இலங்கையின் விவசாய சூழல்கட்டமைப்பை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை அழைத்துவர பவர் நடவடிக்கை

Share with your friend

விவசாய உரங்கள் தயாரிப்பில் முன்னோடிகளாகவும், பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமாகவும் திகழும் ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் (A. Baur & Co. (Pvt.) Ltd.), இலங்கையின் விவசாய சூழல்கட்டமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சேதன உரங்கள் தயாரிப்பு முறையை பின்பற்றுவதற்கு மாறிக் கொள்வதற்கும், அதற்கு அவசியமான விஞ்ஞான ரீதியான மற்றும் பிரயோக ரீதியான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இடமிருந்து – பேராசிரியர். கலாநிதி. கிறிஸ்டோஃவ் ஸ்டுடர், போல் வன் டென் பேர்ஜ், கலாநிதி. குர்பிர் எஸ் புல்லர் மற்றும் கலாநிதி. ஜாக்ஸ் ஜி ஃபுச்ஸ்

ஆகஸ்ட் 1ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த விஜயத்தின் போது சகல பிரதான பங்காளர்களுடனும் சந்திப்புகள், பரந்தளவு கலந்துரையாடல்கள், சேதன விவசாய நடவடிக்கைகளை தூண்டும் வசதிகள் மற்றும் களப் பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளல் போன்றன மேற்கொள்ளப்படும். இதன் போது கொம்போஸ்ட் உரம் மற்றும் சேதனச் செய்கை தொடர்பான பயிற்சிகளையும் இந்த நிபுணர்கள் குழு வழங்கும்.

இரசாயன உரங்கள் மற்றும் களைநாசினிகள் இறக்குமதியை தடை செய்வதற்கு இலங்கை தீர்மானித்ததைத் தொடர்ந்து, உலகின் முன்னணி விவசாய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை பவர் ஆரம்பித்திருந்தது. இந்த சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சிறந்த செயன்முறைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் போன்றன தொடர்பான நிபுணத்துவ உள்ளகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது. 

சேதன விவசாயத்தில் உலகின் முன்னணி ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைப்புகளாக கருதப்படும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சேதன விவசாய ஆய்வு நிறுவனம் (FiBL) மற்றும் பிரயோக விஞ்ஞானத்துக்கான பேர்ன் பல்கலைக்கழகத்தின் விவசாய, வனாந்தர மற்றும் உணவு விஞ்ஞானத்துக்கான கலாசாலை (HAFL) போன்றவற்றுடன் பவர் கைகோர்த்திருந்தது.  FiBL மற்றும் HAFL ஆகியன துறைசார் தமது அறிவைப் பயன்படுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கைகோர்த்து பணியாற்றும். 

சேதன விவசாயத்துக்கான இருப்பிடமாகத் திகழும் சுவிட்சர்லாந்து, உலகின் சேதன விவசாயத்தில் 6ஆவது அதியுயர் ஊடுருவலைக் கொண்டுள்ளது. விவசாய நிலத்தில் 16.5 சதவீதம் சேதன விவசாய நிலமாக அமைந்துள்ளது. சேதன உணவு நுகர்வில் இரண்டாவது உயர் தனிநபர் நுகர்வைக் கொண்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் 7ஆவது மாபெரும் சேதன சந்தையாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

நிபுணத்துவ அணியினர், தமது கல்விசார் அனுபவத்தை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வராமல், உலகளாவிய ரீதியில் பிரயோக செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொண்டுள்ள பெருமளவான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும். FiBL மற்றும் HAFL ஐச் சேர்ந்த இந்த நிபுணர்கள் குழுவில் நான்கு சிரேஷ்ட அங்கத்தவர்கள் உள்ளடங்கியிருப்பர்.

HAFL இல் இயற்கை வளங்கள் முகாமைத்துவ பேராசிரியராக பேராசிரியர். கலாநிதி. கிறிஸ்டோஃவ் ஸ்டுடர் திகழ்கின்றார். இவர், சர்வதேச விவசாய ஆய்வு நிலையங்களுடன் பணியாற்றியுள்ளார். பல்வேறு ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களிலும், ஆலோசனை சேவைகளிலும் கலாநிதி. ஸ்டுடர் ஈடுபட்டுள்ளார். HAFL இல் Tropical Agroecosystems இன் சிரேஷ்ட விஞ்ஞானியாக கலாநிதி. குர்பிர் எஸ் புல்லர் திகழ்வதுடன், FiBL இல் எட்டு ஆண்டுகளாக ‘Sustainable Agriculture in the Tropics’ எனும் பிரிவில் தலைமை வகித்திருந்தார். கலாநிதி. புல்லர், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் விவசாய கட்டமைப்பு ஆய்வுகளில் பெருமளவு அனுவத்தைக் கொண்டுள்ளார்.

FiBL இல் பயிர் நோய்க்கூற்றியல் மற்றும் மண் வளம் தொடர்பில் சிரேஷ்ட விஞ்ஞானியாகவும், Swiss Society for Phytiatry இன் சபை அங்கத்தவராகவும் கலாநிதி. ஜாக்ஸ் ஜி ஃபுச்ஸ் திகழ்கின்றார். கொம்போஸ்ட்டின் உயிரியல் தரம், கொம்போஸ்ட் பயன்பாடு மற்றும் கொம்போஸ்ட் அடிப்படையிலான தயாரிப்புகள் உற்பத்தி போன்றன தொடர்பில் விசேடத்துவம் பெற்றுள்ள Biophyt AG இன் ஸ்தாபகராகவும் இவர் திகழ்கின்றார். தமது சொந்த சேதனப் பண்ணையை நிர்வகித்திருந்ததைத் தொடர்ந்து FiBL உடன் போல் வன் டென் பேர்க் இணைந்து கொண்டார். சேதன தோட்டப் பயிர்ச் செய்கை, சந்தை அபிவிருத்தி மற்றும் நிலைபேறான கட்டமைப்பு போன்றவற்றில் இவர் நிபுணராக திகழ்கின்றார். International Federation of Organic Agriculture Movements (IFOAM) இன் நியமக் குழுவின் அங்கத்தவராகவும் போல் திகழ்கின்றார்.

பரிபூரண மற்றும் ஒன்றிணைந்த ஆய்வினைத் தொடர்ந்து, திரட்டப்படும் விஞ்ஞான ரீதியான மற்றும் நிபுணத்துவ ஆதாரங்களைக் கொண்டு இலங்கையின் சேதன விவசாயக் கொள்கைகளை பின்பற்றும் ஒன்றிணைந்த திட்டமொன்றை இந்த நிபுணர்கள் அணி தயாரிக்கும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply