TMH நிறுவனக் குழுமத்தினதும் மேலும் பல முன்னணி தொழில்முயற்சிகளினதும் தலைவராக பணியாற்றுகின்ற கலாநிதி தர்மலிங்கம் தரீசனன் சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் இலங்கைக்கான லெப்ரினன்ட் கர்னலாகவும் பிராந்திய கட்டளையிடும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கும் இதர மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் வழங்கும் தனித்துவமான பங்களிப்பை பாராட்டியே அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண வைபவம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மெனிலா நகரில் நடைபெற்றுள்ளது. சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவின் உயரிய கட்டளையிடும் அதிகாரி ரொபர்ட் பைசன் உள்ளிட்ட அதிகாரிகளும் இராஜதந்திர உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2024/08/TMH-Group-of-Companies-2.jpg)
சர்வதேச பொலிஸ் ஆணைக்குழுவானது ஐக்கிய அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்னாம், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய ஏழு நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் சர்வதேச சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டதொரு நிறுவனமாகும். சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றின் முகவராண்மை நிறுவனமாக செயற்படும் இந்த நிறுவனம் பெரா மிலிட்டரி (துணை இராணுவம்) அமைப்பாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையரான கலாநிதி தரீசனன் பன்னாட்டு தேசிய கம்பனிகள் பலவற்றின் கனிசமான வளர்ச்சிக்கு பங்களித்த அனுபவமிக்க தலைமை நிறைவேற்று அதிகாரியுமாவார். அவர் மதர் கெயார் இன்டர்நெஷனல் சர்வதேச மன்றத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுத் தலைவரும் ஆவார். ப்ளூ லேக் வோட்டர், ரொக்ஸ்பெரீ இன்டர்நெஷனல், க்ரீன்வெளி அக்ரோ, சிலோன் ஐலன்ட் டிரவல்ஸ், சிலோன் ஐலன்ட் ஜெம்ஸ் மற்றும் Blandtrave & URS (BT) போன்ற பல்வேறு நிறுவனங்களிலும் பொறுப்புகளை வகிக்கின்ற அவர் South Asian Iconic Federation இன் தலைவராகவும் பணிப்பாளராகவும் உள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் அமைதி தொடர்பான ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் பொதுநலவாய அமைப்பின் அமைதி பல்கலைக்கழகத்திலும் நிதி முகாமைத்துவம் மற்றும் தொழில்முயற்சி முகாமைத்துவம் தொடர்பான இரட்டை முனைவர் பட்டங்களை பெற்றுள்ள அவர் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல், தொழில்முயற்சி முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், வங்கியியல் மற்றும் நிதித்துறை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.