பதிவு செய்தது
• வருமான வரிக்கு முன்னரான இலாபம் – ரூ.10,608 மில்லியன் 47.72%ஆல் அதிகரிப்பு
• வரிக்குப் பின்னரான இலாபம் – ரூ. 6,593 மில்லியன் 46.65%ஆல் அதிகரிப்பு
• திரவத்தன்மை காப்பு விகிதம் (LCR) – அனைத்து நாணயங்களும் – 442.64% மற்றும் ரூபாய் 509.82%
• மொத்த மூலதனப் போதுமான விகிதம் 17.05%
• மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் 3.05%
செலான் வங்கி 2024 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ரூ. 6,593 மில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவுசெய்துள்ளது. இது சவாலான சூழலுக்கு மத்தியிலும் 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவாகிய ரூ.4,496 மில்லியனிலிருந்து 46.65% வளர்ச்சியை பிரதிபலிக்கின்றது.
செலான் வங்கி 30 செப்டம்பர் 2024இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கு ரூ.10,608 மில்லியனை வரிக்கு முன்னரான இலாபமாகப் (PBT) பதிவு செய்துள்ளது. இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.7,181 மில்லியனுக்கு எதிராக 47.72% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
நிதி செயல்திறன் அறிக்கை
நிகர வட்டி வருமானம் ரூ.30,554 மில்லியனில் இருந்து ரூ.27,262 மில்லியனாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.77% குறைந்துள்ளது. அதே வேளை நிகர வட்டி மிகை 2023இன் 5.76% இலிருந்து Q3 2024இல் 5.03% ஆக குறைக்கப்பட்டது. வங்கியின் நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் 30 செப்டம்பர் 2024இல் முடிவடைந்த 9 மாதங்களில் ரூ.5,392 மில்லியனில் இருந்து ரூ.5,829 மில்லியனாக 8.10% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முதன்மையாக அட்டைகள், பணம் அனுப்புதல் மற்றும் கடன் வழங்குதல் தொடர்பான பிற சேவைகள் மூலமான வருமானம் அதிகரிப்பின் பிரதிபலிப்பு ஆகும்.
வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ.34,264 மில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.37,373 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 8.32% குறைவை காட்டுகிறது. இது முக்கியமாக 2024இன் நிகர வட்டி மிகைகளின் சுருக்கத்தால் ஏற்பட்டது.
செப்டம்பர் 30, 2024இல் முடிவடைந்த 9 மாதங்களில் மொத்த செயற்பாட்டுச் செலவுகள் ரூ.13,846 மில்லியனிலிருந்து ரூ.15,674 மில்லியனாக 13.20% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஊழியர்களின் நன்மை அதிகரிப்பு காரணமாக ஆளனிச் செலவுகள் 1,068 மில்லியனால் அதிகரித்தன. காலப்போக்கில் நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக ஏனைய செயற்பாட்டுச் செலவுகள் (பெறுமானத் தேய்வு மற்றும் பெறுமானக் குறைப்பு செலவீனம் தவிர) 12.75%ஆல் அதிகரித்துள்ளது. செலவுக் குறைப்பு முன்முயற்சிகள் மூலம் செலவுகளைக் குறைக்க வங்கி தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2024 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாதங்களில் ரூ.4,150 மில்லியன் மதிப்பிறக்க கட்டணத்தை வங்கி பதிவு செய்துள்ளது. இது 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான ரூ.13,447 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 69.14% குறைப்பு ஆகும். இதற்கு முக்கிய காரணம் மேம்பட்ட கடன் தரம் மற்றும் வலுவான மீட்பு முயற்சிகள் ஆகும். செப்டம்பர் 30, 2024 இல் முடிவடைந்த 9 மாதங்களுக்கு கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான மதிப்பிறக்க கட்டணம் ரூ.4,189 மில்லியன் (2023-ரூ.11,912 மில்லியன்) மற்றும் ஏனைய கருவிகளில் மதிப்பிறக்க மாற்றியமைத்தல் ரூ.39 மில்லியன் (2023- 1,535 மில்லியன்) ஆகும். உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் கடன் அபாய விபரம் மற்றும் வங்கியின் கடன் பிரிவின் கடன் தரம் ஆகியவை காரணமாக நிதிநிலை அறிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளில் போதுமான தன்மையை உறுதி செய்வதற்காக மதிப்பிறக்க வழங்கல்கள் இருப்பதை வங்கி உறுதி செய்துள்ளது.
வருமான வரிச் செலவுகள் ரூ. 4,015 மில்லியனாக இருந்தது. இது ஒப்பீட்டு காலத்தில் இருந்த ரூ.2,685 மில்லியனை விட 49.51% அதிகமாகும். நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி, ஒன்பது மாதங்களுக்கு ரூ. 2,544 மில்லியனிலிருந்து ரூ. 3,365 மில்லியனாக 2024இல் அதிகரித்தது. இது 2023இல் இதே காலகட்டத்துடன் 32.28% அதிகரிப்பு ஆகும். சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி ஒன்பது மாதங்களுக்கு ரூ.355 மில்லியனிலிருந்து ரூ.467 மில்லியனாக 2024இல் அதிகரித்தது. இது 2023இல் தொடர்புடைய காலத்தை விட 31.70% அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக, வங்கி 2024 செப்டம்பர் 30இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், வருமான வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ.10,608 மில்லியனை பதிவு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்த ரூ.7,181 மில்லியனுக்கு எதிராக இது 47.72% வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இதேபோல், வரிக்குப் பின்னரான இலாபம் (PAT) 2024 செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ரூ. 6,593 மில்லியனாக பதிவு செய்யப்பட்டது. இது 2023ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்தை விட 46.65% வளர்ச்சி ஆகும்.
நிதி நிலை அறிக்கை
30 செப்டம்பர் 2024 நிலவரப்படி வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 734 பில்லியனாக ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடன்கள் மற்றும் முற்பணங்கள் நிகர மதிப்பிறக்கம் ரூ.442 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் நாணயக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் (மொத்தம்) ரூ. 8 பில்லியனாக அதிகரித்த அதே வேளை வெளிநாட்டு நாணயக் கடன்கள் மற்றும் முற்பணம் (மொத்தம்) ரூ. 1 பில்லியனால் குறைந்தது. இதற்கு உள்ளூர் நாணய மதிப்புயர்வும் பங்களித்தது. செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி வாடிக்கையாளர் வைப்புத்தொகை ரூ.598 பில்லியனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் நாணய மதிப்புயர்வு காரணமாக உள்ளூர் நாணய வைப்பு ரூ. 15.47 பில்லியனாக அதிகரித்த அதே வேளை வெளிநாட்டு நாணய வைப்பு ரூ. 8.39 பில்லியனால் குறைவடைந்தது.
முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள்
செலான் வங்கியின் முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள் 30 செப்டம்பர் 2024 நிலவரப்படி ஆரோக்கியமாக இருந்தன. மூலதன போதுமான விகிதங்கள் ஒழுங்குமுறை குறைந்தபட்ச தேவைகளை விட அதிகமாக இருந்ததுடன் பொது உரிமையாண்மை படி 1 மற்றும் மொத்த படி 1 மூலதன விகிதங்கள் 12.25% மற்றும் மொத்த மூலதன விகிதம் 17.05% ஆக பதிவு செய்யப்பட்டது.
அனைத்து நாணயங்களுக்கான திரவத்தன்மை காப்பு விகிதம் மற்றும் ரூபாவிற்கான திரவத்தன்மை காப்பு விகிதம் முறையே 442.64% மற்றும் 509.82% ஆக பராமரிக்கப்பட்டது. இது ஒழுங்குமுறை குறைந்தபட்ச தேவைகளை விட அதிகமாக இருந்தது. 30 செப்டம்பர் 2024இல் வங்கியின் நிகர நிலையான நிதி விகிதம் 139.50% ஆக இருந்தது.
30 செப்டம்பர் 2024இல் வங்கியின் மதிப்பிறக்க கடன் (நிலை 3) விகிதத்தின் சொத்துத் தர விகிதம் 3.05% (2023 – 3.85%) ஆக இருந்தது. நிலை 3 வழங்கல் காப்பு விகிதம் எனக் கருதப்படும் மதிப்பிறக்க கட்டணங்களின் (நிலை 3) தொடக்கம் நிலை 3 கடன்கள் விகிதம் ஆரோக்கியமான 72.85% இல் (2023 – 68.29%) பதிவு செய்யப்பட்டது. இது தொழில்துறை சராசரியான 51% ஐ விட அதிகமாக இருந்ததுடன் வங்கியின் விவேகமான வழங்கல் நடைமுறைகளை பிரதிபலிக்கின்றது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 13.87% (2023 – 10.88%) ஆகவும், சராசரி சொத்துகளின் மீதான வருவாய் (வரிக்கு முன்னரான இலாபம்) 1.96% ஆகவும் (2023 – 1.45%) இருந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
2024 செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் வங்கியின் பங்கொன்றின் வருவாய் ரூ. 10.37 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 7.07 ஆக பதிவாகி இருந்தது. 30 செப்டம்பர் 2024இல் வங்கியின் பங்கொன்றிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ. 104.22 ஆக இருந்தது.(குழு ரூ.107.36)
2024 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த ஒன்பது மாதங்களில் 29 “செலான் பகசர நூலகங்களை” வங்கி திறந்து வைத்துள்ளது. இதன் விளைவாக இத்திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட நூலகங்களின் மொத்த எண்ணிக்கை 254 ஆக உயர்கிறது. இது நாடு முழுவதும் உள்ள சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வங்கியின் உறுதிப்பாட்டை தெளிவாகக் குறிக்கிறது.