவிஷ்க மதுசங்க, மல்யுத்தம் – கிரிஉல்ல, வெல்பல்ல சங்கரத்தன மகா வித்தியாலத்தின் நெத்மி அஹின்ஸா பெர்னான்டோ, பயிற்றுவிப்பாளர் – ரி.எஸ்.சுரங்க குமார, சிறந்த பாடசாலை – நாலந்த கல்லூரி.

இணை தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ அபேகோன் மற்றும் ரியர் அட்மிரல் ஷெமால் பெர்னான்டோ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழான விளையாட்டுச் சிறப்புக்கான நடுவர்களின் பதக்கங்கள் 2022 ஆம் ஆண்டில் கிரிக்கட் விளையாட்டில் வெளிப்படுத்தியிருந்த சிறந்த திறமைகளுக்காக ஆனந்த கல்லூரியின் தனிந்து சிரத் செல்லேப்பெரும மற்றும் கம்பஹா ரத்னவாலி மகளிர் வித்தியாலயத்தின் ரஷ்மி குணரட்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மெய்வல்லுநர் பிரிவில் வலால ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் தருஷி கருணாரட்னவுக்கு வழங்கப்பட்டது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply