இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டாண்மை நிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் அதன் துணை நிறுவனமான ஹேமாஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட் ஆகியன, Clean Ocean Force Lanka (COF) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன. அதனூடாக, இலங்கையின் இயற்கை சூழல் வளத்தைப் பாதுகாப்பதற்கான உறுதியான அர்ப்பணிப்பை முன்னெடுத்துச் செல்லவும், பிளாஸ்ரிக் கழிவுகளை பொறுப்பு வாய்ந்த வகையில் கழிவகற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, பொருதொட்ட கரையோரப் பகுதியை பராமரிப்பது மற்றும் நீர்கொழும்பு களப்பு பகுதியில் பிளாஸ்ரிக் கழிவுகளை துப்புரவு செய்து, நீர்கொழும்பின் அவதானம் நிறைந்த சூழல்கட்டமைப்புகளைப் பேணி, நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்பவுள்ளது.
மகா ஓயா களப்பினூடாக இந்து சமுத்திரத்துக்கு அடித்து வரப்படும் கடல்சார் பிளாஸ்ரிக்கள், PET போத்தல்கள் மற்றும் இதர மாசுகளை மீட்பது மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்களினால் பொறுப்பற்ற வகையில் வகையில் வெளியேற்றப்படும் கழிவுகளைக் குறைப்பது தொடர்பிலும் இந்தத் திட்டங்களினூடாக பெருமளவில் கவனம் செலுத்தப்படும்.
இந்தத் திட்டம் தொடர்பாக ஹேமாஸ் மெனுபக்ஷ்ரிங் இடைக்கால முகாமைத்துவ பணிப்பாளர் சப்ரினா ஈசுபாலி கருத்துத் தெரிவிக்கையில், “விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பங்காண்மைகளினூடாக செல்வாக்குச் செலுத்தல்களை மேம்படுத்தல் மற்றும் எமது சூழலை பாதுகாக்கும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களை வடிவமைப்பது மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை பொறுப்பு வாய்ந்த வகையில் நுகர்வது போன்றன தொடர்பில் ஹேமாஸ் சூழல்சார் நிகழ்ச்சிநிரலுக்கமைய இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன. Clean Ocean Force உடனான எமது பங்காண்மை என்பது பாரியளவிலான சூழல் திட்டங்களின் அங்கமாக அமைந்திருப்பதுடன், பொறுப்பு வாய்ந்த வகையில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.
350 முதல் 500 கிலோகிராம் வரையிலான PET போத்தல்கள் மற்றும் மேலும் 100கிலோகிராம் வரையிலான இதர பிளாஸ்ரிக்கள், கேன்கள் மற்றும் மாசுகள் போன்றன இந்தத் திட்டத்தினூடாக அகற்றப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. COF இன் பெண் ஊழியர்கள், பிரதேசத்தைச் சேர்ந்த குறைந்த வருமானமீட்டும் சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். இவர்கள் இந்த கழிவுப்பொருட்களை அகற்றும் செயற்பாடுகளில் பங்கேற்பார்கள். மேற்படி செயன்முறையினூடாக, குறைந்த வசதிகள் படைத்த சமூகங்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுவதுடன், கடற்கரைகள் மற்றும் நீரோடைப் பகுதிகள் போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் செயலாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். அத்துடன், அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மீள்சுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவோர் திரட்டப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதுடன், அதனை சமூகத்தாருக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நெருக்கடியான பொருளாதாரச் சூழலில், உறுதியான மாதாந்த வருமானத்தை இந்த தன்னார்வ செயற்பாட்டாளர்கள் எதிர்பார்க்க முடியும்.
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்து சமுத்திரத்தில் காணப்படும் தீவு எனும் வகையில், இலங்கையின் கடல் உயிரியல் கட்டமைப்பு மற்றும் கடற்கரைகள் போன்றன சமூகப் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமன்றி, இலங்கையில் ஆரோக்கியமான உயிரினங்கள் பேணப்படுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. தற்போதைய சூழலில் இந்த பாதுகாப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். பிளாஸ்ரிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்து, எமது சூழலை சீராக பேணுவதற்கு இந்தத் திட்டம் பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.” என்றார்.
நீர்கொழும்பு அழகிய மணல் கடற்கரைகளைக் கொண்டுள்ளதுடன், நகரைச் சூழ மூன்று பகுதிகளிலும் நீரோடைகள் காணப்படுவதால், மேல் மாகாணத்தில் மீன்பிடித் தொழில் இடம்பெறும் மையமாக அமைந்துள்ளது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் COF ஆகியவற்றுக்கிடையே முதலில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக பொருதொட்ட கடற்கரையை பேணுவதற்காக அமைந்துள்ளது. மற்றைய புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஹேமாஸ் கொன்சியுமர் பிரான்ட்ஸ் கைச்சாத்திட்டிருந்ததுடன், நீர்கொழும்பு களப்பு பகுதியை சுத்திகரிப்பதற்காக அமைந்துள்ளது. பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மாசுகளைக் கொண்டு வரும் பல நீரோடைகளுடன் இணைந்துள்ளதால் இந்த களப்பு பாரிய சூழல்சார் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பொலிதீன், பிளாஸ்ரிக், மாசுகள் போன்றவற்றால் நீர்கொழும்பு களப்பு மாசடைவதற்கு மேலாக, முழுக் கடல்சூழல் கட்டமைப்பின் உயிரியல் பரம்பலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஏனெனில், இந்தக் களப்பு நேரடியாக இந்து சமுத்திரத்துடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது. இந்தப் பிரத்தியேகமான தினசரி மற்றும் வாரம் இரு தடவைகள் முன்னெடுக்கப்படும் பிளாஸ்ரிக் கழிவு அகற்றல் மற்றும் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளினூடாக, மேல் மாகாணத்திலுள்ள நீர்கொழும்பு முதல் பேருவளை வரையிலான மிகவும் மாசடைந்துள்ள கடற்கரைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளை இலக்கு வைக்கப்பட்டுள்ள. தினசரி நூற்றுக்கும் அதிகமான கிலோகிராம்கள் எடை கொண்ட பிளாஸ்ரிக், பொலிதீன் மற்றும் இதர மாசுகள் சேகரிக்கப்பட்டு, மீள்சுழற்சிக்கு அனுப்பும் முன்னர் வகைப்படுத்தலுக்காக அனுப்பப்படுகின்றன.
Clean Ocean Forces தவிசாளரும் ஸ்தாபகருமான ஜெரோம் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஹேமாஸ் மற்றும் Clean Ocean Force இடையிலான இந்த பங்காண்மையினூடாக, பிளாஸ்ரிக் கழிவுகளையும், இதர மாசுகளையும் சேகரிப்பதற்கு பாரம்பரிய கட்டுமரங்கள் பயன்படுத்தப்பட்டு தினசரி சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெறும். இதனூடாக களப்பு மற்றும் கண்டல்காடு பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் கழிவுகள் அகற்றப்படும். மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களை நேரடியாக ஈடுபடுத்தும் வகையில் இந்தப் பணிகள் அமைந்திருக்கும் என்பதுடன், அவர்களுக்கு வருமானமீட்டக்கூடிய வழிகளை COF ஏற்படுத்தும்.” என்றார்.
உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் சுற்றாடல் (மேல்) அமைச்சு, கழிவு முகாமைத்துவ அதிகாரசபை (மேல்), கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), இலங்கை பொலிஸ் சூழல் பிரிவு, சமுர்த்தி அதிகாரசபை, SLLRDC, கல்வி அமைச்சு (மேல்) மற்றும் கிழக்கு மாகாணத்தில் மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றின் ஈடுபாட்டுடனான தனியார்-பொது பங்காண்மையாக COF இயங்குகின்றது. முழுச் செயற்பாடும் மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தினூடாக கண்காணிக்கப்படுகின்றது.