எதிர்கால அபிலாஷைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் புதிய மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வை நடத்திய SLIIT

Share with your friend

இலங்கையின் முன்னணியான அரச பல்கலைக்கழகமல்லாத SLIIT அங்குரார்ப்பண நிகழ்வை கடந்த மே மாதம் Zoom தொழில்நுட்பத் தளத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. எதிர்காலத்தைக் கண்டறிதல் மற்றும் அதற்கான கனவுகளைத் தொடருவதற்காகப் புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் புதிய மாணவர்களை வரவேற்கும் நோக்கில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. 

SLIIT இன் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே, SLIIT  இன் தலைவரும், வேந்தருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக்க ஆகியோர் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட புதிய மாணவர்களுக்கு உரைநிகழ்த்தியிருந்தனர்.

பிரதி உபவேந்தர் (கல்வி) புதிய மாணவர்களை வரவேற்றிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து ஏனைய பீடாதிபதிகளினால் உரைகளும், முன்வைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.

புதிய மாணவர்களுக்கு உரையாற்றிய பிரதி உபவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ, SLIIT ஐ தெரிவுசெய்தமைக்காகத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அவர் குறிப்பிடுகையில், “பலமான நெகிழ்திறன் மற்றும் நிரூபிக்கப்பட்ட தடப்பதிவுகளைக் கொண்ட நிறுவனமொன்றிலேயே நீங்கள் உங்கள் கல்வியைத் தொடங்குகின்றீர்கள். தொற்றுநோய் கடந்த வருடம் நாட்டைப் பாதித்த நிலையில் வகுப்பறையை மாணவர்களின் வீடுகளுக்குக் கொண்டுசென்ற முதலாவது நிறுவனம் எமது நிறுவனமாகும்”என்றார்.

“எப்பொழுதும் தொல்முறையுடனும், நெறிமுறையுடனும் செயற்படுங்கள், ஏனெனில் இவை அனைத்தும் வெற்றியின் உள்ளீடுகள் என்பதுடன், சகல துறைகளிலும் சிறப்பானவர்களாக இவை உங்களை வைத்திருக்கும்” என அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தனித்துவமான கலாசாரம், புத்தாக்கம் மற்றும் பலமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது என்பதை அவதானிக்கும் அதேநேரம், வகுப்பறைகளுக்குள்ளும். அதற்கு வெளியேயும் காணப்படும் கற்றல் அனுபவத்தைப் பெற்று பல்கலைக்கழக வாழ்க்கையை மகிழுமாறும்,  SLIIT இன் அனைத்து செயற்பாடுகளிலும் பங்குபெறுமாறும் இங்கு உரையாற்றியவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தினர். 

கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளரும் மாணவர்களுக்கு உரையாற்றியிருந்ததுடன், உயர்கல்வி மற்றும் கனவுகளைத் தொடர்வதற்கு SLIIT  இற்குத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக அவர் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

புதிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் வாரத்தின் ஆரம்பமாக இந்த அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்ததுடன், புதிய மாணவர்களுக்கு தொடர்ச்சியான வரவேற்பு செயற்பாடுகள், பதிவுகள், மெய்நிகர் கூட்டங்கள், கல்விசார் வழிகாட்டல் பகிர்வு அமர்வுகள் உள்ளிட்ட தொடர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாணவர்கள் தமது விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பது மற்றும் புதிய சூழலுக்குத் தம்மை வசப்படுத்திக் கொள்வது போன்றவற்றை இந்தச் செயற்பாடுகள் ஊக்குவிக்கும். 

ஒரு பாடநெறியை வழங்கும் நிறுவனமாக 1999ஆம் ஆண்டு 300 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட SLIIT, இன்று 9,500ற்கும் அதிகமான மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பாடநெறிகளை வழங்கும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. நிறுவனத்தின் பல சாதனைகளில் இதன் பட்டதாரிகளுக்கு தொடர்ச்சியாக 93 சதவீத வேலைவாய்ப்புக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் SLIIT ஆனது 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு பட்டங்களை அளிப்பது மாத்திரமன்றி உலகத்தின் பிரஜைகளாகப் பணியாற்றுவதையும் உறுதிப்படுத்துவதற்கான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. 

SLIIT  இன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டக் கல்விகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் 011 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply