இலங்கையின் கைத்தொழில் துறையில் பெயர் பெற்ற நிறுவனங்கள் கரியமில நீக்கத்திற்காக (decarbonize) என்ன செய்கின்றன?

Share with your friend

எரிசக்தியைப் பாதுகாப்பதைப் பெயராகக் கொண்ட Energy Savers என்போர் எரிசக்தி விரயத்தையும், பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தையும் குறைக்க இலங்கைக்கு உதவி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்ட துறைசார் முன்னோடிகளாகவும், எரிசக்தி செயற்பாட்டாளர்களாகவும் திகழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் தொழிற்சாலைகளில் கரியமில நீக்கத்திற்காக தாம் செய்வது யாதென்றும், தற்போதைய தருணத்தில் செயற்பட வேண்டியது ஏன் என்பதையும் விபரிக்கிறார்கள்.

தென்கிழக்காசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய துணி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Teejay Lanka வின் பொறியியல் முகாமையாளர் மெந்தக்க ஹெட்டித்தந்த்ரி கருத்து வெளியிடுகையில், மாறிவரும் சுவாத்திய நிலவரமானது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க கைத்தொழில் துறை கூடுதலாக பாடுபட வேண்டும் என்பதற்குரிய சமிக்ஞையாக உள்ளது என்றார்.

‘உலகம் உஷ்ணமடைதல் இலங்கையர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் ஏற்கெனவே பார்க்கலாம். எமது நாடு விவசாய நாடாகும். எப்போது பயிரிட வேண்டும், எப்போது மீள்நடுகை செய்ய வேண்டும் என்பதை விவசாயிகள் அறிந்திருந்தார்கள். இப்போது காலநிலை போக்குகள் முற்றாக குழம்பியிருக்கின்றன.’

இலங்கையின் முன்னணி பொறியியல் கம்பனியான Hayleys Fentons Group இல் குழும பணிவிணக்கப் பண்பு முகாமையாளராக வேலை செய்யும் நிசல் லியனகே கருத்து வெளியிடுகையில், கரியமில வாயு நீக்கத்தின் மூலம், உற்பத்தி செலவினங்கள் குறைவது போன்ற, வணிக ரீதியான பல நன்மைகள் உள்ளதாகத் தெரிவித்தார்: ‘இதன்மூலம் பச்சைவீட்டு வாயு வெளியேற்றங்கள் குறைந்து, நாம் நாடென்ற ரீதியில் கூடுதலான எரிசக்தி சுதந்திரத்திற்கான ஆற்றல் கொண்டவர்களாக மாறுவதைக் காண்போம்.’

‘எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மேலும் கூடுதலாக முதலீடு செய்வார்கள்,’ என்று ஆடையுற்பத்தி நிறுவனமான Hayleys Fabric இன் சுற்றாடல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகாமையாளரான மொஹம்மட் அர்ஷாத் தெரிவித்தார். ‘உலக சந்தையில் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக எஞ்சியிருக்க வேண்டுமென்றால் சர்வதேச கட்டுப்பாடுகள் சார்ந்த பணிவிணக்கப் பண்பும், பசுமை செயற்பாடுகளுடன் தொடர்புடைய தேவைப்பாடுகளும் அவசியம்.’

அறிவைப் பகிர்தல்

எரிசக்தி செயற்றிறன் (energy efficiency) ஆற்றலை கம்பனிகள் முழுமையாக புரிந்து கொள்ள உதவுவதற்கு கூடுதலான அறிவு அவசியம், என்று இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் நதீரா ராமநாயக்க தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனமும் இலங்கையின் தேசிய தூய்மை உற்பத்தி நிலையமும் முன்னெடுக்கும் புதிய 12-மாத கால முன்முயற்சியை அவர் வரவேற்றார். இவ்வமைப்புகள் எரிசக்தி சேமிப்பாளர்கள் 70 பேர் அடங்கிய முதல் குழுவிற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற எரிசக்தி முகாமைத்துவ முறைமைகள் என்ற பாடநெறியின் ஊடாக உதவுகின்றன.

‘நாட்டில் நிலவும் சமகால எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இத்தகைய திட்டமொன்றுடன் இணைந்து அறிவைப் பெறுவது முக்கியமானது என நான் கருதினேன்,’ என்றார், நதீரா.

மாறும் நடத்தைகள்

Colombo Dockyard இன் எரிசக்தி முகாமைத்துவ உத்தியோகத்தர் தமித்த சந்தநாயக்க கருத்து வெளியிடுகையில், எரிசக்தி விரயத்தைக் குறைக்க வேண்டுமாயின், ஒரு வணிகத்தின் சகல மட்டங்களிலும் புதிய வழிமுறைகள் ஊடாக செயற்பட வேண்டியதாக இருக்கிறது என்றார். 

‘எரிசக்தி செயற்றிறனை விருத்தி செய்வதற்கு மனித நடத்தைகளில் மாறுதல் ஏற்படுத்துவது முக்கியமானதென நான் வலுவாக நம்புகிறேன். இதன் காரணமாகவே எமது ஸ்தாபனத்திற்கு பயிற்சியும் விழிப்புணர்வும் அடிப்படைத் தேவைகளாக மாறியுள்ளன. நாம் கிரமமான பயிற்சியை நடத்துகிறோம். நாம் எரிசக்தி முகாமைத்துவ வாரத்தையும் ஆரம்பித்துள்ளோம். இது எரிசக்தி முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்து, எரிசக்தி செயற்றிறன் சார்ந்த இலக்குகளை அடைய ஒன்றாக பாடுபடும் வகையில் எமது குழுக்களை ஊக்குவிக்கிறது.’

தூய்மையான எரிசக்திக்கு மாறுதல்

ஏரிசக்தி விரயத்தைக் குறைத்தலானது உற்பத்தியில் ஈடுபடும் கம்பனிகள் தத்தமது எரிசக்தி பயன்பாட்டை சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவுவதுடன், பயனுறுதி வாய்ந்த புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி தீர்வுகளை கட்டியெழுப்பக்கூடிய திடமான அத்திவாரத்தை இடுகின்றன.

Flintec Transducer இல் உற்பத்தி மற்றும் வசதி பேணுதல் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றும் அசங்க மனோஜ்;, கூரைக்கு மேல் சூரிய மின்கலங்களைப் பொருத்துவதன் மூலம் தமது கம்பனியின் ஆலைகள் பகல்நேர எரிசக்தி பயன்பாட்டை 65 முதல் 70 சதவீதத்தால் எவ்வாறு குறைத்தன என்று விபரித்தார். ஏனைய எரிசக்தி செயற்றிறன் பேணும் நடவடிக்கைகளுடன் சேர்ந்து, இந்த நடவடிக்கையானது Flintec இல் எரிசக்தி கட்டணங்களையும், வெளியேற்றங்களையும் கணிசமாக குறைக்க உதவியது.

ஆனால், பல எரிசக்தி சேமிப்பாளர்கள் கரியமில வாயு நீக்கத்திற்காக ஒரு மந்திரக்கோலை தேடக்கூடாதென எச்சரிக்கை விடுத்தார்கள். மாறாக, குறைந்தளவு எரிசக்தியில் கூடுதலான பயன்பெறக்கூடியதும், தூய்மையான எரிசக்திக்கானதுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பன்முக தீர்வுகள் அவசியமென அவர்கள் வலியுறுத்தினார்கள்.

‘ஒரு முழுமையான அணுகுமுறை [எடுக்க வேண்டிதாக இருக்கிறது],’ என்றார், Watawala Plantations ஐச் சேர்ந்த கே.எச்.தனுஷ்க்க. ‘அவ்வாறே, எமது ஆற்றல்களைக் கட்டவிழ்த்து நம் அனைவருக்கும் மென்மேலும் நிலைபேறானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்,’ என்றார், அவர்.


Share with your friend