பவர் தனது 125 வருட பூர்த்தியை கோலாகலமாக கொண்டாடியது

Share with your friend

இலங்கையின் பரந்தளவு தொழிற்துறைகளின் மத்தியில் முன்னேற்றகரமான புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் 125 வருடகால வரலாற்றுப் பூர்த்தியை கொண்டாடும் வகையில், பவர் என அழைக்கப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், மாபெரும் மாலை நேர விருந்துக் கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தை மீட்டுப் பார்த்ததுடன், கடந்து வந்த சவால்கள் நிறைந்த பயணங்கள், தசாப்த காலங்களில் உறுதியாக காண்பித்திருந்த அர்ப்பணிப்புகளுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்களை இந்த நிகழ்வில் வெளிப்படுத்தியிருந்தது.

2022 நவம்பர் 30 ஆம் திகதி, சினமன் லேக்சைட் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன், நாடடி்ன் புகழ்பெற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் ப்லாசர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சாதனைகள் தொடர்பிலும், பல தசாப்த காலங்கள் எதிர்கொண்டிருந்த சவால்களுக்கு மத்தியில் உரிய காலப்பகுதியில் முன்னெடுத்திருந்த புத்தாக்கமான தீர்வுகள் தொடர்பிலும் நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.  இதில் பங்காற்றியிருந்த எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் அங்கம் பெறும் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

ஸ்தாபிக்கப்பட்டது முதல் நிறுவனத்தினால் எய்தப்பட்டிருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் தொடர்பில் ப்லாசர் விளக்கமளித்திருந்ததுடன், நிறுவனத்தின் ஸ்தாபகரான அல்பிரட் பவர், சேதன மற்றும் இரசாயன உரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமை மற்றும் விவசாயிகளுக்கு விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தார். பிராந்தியத்தில் காணப்படும் உயர் தொழில்நுட்பத்திறன் வாய்ந்த உரத் தொழிற்சாலையாக இது திகழ்கின்றது எனக்குறிப்பிடலாம்.

பல செயற்திட்டங்களின் முன்னோடியாக பவர் திகழ்ந்தமை இந்த விளக்கத்தினூடாக அறிந்து கொள்ள முடிந்தது. இதில், 1901 ஆம் ஆண்டில் துறைமுகத்தையும் பெருந்தோட்டப் பகுதியையும் இணைக்கும் தொழிற்துறைசார் புகையிரத வலையமைப்பு முதன் முதலில் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை, 1919 ஆம் ஆண்டில் ஹென்ரி ஃபோர்ட் விவசாய டிராக்டரை அறிமுகம் செய்திருந்தமை, 1936 ஆம் ஆண்டில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் தேயிலைத் தொழிற்சாலையை நிறுவியிருந்தமை மற்றும் 1941 ஆம் ஆண்டில் நிலக்கீழ் வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடிய, அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளும் கட்டடத்தை நிர்மாணித்திருந்தமை போன்ற விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டின் அவுஸ்திரேலிய ஓவியக் கலைஞரான டொனல்ட் ஃபிரென்டின் முதலாவது சுவர்மேல் ஓவியம், 1968 ஆம் ஆண்டு பொலன்னறுவை பெருந்தோட்டத்தில் நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கியிருந்தமை, இப்பகுதியில் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான ஜெப்ரி பாவா மற்றும் உல்ரிச் ப்ளெஸ்னர் ஆகியோரால் பிரதான வசிப்பிடப் பகுதி வடிவமைக்கப்பட்டிருந்தமை, 1975 ஆம் ஆண்டில் நாட்டில் பாஸ்மதி அரிசிச் செய்கையை மேற்கொண்டமை மற்றும் சேனைப் புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு 2020 ஆம் ஆண்டில் உயிரியல் கிருமிநாசினியை முதன் முதலில் அறிமுகம் செய்திருந்தமை வரையான விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.

ஏனைய துறைகளில் பவரின் பிரவேசம் தொடர்பிலும் ப்லாசர் விளக்கமளித்திருந்தார். 1945 ஆம் ஆண்டில் மலேரியா தாக்கம் உச்ச கட்டத்தில் காணப்பட்ட போது, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பிரவேசம், கொப்புளக்கருகல் நோயிலிருந்து இலங்கை தேயிலையை பாதுகாக்கும் வகையில் சன்டோஸ் உடன் இணைந்து 1947 ஆம் ஆண்டில் தாவர பாதுகாப்பு தெளிப்பான் அறிமுகம், 1957 ஆம் ஆண்டில் சுவிஸ்எயாருக்கான GSA ஆக ஆகாயத்துறையில் பிரவேசம், 2021 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி École hôtelière de Lausanne இனால் சுவிஸ் நாட்டு மாதிரியை அறிமுகம் செய்து விருந்தோம்பல் துறையில் பிரவேசம் போன்றன தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

1982 ஆம் ஆண்டில் IBM உடன் இணைந்து டிஜிட்டல் மாற்றத்துறையில் நீண்ட தூரம் பவர் பயணித்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் HSBC இன் முதலாவது e-வங்கியியல் வாடிக்கையாளராகவும் இணைந்து கொண்டது. கடந்த ஆண்டில் நிறுவனம் SAP S/4HANA ஐ முதன் முறையாக மெருகேற்றம் செய்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு என்பது தொழிற்துறையில் காணப்படும் சிறந்த தரமாக அமைந்துள்ளதுடன், சைபர் பாதுகாப்பு, இடர் மீட்சி, விற்பனை செயலணி தன்னியக்கமயமாக்கல், இயந்திர பயிலல், artificial intelligence மற்றும் IoT போன்றவற்றை இணைத்து செயலாற்றுகின்றது.

கடந்த ஆண்டில் நாட்டில் சேதன பசளைக்கு முற்றுமுழுதாக மாறுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்ததை தொடர்ந்து, பவர் நிறுவனம் எதிர்கொண்ட சேதன உர சவால் பற்றியும் ப்லாசர் குறிப்பிட்டிருந்தார். பவர் நீண்ட காலமாக பல ஆய்வு மற்றும் விருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது, 2017 முதல் இதுவரையில், கால்நடை பண்ணைகளிலிருந்து கிடைக்கும் எருக்கள், கழிவுகள், உயிரியல்கருகுகள், கொம்போஸ்ட் மற்றும் வேர்மிகொம்போஸ்ட் அறிமுகம் போன்றவற்றை மேற்கொள்கின்றது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த FiBL மற்றும் HAFL இன் நிபுணர்கள் குழுவை அழைத்து வந்திருந்தமையினூடாக, நிலைபேறான சேதன விவசாய கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான பிரதான கருத்திட்டத்தை வடிவமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை, தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பில் ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள பகுப்பாய்வு மற்றும் தீர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு பரந்த பங்காளர்களுடன் இணைந்து மேற்கொள்கின்றமையினூடாக, இந்தப் பிரிவில் சிறப்பை எய்துவதை நோக்கி நகர்கின்றமை தொடர்பான விடயங்களைப் பற்றியும் விளக்கியிருந்தார். HAFL பட்டதாரி ஜாக்ஸ் கோலியை இணைத்து, களனி தொழிற்சாலையில் செய்மதி அலுவலகத்தையும் பவர் அறிமுகம் செய்துள்ளது. இவர் சுவிஸ் நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றுகின்றார்.

நிறுவனத்தின் செயற்திறன் வாய்ந்த பணிப்பாளர் சபை மற்றும் தலைமைத்துவ அணியின் வழிகாட்டலுடன் பவர் உறுதியான வளர்ச்சியைப் பதிவு செய்த வண்ணமுள்ளது. சுவிஸ் பராம்பரியங்கள் மற்றும் பெறுமதிகளுடன் ஆழமான இணைந்துள்ளது. நிறுவனத்தின் பங்காளர் Foundation Alfred et Eugénie Baur திகழ்வதுடன், ஊழியர்களினதும் இலங்கை மக்களினதும் நலன் தொடர்பில் எப்போதும் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது. நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் சில சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளில், விசேட தேவைகள் படைத்த சிறுவர்களுக்கு வலுவூட்டல், உட்கட்டமைப்பு விருத்தி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் அவசர நிவாரணங்கள் போன்றன அடங்குகின்றன. அண்மையில் United National Global Compact முன்னெடுப்புடன் பங்காண்மையை ஏற்படுத்தியிருந்ததனூடாக, நிலைபேறாண்மை தொடர்பிலும் பவர் கவனம் செலுத்துகின்றது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply